spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தீர்வுகள் தீர்ப்புகளாகிவிடாது! திருவாளர் திருமா... உமக்குள்ள பிரச்னை தீருமா?

தீர்வுகள் தீர்ப்புகளாகிவிடாது! திருவாளர் திருமா… உமக்குள்ள பிரச்னை தீருமா?

thirumava

“தலித் மக்கள் மதம் மாறுவது தான் தீர்வு” என்பதையும் அவர்கள் இஸ்லாமிய மதம் மாற வேண்டும் என்பதையும் வழியுறுத்தும் விதமாக தொல் திருமாவளவன் “மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் ஒரு ஆய்வு” என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு அதற்கு டாக்டர் பட்டம் பெறவுள்ளார் என்பது செய்தி.

இந்த ஆய்வுத் தகவல்கள் – அதன் முடிவில் திருமாவளவன் முன்வைக்கும் வாதம் முழுக்க குறிப்பிட்ட சமூக மக்களைத் தவறாக வழிநடத்தும் என்பதாலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அவர் கூறுகிறார் என்பதாலும் அதற்கு என் பக்க விளக்கத்தை, மக்கள் மத்தியில், முக்கியமாக குறிப்பிட்ட சமூகத்தின் மாணவர்கள் மத்தியில் முன்வைக்கிறேன்.
***
முதலில் திருமாவளவன் வெளிப்படையாகக் கூறுகிறார் இஸ்லாமில் ஜாதிய பிரிவினைகள் இல்லை என்று..! இந்தக் கூற்று தவறு.

இது இந்த தேசத்தை புரியாமல் பேசித் திரியும் திக., போன்ற இயக்கங்களின் பல கால பல்லவி. எனக்குத் தெரிந்து தெற்காசியா முழுவதுமே கூட பல உட்பிரிவுகள் எப்படி இந்துக்களில் இருக்கிறதோ அதே போல் இஸ்லாமிலும் உண்டு.

கசாப்புக் கடைக்காரர் என்று நாம் அனைவரும் கறிக்கடைக் காரர்களைக் கூறுவோம்- அந்த கசாப் என்பதே ஒரு ஜாதி அடையாளம் தான் என்பது பலருக்கு தெரிவது இல்லை. காரணம் இஸ்லாமிய மக்கள் தமிழகத்தில் 4% மட்டும் என்பதால் பலருக்கு இது விவாதமாக ஆவது இல்லை. அதனுள் இருக்கும் பிரிவுகளைப் பற்றிய தெளிவும் இல்லை. ஆனால் வட மாநிலங்களில் தெளிவாக அறிவர்.

இதைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது – இதை நான் இஸ்லாமிய மார்க்கத்தின் மத நம்பிக்கை உள்விவகாரம் சார்ந்து பேச வரவில்லை. ஆனால் இஸ்லாமில் முக்கியமாக பாக்கிஸ்தான், இந்தியாவில் உட்பிரிவுகள் பல உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை எடுத்துரைப்பதே என் நோக்கம். தவிர அது சரியா தவறா என்று அதனுள் செல்வது அல்ல.

மதம் மாறுவது அவர் அவர் விருப்பம் – அதில் தடை விதிப்பதோ தவறு என்று கூறுவதோ இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக திருமாவளவன்  தலித் மக்களை ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்று  தவறான தகவல்களைக் கூறி, எப்படி தவறாக வழிநடத்துகிறார் என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கட்டுரையை எழுத வேண்டியதாயிற்று!

***
இந்திய இஸ்லாமிய மக்களிடையே பிரிவுகள் இல்லையா?

உண்மையில் தமிழகத்திலும் ராவுத்தர், மாப்பிள்ள, பட்டாணி, துக்னி என்ற சில பிரிவுகள் மிக பிரபலமே. (மதம் மாறியவர்கள் வேண்டுமானால் இந்த அடையாளம் இல்லமால் தனியாக நிற்கலாமே ஒழிய அங்கே பிரிவுகள் உண்டு) இன்னும் சிலவற்றைப் பார்க்கலாம்!

பிகார், உபி என்று சில மாநிலங்களில் சுரிஹர்(Churihar) பிரிவு மக்கள் நகை ஆபரணங்கள் செய்வர்! சிலர் பதான் – மன்சூரி என்று பெயர் வைத்திருப்பார்கள்.  தங்கள் குடும்பப் பெயர் போல அதுகூட ஒரு குறிப்பிட்ட மேல்மட்ட வகுப்பைச் சார்ந்த இஸ்லாமிய மக்களைக் குறிக்கவே பயன்பட்டு வந்தது. உபி., ஹரியானா பாக்கிஸ்தானின் பல பகுதிகளில் நல்பந்த்(Nalband) இவர்கள் வாகனம் இழுக்கும் விலங்குகளுக்கு லாடம் செய்து கொடுக்கும் தொழிலில் உள்ளனர். (பட்டறைத் தொழிலிலும் இருந்தனர்)!

