
உண்மையை உள்ளபடி வெளியிடாமல், ஆட்சியாளர்களுக்கு சாதகமாக வெளியிடுவது தான் ஊடக அறமா..?, ஆவினின் அழிவிற்கு ஊடகங்களே துணை போகலாமா..?” என்று, பால் முகவர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய (26.02.2023) தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் வரலாற்றிலேயே முதல் முறையாக பால் விநியோகமானது பால் கொள்முதல் இல்லாத காரணத்தால் முற்றிலுமாக முடங்கியது. இதனால் பொதுமக்களுக்கு சுமார் 30ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் அவதியுற்றதோடு, மிகுந்த மன உளைச்சலுக்கும் உள்ளாகினர். பொதுமக்களும் ஆவின் பால் கிடைக்காமல், தனியார் பாலும் கிடைக்காமல் அல்லல்பட்டனர். இதனை தொலைக்காட்சி ஊடகங்கள் களத்தில் இருந்து உண்மை நிலவரத்தை ஆதாரபூர்வமாக ஒளிப்பதிவு செய்தும், நேரலையாகவும் செய்தியாக வெளியிட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் முற்றிலுமாக முடங்கியது என்கிற செய்தியை ஊடகங்களில் கண்ட தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரது உதவியாளர்கள் தூத்துக்குடியில் உள்ள எங்களது சங்கத்தின் மாநில நிர்வாகியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆவின் பால் தட்டுப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்கு எப்படி செய்தி கொடுக்கலாம்..? என மிரட்டும் தொணியில் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடிக்கு ஆய்விற்காக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சென்ற சமயம் தூத்துக்குடி ஒன்றியத்தின் பொதுமேலாளர் செய்தியாளர்கள் சிலரை “கவர்”(த)ந்து “சிறப்பாக கவனிப்பு” செய்ததின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் “ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாக முடங்கியது என்பது திட்டமிட்ட சதி” என்றும், வெறும் 5ஆயிரம் லிட்டர் ஆவின் பால் மட்டுமே தட்டுப்பாடு எனவும், அனைத்து பகுதிகளிலும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் சொன்ன கருத்துக்களை எடுத்துக் கொண்டு, களநிலவரத்தை தெரிந்தும் தெரியாதது போல் உண்மையை திரித்து காலை நாளிதழ்கள் சிலவற்றில் செய்தி வெளியாகியிருப்பது மக்கள் நலன் சார்ந்து செயலாற்றி வரும் பால் முகவர்களை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கி, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தை பொறுத்தவரை ஆட்சியில் இருப்பது திமுகவா..? அதிமுகவா..? என்பது குறித்தோ, ஆவின் நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளின் தனிப்பட்ட செயல்பாடுகள் குறித்தோ பார்ப்பதில்லை. அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை பொதுமக்களுக்கு எந்த சூழலிலும் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்பதிலும், ஆவின் நிறுவனம் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமாக இருந்தாலும் கூட அது மக்களின் வரிப்பணத்திலும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பில் இயங்கும் மக்கள் (சொத்து) நிறுவனமாக இருப்பதாலும் ஊழல், முறைகேடுகளாலும், நிர்வாகத்தின் மெத்தனப்போக்கினாலும் ஆவின் என்கிற கூட்டுறவு அமைப்பு அழிந்து போய் விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் செயல்பட்டு, ஆவினில் நடைபெறும் தவறுகளை, முறைகேடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஊடகங்களின் பார்வைக்கு உடனுக்குடன் கொண்டு வரும் பணிகளை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் செய்து வருகிறது. அப்படி சுயநலம் மறந்து, பொதுநலனோடு செயல்பட்டு வரும் பால் முகவர்களையும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் ஆட்சியாளர்களுக்காக ஒரு சில ஊடகங்கள் கேலிக்கூத்தாக்குவது வேதனையடையச் செய்துள்ளது.
தற்போது ஆட்சியாளர்களுக்கு வெண் சாமரம் வீசி, ஆவினில் எல்லாமே சரியாக நடப்பது போல் வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் ஒரு சில ஊடகங்கள் தான் கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் குறித்து எதிர்மறையான நான்குகால செய்திகளை தினசரி வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் ஒருசில ஊடகங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட கூடாது என தொடர்ந்து கங்கணம் கட்டிக் கொண்டு செயலாற்றுவதால் ஆவின் நிறுவனத்தின் அழிவிற்கு அவ்வாறான ஊடகங்களும் ஒரு காரணமாக அமைந்து துணை போய் விடக்கூடாது என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் இந்த தருணத்தில் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளது.