
நம் சமூகம் அதிக அக்கறை கொடுத்து கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் பற்றி ஜெய்பீம் திரைப்படம் பேசியிருக்கிறது. ஆனால், அவற்றின் உண்மைக் காரணங்களை அது துளியும் கணக்கில் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சம்பந்தமே இல்லாமல் மொழி, ஜாதி, மத வன்மத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. எனவே பேசா விஷயத்தைப் பேசிவிட்ட ஒரே காரணத்துக்காக அந்தத் திரைப்படக் குழுவை எந்தவகையிலும் பாராட்டவே முடியாது.
போலீஸ் அராஜகம் என்பது இவர்களுக்கு மட்டுமே நடக்கும் கொடுமை இல்லை. எனவே அதுபற்றி இந்தப் படம் சார்ந்து பேச எதுவும் இல்லை. யாராக இருந்தாலும் அடிக்கக்கூடாது; சிறையில் அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமரா முழு நேரமும் பொருத்தப்பட்டிருக்கவேண்டும்; முதல் தகவல் அறிக்கை பதிவானால் எப்படியாவது தீர்வு கண்டுபிடிக்கப்பட்டாகவேண்டும் என்ற விதிமுறையை மாற்றவேண்டும் என சில பொதுவான வழிகளைச் சொல்லலாம்.
காவல்துறை (குறிப்பாக உயர் அதிகாரிகள்] எம்.எல்.ஏ., எம்.பி., கவுன்சிலர் என அரசியல் பிரமுகர்களிடமிருந்து கணிசமான தொகையைச் சேகரித்து திருட்டு பொருட்களுக்கு ஈடுகட்டச் சொல்லலாம்.
நரிக்குறவர், இருளர், குரும்பர் போன்ற மலைவாசி, வனவாசி சமூகங்களின் உண்மைப் பிரச்னை என்பது மிகவும் பெரியது.
உண்மையில் இவர்கள் எல்லாம் வயலும் வயல் சார்ந்த சமூக அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள் (மீனவர்களும் இவ்வகையானவர்களே. ஆனால், அவர்கள் ஓரளவுக்கு பிற தொலைதூர சமூகங்களைவிட நிலவுடமை சமூகங்களுக்கு நெருக்கமானவர்கள்].
பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பாக இவர்கள் தத்தமது வாழிடங்கள், இறை நம்பிக்கைகள், மொழி, தொழில்கள் ஆகியவற்றில் எந்தவித பேரரச அதிகார மையத்தின் ஒடுக்குமுறைகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்தவர்கள். இது போன்ற எந்தவொரு சமூகக் குழுவுமே (இந்து சமூக அளவில் ஜாதிகளுமே] வெளியில் இருந்து எந்தவொரு ஆதிக்க சக்தியும் ஆக்கிரமிக்காதவரை தமக்கான வாழ்க்கையின் லாப நஷ்டங்களோடு தமக்கான மதிப்பீடுகளோடு சுதந்தரமாக வாழ்ந்துவந்தவர்களே.
கிறிஸ்தவம் தனது ஒற்றை இறைக் கொள்கையின் மூலமும் பொருளாதார, சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு அராஜகங்கள் மூலமும் உலகை அடிமைப்படுத்த ஆரம்பித்தபின்னர் ஆஸ்திரேலியா, ஆஃப்ரிக்கா, அமெரிக்கா என பெரும் கண்டங்களில் இருந்த பூர்வ குடிகள் அனைவருமே மிகக் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டனர். இந்த அழித்தொழிப்புக்கு கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய இரண்டு முக்கிய ஆயுதங்களில் ஒன்று கல்வி. அதாவது கிறிஸ்தவக் கல்வி.
ஜெய் பீம் திரைப்படம் முன்வைக்கும் மீட்சியான கல்வியும் இப்படியானதுதான். இன்னும் உடைத்துச் சொல்வதென்றால் இந்தப் படத்தின் வெளியீட்டின்போது தயாரிப்பாளர் தூக்கிக் கொடுத்திருக்கும் ஒரு கோடி என்பது மதமாற்றும் நோக்கத்தை மட்டுமே கொண்ட ஒரு கிறிஸ்தவ நிறுவனத்துக்குத்தான் தரப்பட்டிருக்கிறது. உண்மையில் இனிமேல் அந்தக் குழந்தைகள் பைபிள் படிக்க ஆரம்பிப்பார்கள். இந்தப் படத்தின் இறுதிக் காட்சியானது அந்தக் குழந்தை பைபிளைப் படிக்க ஆரம்பிப்பதாகக் காட்டுவதன் நாசூக்கான வடிவம்தான் இது.
