கண்டிக்க வேண்டியவர்களே தவறு செய்யலாமா?!
~ அ. ஓம் பிரகாஷ் ~
Centre for South Indian Studies, Chennai
“தமிழ் தாய் வாழ்த்து” இயற்றிய “மனோன்மணியம் சுந்தரனார்” பெயரில், தமிழகத்தில் உள்ள திருநெல்வேலியில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்” இயங்கி வருகின்றது.
1990 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, கல்வி அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த பல்கலைக்கழகத்தில், நேரடியாக 2400 மாணவர்கள், கல்வி கற்று வருகின்றனர். இதனுடன், 91 கல்லூரிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலமாக, 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவ – மாணவியர்களும், அஞ்சல் வழிக் கல்வி மூலமாக 40 ஆயிரம் மாணவ – மாணவியர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய கருத்தரங்கு :
2021 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி, “சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு ஆய்வு மையம்” மற்றும் “சமூகவியல்” (Sociology) துறை இணைந்து, “சமூக நீதி மற்றும் அறிவொளி”யின் சார்பாக, “பெரியாரும் இஸ்லாமும்” என்ற தலைப்பில், இரண்டாவது தொடரின் கருத்தரங்கு நடத்தியது.
அதில், கலந்து கொண்டு பேசியவர், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” (Popular Front of India) அமைப்பின் நாளிதழான, “புதிய விடியல்” பத்திரிக்கையின் இணை ஆசிரியர், ரியாஸ் அகமது அவர்கள்.
“பாப்புலர் ஃப்ரண்ட்” என்பது, காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆளும் ஜார்கண்ட் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு.
இந்து அமைப்புகளுக்கு அனுமதி மறுப்பு :
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, இந்து அமைப்புகள் உள்ளே நுழைந்த போது, காவல் துறையினர், பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கவில்லை. அழைப்பிதழில் அனைவரும் பங்கேற்கலாம் என இருந்த போதும், இந்து அமைப்புகளுக்கு மட்டும் கலந்து கொள்ள ஏன் அனுமதி வழங்கப் படவில்லை? என்ற கேள்விக்கு, முறையான பதிலை யாரும் அளிக்கவில்லை.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உருவான விதம் (PFI) :
1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி, சர்ச்சையாக இருந்த “பாபர் கட்டிடம்” இடிக்கப் பட்டதைத் தொடர்ந்து,
கர்நாடகாவில் இயங்கி வந்த “கர்நாடக கண்ணிய மன்றம்” (Karnataka Forum for Dignity) என்ற அமைப்பும், தமிழகத்தில் இயங்கி வந்த “மனித நீதிப் பாசறை” என்ற அமைப்பும், கேரளாவில் இயங்கி வந்த “தேசிய அபிவிருத்தி முன்னணி” (National Development Front of Kerala) என்ற மூன்று இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று சேர்ந்து, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” (PFI) என்ற ஒரு புது அமைப்பை தோற்றுவித்தது.
பின்னர், கோவாவைச் சேர்ந்த “குடிமக்கள் மன்றம்”,
ராஜஸ்தானைச் சேர்ந்த “கல்வி மற்றும் சமுதாய சமூகம்”,
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த “நகரிக் அதிகர் சுரக்ஷா சமிதி”,
மணிப்பூரைச் சேர்ந்த “லிவிங் சமூக மன்றம்”,
ஆந்திராவைச் சேர்ந்த “சமூக நீதிக் கழகம்” போன்ற அமைப்புகள், இதனோடு இணைந்தன.
இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக, SDPI என்று அழைக்கப் படும் “இந்திய சமூக ஜனநாயக கட்சி” (Social Democratic Party of India), 2009 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 21 ஆம் தேதி அன்று, தொடங்கப் பட்டு, எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகின்றது.
PFI மீது உள்ள சில குற்றச்சாட்டுகள் :
கேரள உயர் நீதிமன்றத்தில், 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயற்பாட்டாளர்கள் 27 அரசியல் கொலைகள், 86 கொலை வழக்குகள் மற்றும் 125 க்கும் மேற்பட்ட வகுப்புவாத உணர்ச்சிகளைத் தூண்டும் கலவரங்களில், ஈடுபட்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது, பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “லவ் ஜிகாத்” போன்ற செயலில் PFI ஈடுபட்டது, நிரூபணம் ஆகி உள்ளது.
