நெடுந்தொலைவு ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில்களில் விற்கப் படும் உணவு, தேநீர், நீர் உள்ளிட்டவற்றையே நம்பி ஏற்க வேண்டியுள்ளது. ரயிலில் வழங்கப்படும் உணவுகள், பேண்ட்ரி கார் எனப்படும் சமையல் கேபினில் இருந்தே பெரும்பாலும் தயாரித்து வழங்கப்படுகிறது. இதற்காக கண்காணிப்பும் பலமாகத் தான் உள்ளது.
ஆனாலும், அண்மைக்காலமாக ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரமில்லாதவையாக உள்ளதாக ரயில்வே அமைச்சகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், ரயிலின் கழிவறையில் இருந்து தண்ணீர் எடுத்து டீ தயாரித்து, அல்லது கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த ரயில்வே கேன்டீன் ஊழியர் ஒருவர், ரயில் கழிவறை நீரை டீ, காபி கேன்களில் கலந்து, மற்றொருவரிடம் ஒவ்வொரு கேனாக எடுத்துக் கொடுக்கிறார்.
இந்தக் காட்சிகளை வீடியோவாக தன் செல்போனில் எடுத்த நபர், ஏன் கழிவறையில் தண்ணீர் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் சிரித்துக் கொண்டே உன் வேலையைப் பார் என்ற தோரணையில் சென்றுள்ளனர்.
இது குறித்த வீடியோவைப் பார்த்த ரயில்வே நிர்வாகம், இதை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதி ஒரு விளக்கம் அளித்துள்ளது.
அதில், தாங்கள் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவுவதைக் கண்டதாகவும், இந்த நிகழ்வு குறித்து விசாரித்ததாகவும் கூறியுள்ளது.
அதன்படி, வண்டி எண் 12759 சென்னை செண்ட்ரல் – ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ், செகந்தராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்ததாகவும், இது 2017 டிசம்பர் மாதம் நடந்தது என்றும் விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், இது குறித்து வந்த புகாரை அடுத்து உடனே விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளது.
மேலும், விசாரணையின் முடிவில், செகந்திராபாத் மற்றும் காழிப்பேட்க்கு இடைப்பட்ட ரயில் பகுதி ஒப்பந்ததாரர் பி.சிவபிரசாத் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், அவருக்கு ரயில்வே நிர்வாகம் ரூ.1,00,000 அபராதம் விதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த குறிப்பிட்ட நபரின் உரிமம் ஐஆர்டிசி மூலம் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளது.
அந்த வீடியோவில் உள்ள மற்ற இருவரும் அதிகாரபூர்வமற்ற வெளியாட்கள் என்றும், கடந்த சில மாதங்களாகவே செகந்திராபாத் ரயில் நிலையத்தில் அதிகாரபூர்வமற்ற வகையில் இயங்கி வரும் டீ விற்பனையாளர்களைக் கண்டறிந்து அங்கிருந்து அகற்றும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டதாகவும், இந்த வீடியோவில் காணப்பட்ட இருவரையும் அந்தப் பகுதியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் கூறியுள்ளது.