இந்து சமூகத்திலும் மன்னர்கள் இந்த தொலைதூர சமூகங்களுடைய வாழ்வியலில் ஊடுருவியதுண்டு. காடுகள் விளை நிலங்களாக்கப்பட்டபோது இந்த வனவாசி, மலைவாசிகள் நிச்சயம் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பார்கள். ஆனால், கிறிஸ்தவ காலனி அராஜகத்தை ஒப்பிடுகையில் இந்து மன்னர்களின் நடவடிக்கைகள் மிகவும் மிதமானவை.
இந்து சனதன தர்மம் ஒவ்வொரு சமூகக் குழுவையும் அவர்களுடைய கலாசாரம், தொழில், வாழ்க்கை மதிப்பீடுகள் இவற்றோடு அங்கீகரிக்கும் குணம் கொண்டதாக இருந்ததால் உலகில் இந்துஸ்தானில் மட்டுமே பூர்வ குடிகள் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்புவரைகூட தமது வாழிடங்களில் தமக்கான சுய உரிமைகளுடன் அடையாளங்களுடன் வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.
இன்று இருளர், குறவர், குரும்பர் போன்ற சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்பவை பிரிட்டிஷ் பாணி அதிகார வர்க்க அரசமைப்பின் பின்விளைவுகள்மட்டுமே. அதிலும் தமிழகம் என்பது திராவிட இயக்கம் என்ற பெயரில் பிரிட்டிஷ் அடிவருகளால் ஆரம்பிக்கப்பட்டு இந்துவிரோத-இந்திய விரோத சக்திகளினால் ஆட்டுவிக்கப்பட்டு வந்த மாநிலம். நாகாலந்து போன்ற கிறிஸ்த மாநிலத்துக்கும் காஷ்மீர் போன்ற இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்குள்ளான மாநிலத்துக்கும் சற்றும் குறையாத வகையில் சனாதன வேரில் இருந்து துண்டித்துக் கொண்டவர்களால் வழிநடத்தப்படும் மாநிலமே.
குரும்பர், இருளர், குறவர் இனத்தினர் இன்றும் வேட்டையாடுதல், பாம்பு பிடித்தல், தேன், ஊசி, பாசி விற்பனை என்றுதான் வாழ்க்கையை ஓட்டிவருகிறார்கள். இவர்களை கோவில் அன்னதான மண்டபங்களில் மட்டுமல்ல பிற உணவு விடுதிகள், மத்திய, மாநில அலுவலகங்கள் , பள்ளிகள், அமைச்சரவைகள், சட்டசபைகள் என எங்குமே நாம் பார்க்கவே முடிவதில்லை. ரயில்களில் கூட மிக சமீப காலம் வரை இருக்கைகளில் அமர்ந்து இவர்கள் பயணித்ததில்லை.
இவர்களுக்கு வேறு எந்த வேலையைச் செய்யவும் நம் ஒட்டு மொத்த சமூகமும் அனுமதித்திருக்கவில்லை. இவர்கள் கையிலிருந்து ஒரு கவளம் உணவை எந்த முற்போக்கு நாயும் வாங்கிச் சாப்பிட்டதில்லை.
இருளர், குரும்பர், குறவர் போன்ற சமூகங்களின் இன்றைய துரதிஷ்டவசமான நிலைக்கு முழுக் காரணமும் நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கமே. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பத்து விஷயங்களைப் பட்டியலிட்டால் அதில் முதலிடத்தில் இவர்களுடைய வேதனையும் ஒடுக்குமுறையுமே இருக்கும். இது முழுக்க முழுக்க திராவிட அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட/நடத்தப்பட்டுவரும் கொடூரங்களே.
உண்மையில் இந்தத் திரைப்படத்தில் இது தொடர்பான விமர்சனம் ஒரு காட்சியிலாவது வந்திருக்கவேண்டும். இந்த வழக்கு தொடர்பாக கதாநாயகி அலையும் போது திராவிட இயக்கத்தின் முப்பெரும் விழா கோலாகலமாக நடப்பதாகவும் அவர்களுடைய முப்பெரும் தலைவர்களின் சுவரொட்டி மீது கதாநாயகி வெற்றிச் சாறைத் துப்பிவிட்டுச் செல்வதுபோலவும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கவேண்டும். அப்படி எதுவும் இல்லாததென்பது ஈழப் பிரச்னை பற்றிய படத்தில் சிங்களப் பேரினவாதம் பற்றி சிறு குறிப்பு கூட இல்லாமல், ஏதோ ஒரு ராணுவ வீரன் செய்துவிட்ட தவறுபோல் சித்திருப்பதற்குச் சமமானதுதான். அது சரி… அந்த திராவிட ஆதிக்க சக்தியின் அடியாள் வேறு எப்படிப் படம் எடுக்க முடியும்?
