
சிறப்பு ரயில் எண்களை, வழக்கமான ரயில்களுக்கான எண்களாக மாற்றும் பணிக்காக, தினமும் ஆறு மணி நேரம் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்படுன்றன .
கொரோனா ஊரடங்கால், 2020 மார்ச் இறுதியில், நாடு முழுதும் அனைத்து ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
ஜூனில் இருந்து, குறிப்பிட்ட ரயில்கள் மட்டுமே சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. இதன்பின், ஊரடங்கு தளர்வால் படிப்படியாக சிறப்பு ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வேயில், ஆறு கோட்டங்களிலும், அனைத்து ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்தன.
தற்போது, கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், தெற்கு ரயில்வே நிர்வாகம், இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தையும், வழக்கமான ரயில்களாக, நடைமுறையில் உள்ள ரயில் கால அட்டவணைப்படி இயக்க நேற்று முதல் ஏற்பாடு செய்துள்ளது.

சிறப்பு ரயில் எண்களை, வழக்கமான ரயில் எண்களாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து, தெற்கு ரயில்வே கூறியுள்ளதாவது:
தெற்கு ரயில்வேயில் 293 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு ரயில்களுக்கான எண்களை, வழக்கமான ரயில்களுக்கான எண்களாக மாற்றும் பணி படிப்படியாக நடந்து வருகிறது.
இப்பணிகள், தெற்கு ரயில்வே, ‘டேட்டா சென்டர்’ மற்றும் ரயில் டிக்கெட் கணினி முன்பதிவு மையங்களில், நேற்று இரவு 11:30 மணியில் இருந்து, 21ம் தேதி அதிகாலை 5:30 மணி வரை நடக்கிறது.
இந்த நாட்களில் இரவு 11:30 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 5:30 மணி வரை, தினமும், ஆறு மணி நேரம் டிக்கெட் முன்பதிவு, நடப்பு முன்பதிவு, ரத்து ஆகிய சேவைகள் நிறுத்தப்படும்.
எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு பயணிகள் காலை 5.30 மணி முதல் இரவு 11.30க்குள் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
இந்த நேரங்களில், ரயில்கள் போக்குவரத்து மற்றும் ரத்து குறித்த விபரங்கள், ரயில்வே பணியாளர்களால், பயணியருக்கு தெரிவிக்கப்படும். முன்பதிவை தவிர, ரயில்வே உதவி மைய எண், 139 உட்பட மற்ற அனைத்து விசாரணை சேவைகளும் தடையின்றி செயல்படும்.இவ்வாறு தெற்கு ரயில்வே கூறியுள்ளது.