
வேல்முருகன், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைசெல்வன் மற்றும் பலர் மீது மேதகு ஆளுநரை பணிசெய்யவிடாமல் தடுத்ததற்காக, இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளேன் என்று, பாஜக.,வைச் சேர்ந்த வழக்குரைஞர் அ.அஸ்வத்தாமன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்:
பெறுதல்:
காவல் ஆணையர், சென்னை
வணக்கம்,
பொருள்: இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் கீழ் புகார் அளித்தல் சார்பு.
இன்று காலை தமிழக சட்டசபையில் மேதகு ஆளுநர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது வேல்முருகன், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைசெல்வன் மற்றும் பலர் ஆகியோர், ஆளுநர் அவர்களுக்கு எதிராக கும்பலாக நின்று, அவரை மிரட்டுகிற தொணியில், கூச்சலிட்டும் சத்தம் எழுப்பியும் மிரட்டல் விடுத்து அவரை பயமுறுத்தி பணி செய்ய விடாமல் தடுக்கிற எண்ணத்தோடு, அதற்கு உண்டான சைகைகளை செய்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176 ஆவது சரத்தின் படி ஆளுநருக்கு உண்டான மிக முக்கியமான பணியான ஆளுநர் உரையை நிகழ்த்தவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆளுநர் உரையை நிறுத்த வேண்டும் என்று சத்தம் எழுப்பியும் சைகைகள் செய்தும் கூச்சலிட்டும் இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் படி தண்டனை குற்றங்களாக சொல்லப்பட்டு இருக்கக்கூடிய குற்றங்களை வேண்டும் என்றே செய்தும் உள்ளார்கள்.
மேதகு ஆளுநரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 176 ஆவது ஷரத்தின் கீழ் உள்ள முக்கியமான பணியை செய்ய விடாமல் தடுக்க முயற்சி செய்துள்ளனர். இது ஷரத்து 194(2) சொல்லப்பட்டுள்ள விதிவிலக்கின் கீழ் வராது. ஆகவே உடனடியாக மேற்கூறப்பட்டுள்ள நபர்கள் வேல்முருகள், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை. சிந்தனைசெல்வன் உள்ளிட்ட மற்றும் பலர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தக்க சட்ட1 நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,.. என்று குறிப்பிட்டுள்ளார்.