
சீன தயாரிப்பு மொபைல் போன் ‘ரியல்மீ’ குறித்து இப்போது டிவிட்டர் பதிவுகளில் பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். ரியல் மீ- மொபைல் போனில் உள்ள தொழில்நுட்பம் வாயிலாக, வாடிக்கையாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதா என டிவிட்டர் பதிவுகளில் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
சீனாவில் ஏராளமான மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, குறைந்த விலையில் தயாராகும் இந்த மொபைல் போன்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப் படுகின்றன. இந்திய சந்தையிலும் இதன் தயாரிப்புகள் அதிகம் விற்பனையாகி, வாடிக்கையாளர்கள் பலரின் பாக்கெட்களில் அமர்ந்திருக்கின்றன.
இந்த மொபைல் போன் ரகங்களில், ரியல்மீ என்ற நிறுவனத்தின் தயாரிப்பும் உண்டு. இந்த போன்களை இந்தியாவிலும் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ரியல் மீ – RealMe மொபைல் போனில் உள்ள ஒரு தொழில்நுட்பம் வாயிலாக, அவற்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்படுவதாக டிவிட்டர் பதிவுகளில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
ரிஷி பாகேர்ஜி என்பவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது…
ரியல்மீ மொபைல் போனின், ‘செட்டிங்ஸ்’ பகுதியில், ‘என்கேன்ஸ்டு இன்டெலிஜென்ட் சர்வீஸ்’ எனப்படும், மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு சேவை என்ற தொழில்நுட்பம் உள்ளது. மொபைல் போனை, ‘ஆன்’ செய்ததுமே இந்த தொழில்நுட்பம், வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல் தானாகவே இயங்கி விடும். இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை, அது சேகரிக்கும். வாடிக்கையாளர்களுக்கு வந்த அழைப்புகள், அவர் பிறருக்கு செய்த அழைப்புகள், குறுஞ்செய்தி, வாடிக்கையாளரின் இருப்பிடம் போன்ற தகவல்களை அந்த தொழில்நுட்பம் ரகசியமாக சேகரித்து வருகிறது…. என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், ”இந்த விஷயம் கவனத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசாரிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
ஓன்ப்ளஸ் மொபைலிலும் இந்த செட்டிங்ஸ் டிஃபால்டாக உள்ளது என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார். ஜியோமி போனிலும் இப்படி ஒரு செட்டிங்க்ஸ் இதேபோல் உள்ளது என்று ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, சீன செயலிகள் மூலம் இப்படி வாடிக்கையாளர் விவரங்கள் சேகரிப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பல செயலிகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.