இந்தக் கொடுமைக்கு இரண்டாவது முக்கிய காரணம் யார் என்று பார்த்தால், இதுபோன்று நடக்கும் அநீதிகள், குறிப்பாக போலீஸ் அராஜகங்கள் குறித்து முழுவதும் தெரிந்த பின்னரும் இந்த் திராவிட கட்சிகளுக்கு எடுபிடியாகச் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.
எளிய மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டல்களில் முன்னணியில் இருப்பது திராவிடப் பண்ணையார்களும் திராவிடக் கார்ப்பரேட்களும்தான் என்பது தெரிந்த பின்னும் அவர்கள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கு கம்யூனிஸ்ட்கள் வாலாட்டிவருகிறார்கள். அதே திராவிடக் கட்சிகளின் போலீஸ் அராஜகம், ஊழல், நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றைப் பற்றி முழுவதும் தெரிந்த பின்னரும் அவர்கள் காலடியிலேயே விழுந்து புரள்கிறார்கள்.
ராஜாக்கண்ணு விவகாரம் தொடங்கி தமிழகத்தில் நடக்கும் போலீஸ் அராஜகங்களை எதிர்த்துப் போரடும் எளிய கம்யூனிஸ்ட்கள் வணங்கத் தக்கவர்களே. ஆனால் அவர்கள் அப்பாவிகள். தமது தியாகமும் போராட்ட குணமும் மிக மோசமாக பேரம் பேசப்படுவது குறித்து எந்தவொரு புரிதலும் இல்லாமல் இருந்துவருகின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இயக்கத்தின் பொலிட்பீரோ மேல் மட்ட ரெளடிகளுக்கும் களத்தில் போராடி காவலர்களின் தடியடி முதலியவற்றை ஏற்றுக் கஷ்டப்படும் உண்மையான கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு. சுதந்தரத்துக்காக உயிரைக் கொடுத்த திருப்பூர் குமரன் போன்றவர்களுக்கும் இன்றைய பெயில் வண்டி காங்கிரஸுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது.
அதோடு, கம்யூனிஸ்ட்களின் இப்படியான எளிய மக்கள் பக்கத்தில் இருந்து செய்யும் போராட்டங்கள் எல்லாம் மாவோயிஸ-நக்சலிச தீவிரவாதத்தை நோக்கிய பயணத்தின் முதல் கட்டம் என்பதால் இதை எந்த வகையிலும் சாதகமான அம்சமாகப் பார்க்கவே முடியாது. அடிபட்ட ஆட்டுக்கு மருந்துபோடும் கசாப்புக்கடைக்காரனை அந்த ஆட்டின் மீதான கருணை கொண்டவனாகப் பார்க்க முடியுமா என்ன.
அப்படியாக, கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு காவல்துறை அராஜகம் பற்றி முழுக்க முழுக்க தெரிந்த பின்னரும் அதற்குக் காரணமான திராவிட அரசியல் கட்சிகள் மீது ஒரு விமர்சனம் கூட இதுவரை வைத்தது கிடையாது. அல்லது திராவிட கட்சிகளின் அனுமதி பெற்றுவிட்டு அதை ஒப்புக்குப் பேசும் கயமைக் கூட்டாளிகளாகவே இருந்துவருகிறார்கள்.
மிகச் சிறந்த உதாரணம் சந்துரு என்ற முன்னாள் க்ரிமினல் ஜட்ஜ் (ஜட்ஜ் மட்டுமே முன்னாள் ஆகியிருக்கிறது]. திராவிட கட்சிகள் மீது இன்றும் எந்தப் பெரிய விமர்சனமும் வைப்பதில்லை.
இந்தப் பிரச்னையில் மூன்றாவது குற்றவாளி யார் என்று பார்த்தால் அது இந்து இயக்கங்கள்-இந்துத்துவர்கள்தான். வனவாசி கல்யாண் போன்ற அமைப்புகள் மூலமாக தேசத்தின் பல தொலைதூர – சென்று சேர கடினமான பகுதிகளில் உயிரைக் கொடுத்து சேவை செய்துவருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அவர்களின் செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.
வனவாசிகள் மதம் மாறிவிடுவார்கள் என்ற அச்சத்தினால்தான் அந்த சேவைகளைச் செய்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. மத மாற்றும் சக்திகள் மட்டும் என்ன அன்பினாலா அந்த சேவைகளைச் செய்கிறார்கள். அதைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளும் அப்படி அரசியல் சாயம் கொண்டவையாக இருப்பதை எப்படித் தவிர்க்க முடியும்.
எனவே இந்துத்துவ இயக்கங்களின் இந்த சேவை – அரசியல் பணிகளை நிச்சயம் விமர்சிக்கவே முடியாது. ஆனால், அவர்கள் இதை தமிழகம், கேரளா போன்ற பகுதிகளில் பெரிய அளவில் முன்னெடுக்கவருவதே இல்லை. இந்தப் பகுதிகளில் எல்லாம் மத மாற்ற சக்திகள் வடகிழக்கு மாநிலங்கள், ஒரிஸ்ஸா போன்ற பகுதிகளைப் போல் இல்லை என்பதால் இந்துத்துவ சக்திகள் அதிக அக்கறை காட்டுவதில்லை.
