ஹிந்து மத பண்டிகை நாட்களை, அரசு விடுமுறை நாள் என குறிப்பிட்டு, தி.மு.க.,வினர் வெளியிட்ட காலண்டருக்கு எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் மற்றும் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சந்திரசேகரன். இவர் 2022ம் ஆண்டுக்கான தினசரி காலண்டரை வினியோகித்துள்ளார்.
அதில் தலைவர்கள் பிறந்த நாள், மறைந்த நிர்வாகிகளின் நினைவு நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால், ஹிந்து பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாள் என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே நேரம், பிற மத பண்டிகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்வேல் கூறியதாவது: ஹிந்துக்கள் பண்டிகையை அரசு விடுமுறை நாள் என குறிப்பிடும் இந்த பகுத்தறிவாதிகள், அதே காலண்டரில் மனையடி சாஸ்திரம், வாஸ்து நாள், சுபமுகூர்த்த நாள், ஓரைகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர்.
தி.மு.க.,வினர், தங்கள் ஒவ்வொரு செயலிலும், ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று வெளிக்காட்டி வருகின்றனர்.
ஹிந்துக்களின் ஓட்டுகளை வாங்காமல் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும். உடனடியாக காலண்டரில் திருத்தம் செய்து வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.