விருதுநகரில் குறை தெரிவிக்க வந்த பெண்ணை வருவாய்த்துறை அமைச்சர் அடித்த வீடியோ சமூகத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கெடு கொடுத்துள்ளார்.
விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் இலவச ஆடு வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பங்கேற்றார். அந்த ஊரைச் சேர்ந்த கலாவதி என்னும் பெண்மணி, அமைச்சரிடம் மனு அளிக்க வந்தார். அவர் தனது மனுவில், “என் குடும்பம் கஷ்டத்தில் வாடுகிறது. வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.
அப்போது அந்த மனுவை வாங்கிய அமைச்சர், அந்தப் பெண்மணி தன் கஷ்டத்தைத் தெரிவித்த போது, அதே மனுவால் அப்பெண்ணின் தலையில் அடித்தார். இந்தச் சம்பவம் வீடியோவாக சமூகத் தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக.,வினர் பதில் அளித்தபோது “மனு கொடுக்க வந்த பெண் உறவினர் முறை என்பதால் அவரை செல்லமாகத் தட்டிப் பேசினார்” என்று தெரிவித்தனர்.
ஆனால் இது ஒரு ஏழைத்தாயை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ள தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.
பாஜக., தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர், பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன், அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை தமிழக பாஜக., முற்றுகையிடும்” என்று தெரிவித்துள்ளார்.