குறிப்பாக தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் இந்த ஒடுக்குமுறையை அலட்சியத்தை சமூக அநீதியை அம்பலப்படுத்துவதில் தீவிரமாக இறங்கினால் அந்த விளிம்பு நிலை மக்களுக்குப் பெரும் விடுதலையாக இருக்கும்.
அரசியல் ரீதியாகப் பார்த்தால், மக்கள் மத்தியில் நிச்சயம் நல்ல பெயர் எடுக்க முடியும். ஆனால் அவர்களோ திராவிட அரசியலுக்கு இணக்கமாக நடந்துகொண்டு ஈ.வெ.ராவின் சமூக சீர்திருத்தங்களைப் புகழ்ந்து பேசுவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள்.
இருளர்கள், குரும்பர்கள், நரிக்குறவர்கள் போன்றவர்கள் பெரிய வாக்குவங்கி சமூகங்களும் அல்ல. எனவே இவர்களுக்குக் குரல் கொடுக்க அவர்களும் ஆர்வம் காட்டவில்லை. அதிலும் நரிக் குறவர் சமுதாயமானது எம்.பி.சி.யில் சேர்க்கப்பட்டிருப்பதெல்லாம் ஒருபோதும் நியாயப்படுத்தவே முடியாத விஷயம்.
ஆக போலி சமத்துவம் பேசி ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட இயக்கங்களாலும், கூடவே இருந்து குழிபறித்துவரும் கம்யூனிஸ இயக்கங்களாலும், ஆதரவுக் கரம் நீட்டியிருக்கவேண்டிய இந்துத்துவ சக்திகளினாலும் ஒரு சேரக் கைவிடப்பட்டவர்கள் இவர்கள்.
கிறிஸ்தவ மத மாற்ற சக்திகள் எந்த ஒரு சிறு வாய்ப்பையும் விடுவானேன் என்று இங்கும் செயல்படப் போகிறார்கள். ஏற்கெனவே ஓரளவுக்கு ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படமும் இயக்குநர் தந்த ஒரு கோடியும் நல்லதொரு அறுவடையை விரைவில் அவர்களுக்குத் தரும்.
ஏற்கெனவே குறவர் ஜாதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவரை அழைத்துவந்து தெளிவான திரைக்கதையுடன் நாடகம் ஆரம்பித்தாயிற்று. நரேந்திர மோதியினால்தான் நங்கள் 2000 ஆண்டுகளாக நாடோடிகளாக அலைகிறோம் என்று 2024 தேர்தலில் சூறாவளிப் பயணம் செய்யவும் வாய்ப்பு உண்டு.
இந்தப் படம் அந்த இலக்குடன் தெளிவாகத் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டதுதான். ஒரு கேலண்டரை வைத்து ஒட்டு மொத்த கவனத்தையும் அந்தப் பக்கம் திருப்பி கூடவே அதற்கு அவர்கள் பாணியிலான சமரசமும் கண்டுவிட்டிருக்கிறார்கள்.
இந்துத்துவர்கள் செய்ய வேண்டிய நியாயமான விஷயங்கள் இதில் நிறைய இருக்கின்றன. இந்த விளிம்பு நிலை மனிதர்களைச் சரியான ஜாதி அடுக்கில் சேர்த்தல், ஜாதிச் சான்றிதழ் எளிதில் கிடக்கச் செய்தல், சமூக நலத்திட்டங்களில் சேர்ப்பது, உணவு விடுதிகள் அமைக்க நிதி வழங்குதல், காவல்துறை சீர்திருத்தம், திராவிட இயக்கங்களின் ஃபாசிஸ முகத்தை அம்பலப்படுத்தும் நிகழ்வுகளை எந்தவித திரிபும் சமரசமும் இன்றி திரைப்படங்களாக எடுப்பது என நிறையச் செய்யவேண்டியிருக்கின்றன.
எதிர் முகாம் தனது இலக்குக்கு உகந்த வகையில் இந்தப் படத்தை எடுத்துவிட்டிருக்கிறது.
வேதனையின் பள்ளத்தில் விழுந்துகிடக்கும் நமது சகோதரர்களின் மீட்சிக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?
பொய்களின் முதுகில் ஏறிப் போலிகள் உலகை வலம் வந்து விட்டனர்.
உண்மையின் கை பிடித்து நாம் எப்போது எடுத்து வைக்கப் போகிறோம் … முதல் காலடி?
- பி.ஆர். மகாதேவன்