பாதுகாப்பு குறைபாடு காரணமாக, பிரதமரின் பயணம் ரத்து செய்யப் பட்டிருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புக் குறைபாடுகள் காரணம் குறித்து பஞ்சாப் அரசு விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்தானது
பிரதமர் மோடி ரூ.42,750 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக, இன்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
தில்லி – அமிர்தசரஸ் – கத்ரா எக்ஸ்பிரஸ் வே திட்டம், அமிர்தசரஸ் – யூனா பிரிவு, முகேரியன் – தல்வாரா புதிய அகலரயில் பாதை திட்டம், ஃபெரோஸ்பூரில் பிஜிஐ சாட்டிலைட் செண்டர், கபூர்தாலா ஹோஷியார்பூர் ஆகிய இடங்களில் புதிதாக இரு மருத்துவக் கல்லூரிகளுக்கான திட்டம் என அடிக்கல் நாட்டுவதற்குச் சென்றார் பிரதமர் மோதி.
இந்நிலையில், பிரதமரின் நிகழ்ச்சி ரத்தானது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த பிரதமர், நிகழ்ச்சிக்காக புறப்பட்டபோது ஃபெரோஸ்பூர் அருகே சாலை மறியல் நடத்தப் பட்டது.
இந்த சாலை மறியல் காரணமாக, பிரதமர் மோடி 20 நிமிடம் காரிலேயே காத்திருக்க நேரிட்டது! பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் மறியலை கைவிடவில்லை! பஞ்சாப் மாநில அரசு பிரதமருக்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளடு.
மேலும், பிரதமரின் பாதுகாப்பு கருதி, வேறு வழியின்றி அவர் பங்கேற்கும் மாநிலத்துக்கான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சிகள் ரத்தானதை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் பிரதமர் நரேந்திர மோடி கான்வாய் மீண்டும் டெல்லி திரும்பியது. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி நிகழ்ந்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு, பஞ்சாப் அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி காத்திருந்த நேரத்தில், மறியலை கைவிட பேசுமாறு தொடர்பு கொண்டபோது பஞ்சாப் முதல்வர் தொலைபேசியை எடுக்கவில்லை என்று, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.