வனப் பகுதிகளில் விலங்குகள், பறவைகளை வேட்டையாடி வாழ்ந்த மிகப் பிரபலமான இஸ்லாமிய சமூகம் மிரிஷிகர்(Mirshikar). இந்தியாவின் பெரும்பாலான வணிக இடங்களில் பலம் காலத்தில் வணிகர்கள், அரச படை வீரர்கள் வந்து தங்கி செல்வதற்குத் தங்கும் இடங்கள் நடத்திய சமூகத்தின் பெயர் பாடியற(Bhatiara). இவர்கள் பெரும்பாலும் Farooq என்று அழைக்கப்பட்டு வந்தனர். ஹஜ்ஜம் (Hajjam) இவர்கள் முடிதிருத்தும் தொழில் செய்து வந்தவர்கள். இன்றும் இந்தப் பிரிவு உண்டு. பாகிஸ்தானிலும் சரி இந்தியாவிலும் சரி, மொச்சி(Mochi)  சமுகம் காலணிகள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தனர். இதிலும் நிறைய உட்பிரிவுகள் இருந்தன.

faqir இவர்கள் பெரும்பாலும் மதம் சார்ந்த சாஸ்திர சம்ரதாயங்கள் சில நம்பிக்கை களை மக்களிடம் சென்று சேர்க்கும் குழுவாக வாழ்ந்தனர். Siddi(சித்திக்) இந்தச் சமூகம் ஆப்ரிக்காவில் இருந்து இங்கே அடிமைகளாகக் குடியேறியவர்கள் என்று கூறப் படுகிறது. இவர்கள் பின்னாளில் குதிரைக் காவலர்களாக பணி செய்ததாக தகவல் கிடைக்கிறது. இன்றும் இவர்கள் தோற்றம் எளிதில் கண்டுகொள்ள முடியும். பாகிஸ்தான், இந்தியாவில் (குஜராத்) வசிக்கிறார்கள்,

தெளி(Teli) சமூகம் பரம்பரை பரம்பரையாக எண்ணெய் மண்டி வியாபாரம் செய்து வந்தவர்கள். இவர்களும் இந்தியாவின் பல இடங்களில் உள்ளனர். Barhai தச்சு வேலை செய்து வந்தவர்கள். இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. அதற்கு ஆய்வுகள் பலவும் நடத்தப்பட்டு தெளிவான தகவல்களும் உண்டு.

பெரும்பாலான இசைக் கருவிகள் செய்யும் தொழில்களில் வட இந்தியாவில் இஸ்லாமியர்களே அதிகம். அவர்களிடையே தெளிவான பிரிவுகளும் உண்டு.

இஸ்லாத்தில் தீண்டாமை இல்லவே இல்லை என்று கூற முடியாது. அப்படிக் கூறுபவர்களுக்கு தெற்காசிய வரலாறு தெரியவில்லை என்றுதான் பொருள். ஆக இது எல்லாம் வெறும் தொழில் சார்ந்த பெயரா என்றால் இல்லை… இவர்களுக்குள்ளாக ஒரு சமூக உறவு முறை இருந்தது.

இந்திய பாகிஸ்தானிய இஸ்லாமிய மக்களில், மேல்மட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் என்று தெளிவான பிரிவினை இருந்தது. இந்த உண்மையைப் பல இடங்களில் அம்பேத்கர் எடுத்துரைத்துள்ளார். உண்மையில் பல நேரமும் அவர் இந்து என்ற சமூகத்தை திருத்தவே முயற்சித்தார். முடியாத நிலையில் அவர் பாதிப்பில்லாத நிலையில் புத்தம் தழுவினார்.

அவர் புத்த மதம் தழுவியது நியாயமானதாகவே தோன்றும். இன்னும் தெளிவான சிந்தனையுடன் கூடிய முடிவு என்றும் அதைக் கூறலாம். (புத்தம் என்பது கௌதம புத்தரை மட்டும் கொண்டதல்ல – அது இந்தியாவில் தோன்றிய பல ஆன்மவியல் தத்துவங்களில் ஒன்று. 28 புத்தர்களில் பலர் பிறப்பால் பிராமண குடும்பங்களில் பிறந்தவர்கள். அதையும் நினைவில் கொள்ளவும். எனவே எதனால் அவர் புத்தம் மாறினார் என்ற தெளிவைப் பெற அம்பேத்கரைத் தேடிப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்.)