100 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை :
“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா”வின் மாணவர் அமைப்பான, “கேம்பஸ் ஃப்ரண்ட்” அமைப்பின் பொதுச் செயலாளர், கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ரவூப் ஷெரீஃப்.
அமலாக்கத்துறை ரகசியமாக கண்காணித்ததில், அளவுக்கு அதிகமான பணத்தை மூன்று வங்கிகளில், ரவூப் ஷெரீஃப் முதலீடு செய்து வருவதை, அறிந்து கொண்டது. 100 கோடிக்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப் பட்டது, கண்டு அறியப் பட்டது.
இந்தப் பணம், “குடியுரிமை சட்டத் திருத்த” (CAA) போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப் பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும், அமலாக்கத் துறை தெரிவித்தது. டெல்லி, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (CAA) எதிரான கலவரங்களில், PFIயின் தொடர்பும், அதன் அரசியல் பிரிவான SDPI யின் தொடர்பும், கண்டு அறியப் பட்டு உள்ளது.
இது போன்ற பல சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” இயக்கத்தை, தடை செய்ய வேண்டும் என, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது போன்ற அபாயகரமான, பல குற்றப் பின்னணியைக் கொண்ட PFI அமைப்பை வைத்து, கருத்தரங்கை ஏன் நடத்த வேண்டும் என்ற கேள்விக்கு, இது வரையில் யாரும் பதில் அளிக்கவில்லை. பல போராட்டங்களை நாட்டுக்கு எதிராக தூண்டி விடுவதாக, குற்றம் சாட்டப்பட்ட ஓரு இயக்கத்தைக் கொண்டு, கருத்தரங்கு நடத்துவதன் மூலம், சமூகத்தில் பதட்டத்தை உருவாக்க முயல்கிறார்களோ? என்ற சந்தேகத்தை, சமூக ஆர்வலர்கள் பலர் எழுப்பி வருகின்றனர்.
இந்து அமைப்புகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப் பட்டதன் மூலமாக, இது போன்ற சந்தேகம் மேலும் வலுப் பெறுவதாக, இந்து அமைப்புகள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
பேச்சாளர் ரியாஸ் அகமது அவர்கள், நல்ல கருத்துக்களைக் கூறுவதாக இருந்தால், இந்து அமைப்புகளுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டது?
அவரின் பேச்சைக் கேட்க, இந்து அமைப்புகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப் பட்டதன் மூலம், அங்கு என்ன பேசினார், ஏதேனும் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில் பேசினாரோ? என்ற ஐயமும், மக்கள் மனதில் எழுகின்றது.
இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 8 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த “பெரியாரும் பெண்ணியமும்” என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தெரிவித்து உள்ளார்.
மேலும், பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “பல்கலைக்கழக வளாகத்தில், இனி துறைகள் சார்பில் நடைபெற இருக்கும் கருத்தரங்கிற்கும், பயிற்சிப் பட்டறை போன்றவற்றிற்கும், முன் அனுமதி பெற வேண்டும் எனவும், நிகழ்ச்சி அழைப்பிதழில் பங்கேற்பவர்கள் விபரம், எதற்காக இந்த கருத்தரங்கு நடத்தப் படுகின்றது போன்ற விபரங்களை, நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்னரே தெரிவித்து, அனுமதி பெற்ற பின்னரே, கருத்தரங்குகள் இனி நடத்தப் பட வேண்டும் எனவும் அறிவிக்கப் பட்டு உள்ளது.
கண்டிக்க வேண்டிய பல்கலைக்கழகமே, அனுமதி அளித்தது தவறான முன் உதாரணமாக அமைந்து உள்ளது. அமைதிப் பூங்காவான தமிழகத்தில், சமூக விரோதிகளின் பேச்சின் மூலம், எந்த ஒரு வன்முறையும், நிகழாமல் இருக்க வேண்டும் என்பதே, பொது மக்களின் நலன் விரும்பும், அனைவரின் எண்ணமாக இருந்து வருகின்றது.