
ட்விட்டர், வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை வழங்குவது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இப்பயிடிருக்க, தற்போது பணம் செலுத்தி பயன்படுத்தும் வகையில் ட்விட்டர் புளு என்ற சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்த சேவை அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த ட்விட்டர் புளு வசதியால், நாம் ட்வீட் செய்த பிறகும் கூட அந்த ட்வீட்டை திருத்தம் செய்திட முடியும், விளம்பரங்கள் இல்லாமல் செய்திகளை படிக்க முடியும் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புதிய வசதியானது, பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, பணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை ட்விட்டர் அறிமுகப்படுத்தி வருகிறது. வருவாயை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
அந்த வரிசையில், ஜூனில் ட்விட்டர் புளு குறித்த தகவலை வெளியிட்டது. ட்விட்டர் புளு மூலம் பயனர்கள் வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், ரோலிங் ஸ்டோன், தி அட்லாண்டிக் உள்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் செய்திகளை விளம்பரமில்லாமல் படிக்க முடியும்.
இதன் மூலம், நீங்கள் படிக்கும் பத்திரிக்கைகளுக்கு நேரடியாக சந்தா பணம் ட்விட்டர் நிறுவனத்தால் செலுத்தப்படுகிறது.
மேலும், ட்விட்டரில் பின்தொடரும் நபர்களால் அதிகளவில் பகிரப்பட்ட கட்டுரைகளைப் பற்றி தெரிவிக்கும் ஸ்க்ரோல் சேவையான நசலை தவறவிட்டகளுக்கு மீண்டும் அத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஸ்க்ரோலை வாங்கியபோது ட்விட்டர் நிறுவனம் நசல் சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் புளு சந்தாதாரர்கள் கடந்த 24 மணிநேரத்தில் தங்களது நெட்வோர்க்கில் அதிகம் பகிரப்பட்ட கட்டுரைகளை இப்போது எளிதாகப் படிக்கலாம். முக்கியமானவற்றை உடனடியாகப் பார்க்கமுடியும்.
அதே போல், அவர்களால் 10 நிமிட வீடியோக்களை பதிவேற்றம் செய்திட முடியும். சாதாரண ட்விட்டர் பயனர்களால் இரண்டு நிமிட வீடியோ மட்டுமே பதிவேற்றம் செய்திட இயலும்.
பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி இதற்கு முன்பு வரை இருந்ததில்லை. இதன் பிறகு, பயனர்கள் பதிவிட்ட ட்வீட்களை மீண்டும் திருத்தம் செய்திட இயலும். ஆனால், ட்வீட்டில் மாற்றங்களைச் செய்வதற்கு 60 வினாடிகள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும்.