ஆக… ஜாதி ஒழிய மதம் மாறவேண்டுமா..?

மற்ற மதங்கள் ஜாதியை அங்கீகாரம் செய்யவில்லையே?! ஆனால் இந்து மதம் அங்கீகாரம் செய்கிறதே? என்று நீங்கள் கேட்டால், எதை ஜாதி என்கிறீர்? அவர் அவர் செய்யும் தொழில் கொண்டு அடையாளப்படுத்தி ஒடுக்கியதை ஜாதி என்பீர்கள்.

உண்மையில் அப்படிப் பார்த்தால் உலகம் முழுவதும் அந்த நடைமுறை இருந்தே வருகிறது. occupational surnames என்று வைத்து Smith, Potter, Cooper, Taylor, Carter, Fisher, Turner என்று பலவும் நீங்கள் இந்தியாவில் பார்ப்பதுபோல் தான். தீண்டாமை இல்லாததுபோல் தோன்றினும் ஏற்றத்தாழ்வு நிச்சயம் உண்டு.

அடுத்து … முதலில் இந்து மத வேதங்கள் ஜாதிகளை அங்கீகரிப்பது இல்லை. ஜாதி என்பதற்கும் வர்ணம் என்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

வர்ணம் பிறப்பால் வருவது இல்லை! நான்கு வர்ணமாக இந்த உலகம் இருக்கிறது. அது பிறப்பால் வருவது அல்ல! கொண்ட வாழ்வியல் முறையால் வருவது என்றார்கள் பெரியவர்கள்.

கற்பிக்கும் இடத்தில் இருக்கிறவன் பிராமணன் என்றால், இளையராஜா பிராமணர் ஆகிறார்! ரகுமான் பிராமணர் ஆகிறார்! அனைத்து ஆசிரியர்களும் பிராமணர்கள் ஆகிறார்கள்! ராணுவத்தில் உள்ளவன் அனைவரும் காவல் பணியில் உள்ள அனைவரும் சத்திரியன் ஆகிறார்கள்! ஒரு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் மாத சம்பளம் வாங்கும் எவரும் சூத்திரர் ஆகிறார். தவிர இது பிறப்பால் வருவது அல்ல.

வேதத்தின் கூற்றுப்படி நான்கு வர்ணமாக இந்த உலகம் இருக்கும். பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரன் என்று. இது குலம்.

1. இது பிறப்பால் வருவதல்ல.
2. இது வெறும் சமூக பிரிவைக் காட்டுமே தவிர இவர்கள் உயர்வானவர்கள், இவர்கள் தாழ்வானவர்கள் என்று கூறுவது இல்லை!

ஆனால் ஜாதி, பிறப்பால் அடையாளப் படுத்தப்படுவது. இதைத் தான் ஒழிக்க வேண்டும் என்று போராடுகிறோம். பிறப்பால் குறிப்பிட்டுக் காட்டப்படுவது! ஏற்றத் தாழ்வை உருவாக்கியது. இந்தத் தவறைத் திருத்த வேண்டும். ஆனால், அதற்காக மதம் மாறுவதால் என்ன நடந்து விடும்? இல்லை ஒரு ஆன்மவியலை ஒழிக்க வேண்டும் என்று பேசுவதால் என்ன நடந்து விடும்? நாளை அங்கேயும் ஏற்றத் தாழ்வு இருக்கிறதே என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன சாதிக்க முடியும்!

அட… எனக்கு இந்தக் குலமே வேண்டாம் என்று அதை ஒழிக்க விரும்பினாலும் அதுவும் தவறான முடிவாகவே அமையும்! காரணம் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உலகம் அப்படியேதான் அமையும்! எனவே இந்தக் குலத்தை சுட்டிக் காட்டவேண்டிய தேவை இன்று இல்லை. யாரும் ஆசிரியர் ஆகலாம் , யாரும் ஆட்சிக்கு வரலாம்! அது அவர் தம் தகுதிக்குக் கிடைக்கும் வேலை. சரி தானே?

அப்படித் தானே இன்று இந்தியா இருக்கிறது! யாராவது கட்டாயம் இந்தத் தொழில்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களா என்ன? ஆக இன்று நிலை மாறியுள்ளது! சமூகத் தவறுகளை சரிசெய்து நம் பெரியவர்களே அவற்றைத் திருத்தி செப்பனிட்டுள்ளனர்.

ஆனால் மனு ஸ்மிருதி தீண்டாமையை அங்கீகாரம் செய்கிறதே என்று நீங்கள் சொன்னால்… அதைக் குறித்த தெளிவான அணுகுமுறை இல்லை என்றுதான் பொருள்!

