உலகின் முதல் போலி டாக்டர் கட்டிய மருத்துவக்கோயில்

 

 
போலிகள் எல்லா காலத்திலுமே உலகில் இருந்திருக்கிறார்கள். அதிலும் போலி டாக்டர்கள் சரித்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே மக்களை மயக்கி வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.

ஆதாரப்பூர்வமான முதல் போலி டாக்டர் ஜேம்ஸ் கிரஹாம் என்பவர்தான். பிரிட்டனைச் சேர்ந்த இவர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும், பாதியிலே படிப்பை விட்டு விட்டவர்.

அவர் வாழ்ந்த காலம் 18-ம் நூற்றாண்டு. மின்சாரம் என்ற அற்புதம் கண்டுபிடிக்கப்பட்ட புதிது. அந்த மின்சாரத்தை வைத்துத்தான் மோசடி செய்யத் தொடங்கினார். அதற்காக அமெரிக்கா பக்கம் ஒதுங்கினார். அங்குதான் மின்சாரம் பரவலாக உபயோகத்தில் இருந்தது.

மின்சாரம் மூலம் எல்லோரும் விளக்கு எரிய வைக்க, கிரஹாமோ எல்லா நோய்களுக்கும் மின்சாரம்தான் சிறந்த மருந்து என்ற புது யுக்தியை பயன்படுத்தி ஏமாற்ற தொடங்கினார். மின்சாரத்தின் சூட்சுமங்களை தெரிந்துக் கொண்டார்.

அதன்பின் 1775-ல் அமெரிக்காவிலிருந்து மீண்டும் பிரிட்டன் திரும்பினார். லண்டனில்‘மருத்துவக்கோயில்’ என்ற மாளிகை ஒன்றைக் கட்டினார். அதில் பிரமாண்டமான ஒரு அறையை உருவாக்கினார். அதற்கு ‘விண்ணுலக படுக்கை’ என்று பெயரிட்டார்.

அந்த படுக்கை 12 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. அந்த படுக்கையில் குறைந்த அளவில் அதிர்வை தரும்  வகையில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருக்கும்படி செய்தார்.

குதிரையின் வாலில் உள்ள முடியை கொண்டு மெத்தை செய்து அதன் மீது ரோஜாப்பூக்களை பரப்பி வைத்தார். அதன் மீது பட்டு விரிப்பும் விரித்தார். இந்த படுக்கையில் இருப்பவர்களை எல்லா பக்கங்களிலும் இருந்தும் பிரதிபலிக்கும் வகையில் நிலைக்கண்ணாடிகளை அமைத்தார். நறுமணம் கமழும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு, உணர்வைத் தூண்டும் வகையில் கிளர்ச்சியூட்டும் இசை அந்த அறையில் ஒளித்துக்கொண்டு இருக்கும்படி செய்தார்.

இந்த படுக்கையில் ஆணும் பெண்ணும் உறவு கொண்டால் இதுவரை அவர்கள் வாழ்வில் அடையாத உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிப்பார்கள் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கிரஹாம் விளம்பரம் செய்தார். எதிபார்த்ததைவிட விளம்பரம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

கிரஹாம் கட்டியிருந்த மருத்துவக்கோயில் முன் ஏராளமான ஆண்களும் பெண்களும் கண்களில் இன்பக் கனவுகளோடு கூடினர். போட்டிப் போட்டுக்கொண்டு அறையை முன்பதிவு செய்தனர். உறவு கொள்ள வரும் ஜோடிகளிடம் ‘எப்படி உறவுக் கொள்ள வேண்டும்?’ என்று அவர் எழுதிய புத்தகத்தையும் சந்தடி சாக்கில் விற்பனை செய்து வந்தார். கொஞ்ச காலத்திற்கு இதை வைத்தே ஓட்டினார்.

எதிர்ப்பார்த்தபடி எந்த மாற்றமும் இல்லாததால் கிரஹாமின் சாயம் வெளுக்கத் தொடங்கியது. லண்டன் வாசிகள் வெகு சீக்கிரத்திலே உண்மையை உணர்ந்தார்கள். இன்றைக்கும் கூட போலி டாக்டர்கள் ஆண்மைக்குறைவு, நீண்ட நேர இன்பம் என்ற போர்வையில்தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

ஆனாலும் முதல் போலி டாக்டரே பிரமாண்டமாக ஏமாற்றியிருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது இப்போது இருப்பவர்கள் சாதாரணமாகத் தோன்றுகிறார்கள்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.