
சமூக வலைத்தளங்கள், ஃபின் டெக் ஆப்-களில் ஹேக்கர்களின் மோசடி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
என்ன தான் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டாலும், மோசடி செய்வதற்கான வழிகளையும் ஹேக்கர்கள் புதிது புதிதாக கண்டுபிடித்து வருகின்றனர்.
தற்போது யூஸர்களின் சுயவிவரங்கள் மற்றும் பணத்தை திருடும் கும்பல் தற்போது வாட்ஸ்அப்பில் தனது கைவரிசையை காட்டி வருகிறது.
உலகம் முழுவதும் செய்திகளை பகிர்ந்து கொள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப் மீது தற்போது மோசடிக்காரர்களின் பார்வை பதிந்துள்ளது.
வெறும் குறுச்செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள் மட்டுமின்றி தற்போது வாட்ஸ்அப் பணப்பரிமாற்றத்திற்கும் பயன்படுகிறது. பிற பணப்பரிவர்த்தை ஆப்களைப் போலவே வாட்ஸ்அப்பையும் ஹேக்கர்கள் மற்றும் ஏமாற்று பேர்வழிகள் குறிவைக்க ஆரம்பித்துள்ளனர்.
சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின் படி, வாட்ஸ்அப் சப்போர்ட் அக்கவுண்ட் மூலம் வாட்ஸ்அப் கணக்கிற்குள் நுழைந்து பணத்தை திருடும் மோசடிகள் அரங்கேறுவதாக பகிர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த நபர், வாட்ஸ்அப் ஆதரவுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என யூஸர்களை நம்ப வைக்கின்றனர்.
மேலும் அவர்களின் கணக்கு முடக்கப்படாமல் இருக்க சில தகவல்கள் தேவை எனக்கூறி யூஸரிடம் வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை பெறுவார்கள் என கூறப்படுகிறது.
உண்மை என்னவெனில், வாட்ஸ்அப் சப்போர்ட் அக்கவுண்ட் அதன் ஆதரவுக் கணக்கிலிருந்து யாருக்கும் செய்தி அனுப்புவதில்லை என்றும், மேலும் உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டு விவரங்களைக் கேட்காது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிறருடன் செய்திகளை பரிமாறவும், அரட்டை அடிக்கவும் பயன்படும் வாட்ஸ்அப் போன்ற செயலிக்கு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதால் எவ்வித பயனும் கிடையாது.
இந்தியா போன்ற நாடுகளில் வாட்ஸ் அப் மூலமாக ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் அல்லது UPI மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது.
ஆனால் இந்த தகவல்களும் வாட்ஸ்அப் மட்டுமல்லாது நீங்கள் பணம் செலுத்தும் எந்த நிறுவனத்தின் சர்வர்களிலும் சேமித்துவைக்கப்படுவது கிடையாது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
போலியான வாட்ஸ்அப் சப்போர்ட் கணக்கை அடையாளம் காண உதவும் மிகவும் முக்கியமான விஷயம், அந்த ஆப்ஷன் புரோபைல் போட்டோ மற்றும் பெயருக்கு கீழ் இருப்பதை நீங்கள் கண்டால் உஷாராகிவிட வேண்டும்.
அத்தகைய சப்போர்ட் அக்கவுண்டிற்கு உங்களுடைய தொடர்புகளை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதோடு, வாட்ஸ் அப்பிற்கும் புகார் அளிப்பது பாதுகாப்பானது.
வாட்ஸ்அப் யூஸர்கள் எப்போதும் பயன்படுத்தும் அடிப்படைகள் மற்றும் நடைமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். வாட்ஸ் அப் என்பது மட்டுமின்றி வேறு எந்த தளமாக இருந்தாலும் தெரியாத/நம்பத்தகாத ஆதாரங்களில் இருந்து அனுப்பப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள்,
மேலும் உங்கள் கார்டு எண் அல்லது OTP போன்ற ரகசிய விவரங்களை அத்தகைய கணக்குகளுடன் பகிராமல் இருப்பது தான் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.