
“விமானத்தைப் பிடிக்க நேரமாகி விட்டதால், பாட்னாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லை, நேராக விமானத்தில் வந்து தான் சாப்பிட்டேன், இது தான் உண்மை” என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன், சமூகத் தளங்களில் கேலியும் கிண்டலும் தூள்பறக்க வைத்துள்ளது.
பீஹார் மாநிலம் பாட்னாவில் வெள்ளிக்கிழமை அன்று அந்த மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார், பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள மற்றும் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களைத் திரட்டி ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். மகா கட்பந்தன் என்ற பெயரில் ஏற்கெனவே பாஜக., கூட்டணிக்கு எதிராக ஒரு கூட்டணியைக் கண்டு களம் கண்டவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் திமுக., தலைவரும், தமிழக திமுக., அரசின் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டம் முடிந்த பின் அனைவரும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்கேற்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில்களை அளித்தனர். ஆனால் தமிழ் மாநில முதல்வர் ஸ்டாலின், தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் மட்டும் இதில் பங்கேற்காமல் முன்னதாகவே வெளியேறினர்.
இதன் பின்னர், சென்னை வந்திறங்கிய மு.க. ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவரங்களை தெரிவித்தார். அப்போது பாட்னாவில் செய்தியாக சந்திப்பில் பங்கேற்காமல் முன்னதாகவே திரும்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதல்வர், ‘விமானத்தை பிடிக்க எனக்கு நேரமாகி விட்டது. மதிய உணவுக்கு பின்னர் தான் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருந்தனர். எனவே மதிய உணவு கூட சாப்பிடாமல், விமானத்துக்கு அவசரமாகி விட்டது என வந்து விட்டேன். காரணத்தைச் சொல்லி விட்டுதான் வந்தேன். விமானத்தில்தான் மதிய உணவை சாப்பிட்டேன். இதுதான் உண்மை’என்று அழுத்திச் சொன்னார்.
அவர் கூறிய விளக்கம் பலரது நகைப்புக்கும் உள்ளாகியிருப்பதுடன், சமூகத் தளங்களில் கேலிக்கும் உள்ளானது. முதல்வர் ஸ்டாலின், திமுக., பொருளாளர் டி.ஆர்.பாலு உட்பட எட்டு பேர் தனி விமானத்தில் பாட்னா சென்றனர். பயணியர் விமானத்தில் செல்லவில்லை. தனி விமானத்தில் அவர்கள் சென்றதால், அவர்கள் விருப்பப்பட்ட நேரத்தில் சென்னை திரும்ப முடியும். ஆனால், பயணியர் விமானத்தில் சென்றால்தான் விமானத்தைப் பிடிக்க, குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும். தனி விமானத்தைப் பொறுத்தவரை விமான நிலையத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறதோ, அதற்கேற்ப கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்; அவ்வளவு தான். நேரக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது.
அப்படி இருக்க, பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விரும்பி இருந்தால், அவர் அங்கேயே இருந்திருக்கலாம். ஆனால் அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொள்ள அவருக்கு தயக்கம் அல்லது விருப்பமில்லாமல் இருந்திருக்க வேண்டும் அந்த காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் இப்போது சமூகத்தலங்களில் பேசப்பட்டு வருகின்றன அதே நேரம், பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்ப்பதற்காக அவர் கூறும் காரணமும் விளக்கமும் ஏற்புடையதாக இல்லை என்பதுடன், அந்தக் காரணம் தான் உண்மை என்ற ரீதியில் அழுத்தம் திருத்தமாக பேசுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
அண்மைக்காலமாக திமுகவின் இந்தி எதிர்ப்பு அரசியல் மற்றும், திமுக.,வினர் பீகார் மக்களுக்கு எதிராக கேவலமான முறையில் பேசி வரும் பேச்சுக்கள் அனைத்தும் வடக்கே ஊடகங்களால் பெருமளவில் வெளியிடப்பட்டு பீகார் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த கூட்டத்திற்கு வரும் முன்னர் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டக் பதிவு செய்து ட்விட்டர் பதிவில் ஃப்ரண்ட் ஆனது.
அதற்கு முன்பு திமுக அரசால் அமைக்கப்பட்ட கருணாநிதி நினைவுக் கோட்டத்திற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நிமிடத்தில் வராமல் தவிர்த்துவிட்ட பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் குறித்தும் கேள்வி எழுந்தால் அதற்கும் பதில் அளிக்க வேண்டி இருக்கும்.
ஹிந்தி விரோத ஹிந்து விரோத திமுக உடனான கூட்டணி குறித்து பீகார் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில் திமுகவை கூட்டணியில் வைத்துக்கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொள்வதில் நிதீஷ் குமார் மற்றும் வடமாநில அரசியல் தலைவர்கள ஆகியோரும் பெரும் சங்கடத்தை எதிர்கொள்ள நேரிடும். இந்த காரணத்தினாலேயே அவர் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து விட்டு வெளியேறியிருக்க கூடும் என்ற கருத்துக்கள் உலா வருகின்றன.