
27/11/21 சனிக்கிழமை பிற்பகலில் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பதிவு செய்த டிக்கட்டை ரத்து செய்யப் போயிருந்தேன். சற்று முன்பாக 02.30 க்கே போய்விட்டேன்.
இரண்டு சிற்றுண்டி சாலைகளும் திறந்து இருந்தன.வியாபாரம் சுமாராக உள்ளது என்றும் கூடுதல் ரயில்கள் விட்டால் வருவாய் அதிகரிக்கும் என அந்த கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலைய முதல் பிளாட்பாரத்துக்கு வந்த கொல்லம் சென்னை மெயிலில் வந்த பயணிகள் கேனில் விற்கப்பட்ட டீயை வாங்கி பருகினர்.
செங்கோட்டை ரயில் நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் நிரந்தரமாக கட்டணம் கொடுத்து இருந்து வாடகை ஆட்டோ ஓட்டுபவர்களை அவர்களது ஓட்டம் எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு பரவாயில்லை என கூறினர்.
மேலும் ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள்—
1)பாலக்காட்டிலிருந்து திருநெல்வேலி செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து செங்கோட்டையில் சராசரியாக தினசரி அறுபது பேர்கள் இறங்குகிறார்கள்.
2)திருநெல்வேலியிலிருந்து பாலக்காடு செல்லும் பாலருவி ரயிலில் சராசரியாக இருபத்தைந்து பேர்கள் செங்கோட்டையில் இருந்து ஏறிச்செல்கிறார்கள்.
ஆனாலும் ரயில்வே நிர்வாகம் பாலருவி ரயில்களில் செங்கோட்டையிலிருந்து பிற ஊர்களுக்கோ/ பிற ஊர்களிலிருந்து செங்கோட்டைக்கோ இன்றளவும் டிக்கட் வழங்குவது கிடையாது.
தற்போது 25/11/21 முதல் இருவழிகளிலும் பாலருவி ரயில்களில் நான்கு முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்படுவதால் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இவ்விரு ரயில்களுக்கும் ரயிலின் நேரங்களை அனுசரித்து முன்பதிவற்ற டிக்கட்டுகள் வழங்க மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.
அதே போல முன்பதிவு ரிசர்வேஷன் டிக்கட்டுகளும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு டிக்கெட்கள் வழங்கப்படாமல் போவதால், தென்காசி ரயில் நிலையம் சென்று டிக்கெட் வாங்க வேண்டியுள்ளது. இதனால் செங்கோட்டை ரயில் நிலையத்துக்கான வருவாய் அளவு குறைகிறது, குறைத்துக் காட்டப் படுகிறது. எனவே செங்கோட்டை ரயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸுக்கு ரயில் நிறுத்தம் அறிவித்து, டிக்கெட் வழங்கினால் செங்கோட்டை ரயில் நிலைய வருடாந்திர வருவாய் அளவு உயரும். இது செங்கோட்டை வட்டார மக்களின் கோரிக்கை.
- KH கிருஷ்ணன்
(செயலர் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் முன்னாள் 2017-19 தெற்கு ரயில்வே மதுரை கோட்ட ரயில் உபயோகிப்போர் ஆலோசனைக்குழு உறுப்பினர்)