தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தற்போது ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாகவும் அதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அப்போது அவர், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே, இதுவரை ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம், இனி சனிக்கிழமைகளில் நடத்தப் படும்.
மீண்டும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில், பக்தர்களுக்கான தரிசனத்துக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று குறிப்பிட்டார்.
ஏற்கெனவே பள்ளிகள் மூடப்பட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல் இனி கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் படும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.