சனாதன ஒழிப்பு – என்ற பேனரில் நடத்தப்பட்ட மாநாட்டில், சனாதன தர்மத்தைக் காப்பதுதான் முதற்கடமை என்ற குறிக்கோளுடன் செயல்பட்டிருக்க வேண்டிய, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசியதற்கும், அவரது வாழைப்பழ கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, புதுக்கோட்டையில் இருந்து பாஜக.,வினர் 108 தோல் உரித்த வாழைப்பழங்களை அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால் 108 வாழைப்பழங்கள் அனுப்பப் படுவதை ‘மோப்பம் பிடித்த’ போலீசார் தாங்களே அதை அவர்களிடம் இருந்து பறித்துக் கொண்டு சென்றனர்.
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘சனாதனம் என்பது வாழைப்பழ தோல் போன்றது. வாழைப்பழம் தான் ஹிந்து மதம்’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘அமைச்சர் சேகர்பாபுவின் வீட்டினர், இனி கடையில் வாழைப்பழங்களை வாங்கி, தோலை உரித்து அதை கீழே போட்டு விட்டு வெறும் வாழைப்பழத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று பதில் அளித்திருந்தார்.
மேலும், சேகர் பாபு உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் இவ்வாறு பதவி விலகாவிட்டால் அனைத்து அறநிலையத்துறை அலுவலகங்களின் முன்பும் பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவித்தார்.
செப்டம்பர் 11ஆம் தேதி வரை சேகர்பாபு பதவி விலகாததால் பாஜகவினர் நேற்று மாநிலம் முழுதும் அறநிலையத்துறை அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில், நேற்று புதுக்கோட்டையைச் சேர்ந்த பாஜக., பிரமுகர் சீனிவாசன் என்பவர், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு 108 வாழைப்பழங்களை தோல் உரித்து கூரியர் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீசார், உடனடியாக அங்குச் சென்று, தோலுரித்த வாழைப்பழங்களை தாங்களே எடுத்துக் கொண்டனர். அமைச்சருக்கு அனுப்ப வைத்திருந்த வாழைப்பழங்களை போலீஸார் பிடுங்கிக் கொண்டதால் ஏமாற்றம் அடைந்த சீனிவாசன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அடுத்து, அந்த 108 வாழைப்பழங்களையும் வலுக்கட்டாயமாக போலீஸார் எடுத்துச் சென்றனர்.