நீட்’ தேர்வில் சென்னையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர், 439 மதிப்பெண்ணும், இன்னொருவர், 410 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.
200க்கும் மேற்பட்டவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, செப்., 12ல் நடந்தது. இதற்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. அதில், சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 710 வரை மதிப்பெண்
பெற்றனர்.
அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள், இந்த ஆண்டு மட்டும் பள்ளி கல்வி துறையால் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக, அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விபரம், அந்தந்த பள்ளிகள் வழியே வெளிவர துவங்கியுள்ளன. இதன்படி திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், நீட் தேர்வை 500 பேர் எழுதியதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை, போரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி ரசிகா என்பவர், 720க்கு, 439 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் நீட் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவியாக கருதப்படுகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி நர்மதா 410 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்கள் தவிர, 20 மாணவ, மாணவியர், 300 மதிப்பெண்களுக்கும்
அதிகமாக பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில், நீட் தேர்வுக்கான பயிற்சி, கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்டது.
நீட் மாநில ஒருங்கிணைப்பாளர்களான முதன்மை கல்வி அதிகாரி அனிதா, தலைமை ஆசிரியை பிரியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளரான முகப்பேர் கிழக்கு அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் தலைமையிலான ஆசிரியர்கள், பயிற்சி அளித்துள்ளனர்.
கொரோனா காலத்திலும் மாணவர்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’ வழியில் தினசரி தேர்வு, ‘ஆன்லைன்’ வழி பயிற்சி, வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. 439 மதிப்பெண் பெற்றுள்ள ரசிகா என்ற மாணவி, நீட் தேர்வுக்கு முன் மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சி மேற்கொண்டவர் என்பதும், இவர் தற்போது தான் பிளஸ் 2 முடித்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான கற்பித்தலும், தேர்வுக்கான பயிற்சியும் அளித்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கை, மற்ற மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது.