சென்னை: திரையுலகு மூலம் அரசியல் வானுக்குள் புகுந்தவர்கள் தமிழகத்தின் திராவிட கட்சிகளின் முதல்வர்கள். அண்ணாத்துரை தொடங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என நால்வருமே திரைத்துறையில் ஒன்றாய்ப் பழகி, புகுந்து, நடித்து, நாடகம் எழுதி, நாடகமாடி, பொதுவாழ்விலும் தங்கள் நடிப்புத் திறனை, நாடக பேச்சு, எழுத்தாக்கத் திறனை விதைத்து மக்களை கவர்ந்தார்கள்.
இந்த நால்வருக்கும் உள்ள ஒற்றுமைகள் பல என்றாலும் இப்போது உள்ள ஒற்றுமை, பிற்காலத்தில் எதிரெதிர் துருவங்களாய் மாறினாலும், ஒரே வகுப்பறையில் இருந்து வெளி வந்தவர்கள். முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் பார்வையில் அக்காலத்தில் கூறியது போல், விஷக்கிருமிகள் பரவத் தொடங்கியதன் தொடக்கப் புள்ளியாய் அமைந்தவர்கள்.
சுமார் அரை நூற்றாண்டு கால… அரசியல்! சரியாக 1967ல் அண்ணாதுரை முதல் முறையாக திமுக., ஆட்சியை, திராவிடக் கழகத்தின் ஆட்சியை தமிழகத்தில் அமைத்தார். அன்று தொடங்கி, திராவிடக் கழகங்களின் ஆட்சியே இன்று வரை தமிழகத்தில் நிலவுகிறது. இந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழகத்துக்கு திராவிட இயக்கங்கள் தந்த முதல்வர்கள் நால்வரும் இன்று ஒரே இடத்தில் புதையுண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.
திராவிடர் கழகத்தின் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கொள்கைகளைக் கொண்டிருந்தவர்களாக அண்ணாத்துரை முதல்வராகத் தொடங்கி பின்னர் கருணாநிதி அவரின் முக்கிய கொள்கை பரப்பாளராகி அவருக்குப் பின் இயக்கங்கள் கண்ட எம்.ஜி.ராமசந்திரன், ஜெயலலிதா என கடைசியாகக் கொண்டு இந்த நால்வரில் இறுதியானவராக இன்று மரித்துப் போயிருக்கிறார் கருணாநிதி. இந்த நால்வருக்கும் இடம் தந்து, பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற முதல்வர்களின் மயானபுரியாக மெரினா கடற்கரை வளாகம் திகழ்கிறது. அது நாளடைவில் அண்ணா சதுக்கம் என்ற பெயரை தன்னளவில் இழந்துவிடக் கூடும்.
இந்த நால்வரில் அடுத்தடுத்து குறுகிய இடைவெளியில் இயற்கை அடைந்த ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்குள்ளும் பெரும் பகையே இருந்தது. அதுவும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இருவரின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. 1989ல் தொடங்கிய யுத்தம், இருவருக்குள்ளும் வெடித்துக் கிளம்பியது. சட்டமன்றத்தில் தன் புடைவையைப் பிடித்திழுத்து, அவமானப் படுத்தி, துச்சாதன வேலை பார்த்தவர் துரைமுருகன் என்று தலைவிரி கோலமாய் வெளியில் வந்தார் அன்றைய எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த ஜெயலலிதா.
அன்று தொடங்கி இந்த 30 ஆண்டுகளில் தமிழகம் இருவரின் ஆட்சியைத்தான் மாறி மாறிப் பார்த்துள்ளது. கருணாநிதியை எதிர்க்கவே நான் அரசியலில் இருக்கிறேன் என்றவர், இரு ஆண்டுகளுக்கு முன் மறைந்து போனார். அன்றே அதிர்ச்சியில் வாய் அடைத்துப் போய், உடல் இயக்கம் குன்றி மௌனத்தில் ஆழ்ந்து போனார் கருணாநிதி. 2016ம் ஆண்டு தேர்தலே இருவருக்கும் இறுதி உரையை எழுதிவிட்டது. ஜெயலலிதா மரித்த பின்னர் கருணாநிதி அரசியல் களத்தில் இருந்து தானே ஒதுங்கிக் கொண்டது போல் அமைந்துவிட்டது.
என்னதான் வேண்டாதவர் என்றாலும் இப்போது இயற்கையாகவே சில ஒற்றுமைகள் நேர்ந்திருக்கின்றன. ஜெயலலிதா சமாதியை எம்ஜிஆர்., அண்ணா சமாதிகளுக்கு அருகே அமைப்பதற்கு எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள் திமுக.,வினர். ஜெயலலிதா இருந்த போதும் இறந்த போதும் மனிதத் தன்மை சிறிதுமின்றி நடந்து கொண்ட திமுக.,வினருக்கு இன்றைய நாளில் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் ஜெயாலலிதாவின் சீடர்கள். கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை என்று சொன்னதற்காக, இரவோடு இரவாக ஜெயலலிதா சமாதிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் திமுகவினரால் திரும்பப் பெறப் பட்டன. கவிஞர் கருணாநிதிக்காக நீதிமன்றமே சட்டப் புத்தகத்தை மறந்துவிட்டு ஒரு கவிதை எழுதியது.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால், இன்று கருணாநிதிக்கு இத்தகைய நிலை கிடைத்திருக்காது. சொல்லப் போனால் ஸ்டாலினோ அல்லது கருணாநிதி குடும்பத்தாரோ, மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குங்கள் என்று ஒரு தொலைபேசி உரையாடலைக் கூட நடத்தியிருக்க முடியாது. அதனால்தானோ என்னவோ, ஜெயலலிதாவை காலன் முன்னேயே அழைத்துச் சென்றிருக்கிறான் என்று வியக்கத் தோன்றுகிறது!
இத்தனை இருந்தாலும், இருவரும் போனதென்னவோ ஒரே இடத்தில்தான்! இன்று மெரினா நால்வரையும் தன்னுள் இழுத்துக் கொண்டிருக்கிறது.
இருப்பினும் இன்று வியப்பதென்னவோ, ஒரு விஷயத்தில்! அண்மைக் காலத்தில் மரணித்த கருணாநிதி, ஜெயலலிதா என்ற இந்த இரு ஆளுமைக்குள்ளும் இருக்கும் ஓர் ஒற்றுமை… இறுதிச் சடங்கு குறித்தானது.
ஜெயலலிதா உறவுகள் சூழ யாருமின்றி உருக்குலைந்து போனார்..! கருணாநிதியோ உறவுகள் மட்டுமே சூழ்ந்திருக்க உறங்கப் போனார். பகுத்தறிவுப் பாசறையில் வந்த இவர்களுக்குள் பாவம் புண்ணியம் ஆன்மா நற்கதி என்றெல்லாம் பேசி ஒரு வட்டத்துக்குள் அடைத்து விடமுடியாதுதான்!
இருப்பினும் இவர்களுக்குள் இருந்த ஓர் விநோத ஒற்றுமை.. இவர்களின் இறுதிப் பயணத்துக்கு முன் பிரதமராக மோடி வந்தார். மலர் வளையம் வைத்தார்.
இறுதிப் பயண வாகனத்தை ஓட்டுவதற்கும் ஒருவரே வந்தார். அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஆர்.எம்.எம். சாந்த குமார்.!





