
சென்னை: தமிழகத்தில் கடந்த இரு நாள்களில் 12 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன என திமுக., அரசின் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகம் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத் தில் 15 கொலைகள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன. ஆனால்,தமிழகத்தில் கடந்த 22ம் தேதி 7 கொலைகளும், 23ம் தேதி 5 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. சில செய்திகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலைகள், ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய நாள்களில் நிகழ்ந்தவை.
மேலும் பெரும்பாலான கொலைச் சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனி நபர்களிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நிகழ்ந்தவை. ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை 940 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

2021ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 925 கொலைகளும், 2019ஆம் ஆண்டு 1041 கொலைகளும் நடந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில், 2019ஆம் ஆண்டுதான் அதிகப்படியான கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. 2019ஆம் ஆண்டு புள்ளி விவரங்களோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு 101 கொலைச் சம்பவங்கள் குறைவாகும்… என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
தமிழகத்தில் திமுக., அரசுப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக அண்மைக் காலமாக செய்திகள் அதிகம் வெளிவர தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஒன்றரை நாளில் 12 கொலைகள் நிகழ்ந்திருப்பதை சாதாரணமாக குறிப்பிட்டு, கடந்த அதிமுக., ஆட்சியில் இதே காலகட்டத்தில் அதிகம் கொலைகள் நடந்திருப்பதாக திமுக அரசின் காவல்துறை விளக்கம் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.