
அதிமுக., முன்னாள் எம்.பி., வா.மைத்ரேயன் தமது தொடக்க கால அரசியல் கட்சியான பாஜக.,வில் இணைந்தார்.
கடந்த 1999ல் பாஜக.,வில் இருந்து விலகிய அவர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக.,வில் சேர்ந்தார். அதிமுக., சார்பில் மாநிலங்களவை எம்பி., ஆகவும் இருந்துள்ளார். அண்மைக் காலமாக அதிமுக.,வில் அதிருப்தியில் இருந்து வந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி தில்லியில் பாஜக.,வின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார்.
மைத்ரேயன் இன்று அண்ணாமலை வகிக்கும் அதே மாநிலத் தலைவர் பதவியில் இருந்தவர்தான். அவர் மீண்டும் பாஜக.,வில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணாமலை டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் கரத்தினை வலுப்படுத்த,
@BJP4India தேசிய பொதுச் செயலாளர் திரு @CTRavi_BJP அவர்களது முன்னிலையில் நமது கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் திரு
@maitreyan1955 அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
டாக்டர் திரு @maitreyan1955 அவர்களது அரசியல் அனுபவமும், தொடர்ந்த மக்கள் பணியும், தமிழக பாஜகவிற்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. – என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
மைத்ரேயனின் அரசியல் பயணம்…
மைத்ரேயன் தொடக்க நாட்களில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.
1991ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினர் ஆனார்.
1995 முதல் 1997 வரை பாஜகவின் தமிழ்நாடு பொதுச்செயலாளராகவும்,
1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும்,
1999 முதல் 2000 வரை மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.
பின்னர் 2000ஆம் ஆண்டில் இவர் பாஜக.,விலிருந்து விலகி அதிமுக.,வில் இணைந்தார். கடந்த 23 ஆண்டுகளாக அதிமுக.,வில் இருந்து அரசியலில் பயணித்து வந்தவர் தற்போது மீண்டும் பாஜக.,வில் இணைந்துள்ளார்.
ஜயலலிதா இறப்புக்குப் பிறகு இவர் இரண்டு அணிகளுக்கும் இடையே மாறி மாறி பயணித்தாலும், ஓபிஎஸ்., ஆதரவாளராகவே பார்க்கப்பட்டார். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக., மீண்டும் இரண்டாகப் பிரிந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் அணியில் பயணித்தார். திடீரென எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் தனது ஆதரவைத் தெரிவித்தார். அங்கே போதிய முக்கியத்துவம் இல்லாததால் மீண்டும் ஓபிஎஸ்., தரப்புக்கு தாவினார்.
அண்மைக்காலமாக அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் அமைதி காத்து வந்தவர், தற்போது தனது தாய்க் கட்சியான பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.