
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மேற்கூரையில் பற்றிய தீயை அணைத்தனர்.
இன்று காலை கோயில் சந்நிதானத்தில் இருந்து பெரும் புகை கிளம்பியது. இதனை பார்த்த கோயில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கோயிலுக்கு வெளியே இருந்த மக்கள், மேற்கூரையில் புகை வந்து, தீப் பற்றியது குறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயைணப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோயிலில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத் தக்கது
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோயில். தமிழகம் , கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர்.

மாசிப் பெருந்திருவிழா இங்கே 10 நாள்கள் நடைபெறும். இந்தப் பத்து நாள் திருவிழாவைக் காண, 10 லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் இங்கே கூடுவர். மேலும், மாதந்தோறும் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே வருகின்றனர். தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் இங்கே பெரிதாக இருக்கும். இந்தக் கோயிலில் பெண்கள் பொங்கலிட்டு படையல் செய்து, அம்மனை வேண்டிக் கொள்வர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயிலில் தான் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.