
திரையுலகில் பணிபுரியும் தினசரி திரைப்பட தொழிலாளர்கள் பலரும் படப்பிடிப்புகள் இல்லாததால், வேலை, வருமானம் இன்றி வீட்டிலேயே இருக்க வேண்டிய வந்தது.
இதன் விளைவாக அவர்கள் கடும் நிதி நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர். இவற்றை மனதில் கொண்டு திரைத்துறையை சேர்ந்த பல்வேறு முன்னணி நடிகர்களும் அவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள கன்னடத் திரையுலகிற்கு, கன்னட திரையுலகில் கேஜிஎஃப் எனும் மாபெரும் சரித்திரம் படைத்த படம் மூலமாக முன்னணி நடிகராக அங்கீகரிக்கப்பட்டுள்ள நடிகர் யாஷ், செய்துள்ள காரியம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆம், அதன்படி சுமார் 3000 தினசரி தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நடிகர் யாஷ், 5000 ரூபாய் அனுப்ப முடிவு செய்துள்ளார்.
இந்த உதவி தொடர்பாக தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள யாஷ், “நாடு முழுவதும் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா எண்ணற்ற நபர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இதில் எனது சொந்த கன்னடத் திரைத்துறையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாம் தற்போது இயங்கும் இந்த மோசமான காலகட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு எங்கள் திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3000 உறுப்பினர்களுக்கு எமது செலவில் தலா 5 ஆயிரம் ரூபாயை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்துகிறேன்.
இந்த மோசமான சூழலில் வலி மற்றும் இழப்புகளை சந்தித்திருக்கும் அவர்களுக்கு இது தீர்வாகாது என்பது நான் அறிவேன்.
எனினும் இது நம்பிக்கை கீற்றாக இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் நல்ல காலம் என்ற ஒன்று பிறக்கும் என்பதற்கான நம்பிக்கையாக இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
#togetherwestand #humanity pic.twitter.com/46FYT9pThz
— Yash (@TheNameIsYash) June 1, 2021