1.சுருதி (Sruti)
2.ஸ்மிருதி (smriti)

சுருதிகள் நான்கு வேதங்கள், உபநிடதங்கள், வேதாந்தங்கள், பிரம சூத்திரங்கள் என்று அடிப்படையில் எடுத்துக் கொள்ளவும். இவை எல்லாம் என்ன என்றால், இவை மனிதனுக்கு வாழ்வின் அர்த்தம், வாழ்வியல் சிந்தனைகள், ஆன்மீக தேடலை தெளிவு படுத்தும் நூல்கள். இவை தான் ஆதார அடிப்படையில் ஹிந்துக்களை வழி நடத்தும் நூல்கள். இவை கூறும் கர்மா மாறுவது இல்லை. இவை எடுத்து வைக்கும் தர்மம் மாறாது. இதில் ரிஷிகள் பலர், தங்கள் அனுபவத்தின் மூலமாக வாழ்க்கை தத்துவத்தை, நடப்பியலை முன் வைத்திருக்கிறார்கள்.

இவையே காலம் செல்ல செல்ல பிற்காலத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கியது. தீண்டாமை துளிர் விடக் காரணமானது. ஆனால் எதற்கு ஸ்மிருதியை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்? பிருகஸ்பதி ஸ்மிருதி, தக்ஷ ஸ்மிருதி, ஹாரீத ஸ்மிருதி, கௌதம ஸ்மிருதி என 18 ஸ்மிருதிகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம்  படித்தா இப்போது நாம் இந்துவாக இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகிறோம்?! இவற்றின் படி வாழ்ந்தால்தான் இந்து என்று யாராவது உங்களிடம் வற்புறுத்துகிறார்களா?

ஸ்மிருதிகள் அந்த அந்தக் காலங்களில் உருவான சட்டப் புத்தகங்கள் ன்று எடுத்துக் கொள்ளலாம். இவர் இவர் இப்படி இருக்க வேண்டும் என்று வாழ்வியல் நடைமுறையைக் கூறுவது. காலமாற்றத்துக்கு உட்பட்டவை. காலச் சூழலின் வாழ்வியலுக்கு உட்பட்டவை இதன் கட்டளைகள். இந்தக் கட்டளைகளை அப்படியே பின்பற்றினால், அது பிராமணர்களையும் கூட ஒடுக்கிறது என்பது தான் உண்மை. பிராமணர்களாயினும், அதன் நெறிமுறை வழுவினால், அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களாகவே ஒட்டு மொத்த சமூகத்தில் மாறிவிடுவர். சொல்லப் போனால், இவை  கூறும் வழிமுறைப் படி இன்று எவராலும் வாழ்க்கை நடத்த முடியாது. 100 வருடங்களுக்கு முன்னர் கறுப்பர்களுக்கு வாக்குரிமை இல்லை என்றார்கள் மேற்கத்திய நாடுகளில். இன்று அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டார்கள். அது போல் இந்தத் தவறுகள் திருத்தப் பட்டுக் கொண்டே வருகின்றன. எனவே அந்த நூலில் அப்படி சொல்லப் பட்டிருக்கிறதே, இப்படி சொல்லப் பட்டிருக்கிறதே என்று கூறி, அவற்றை யாராவது உதாரணமாக்கினால், அதை வெறுப்பினைப் பரப்புகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதை நாம் தீவிரமாக எடுத்து அணுக வேண்டிய அவசியமில்லை!

இறுதியாக :

ஆங்கிலேயர்கள், மேற்கத்திய நாட்டினர் உருவாக்கிய முக்கியமான இரண்டு குழப்பங்களில் ஒன்று, ஆப்ரகாம் வழித் தோன்றல்களால் உருவான மதப் பிரிவுகள் போல் இந்த மக்களின் ஆன்மவியலை நினைத்துக் கொண்டது.

இரண்டாவது ஜாதிகளை 3000க்கும் மேற்பட்ட ஜாதிகள், அதன் உட்பிரிவுகளாக உள்ள 20000க்கும் மேற்பட்ட பிரிவுகள் அனைத்தையும் வர்ணத்தின் படிதான் பிரித்துள்ளார்கள் என்று கூறியது.

இங்கே ஆன்மிகம் தான் இருந்ததே தவிர மதம் இருந்தது இல்லை. ஏசுவுக்கும் அல்லாவுக்கு நடுவே விநாயகரை வைத்து மொத்தமாக மாலையைப் போட்டு சூடம் ஏற்றி வணங்கும் பெருந்தன்மை இங்குள்ளவர்களிடம் இருக்கிறது.

சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், சௌரம், காணாபத்யம் என்று பல கடவுள் வழிபாடுகளும், பல சிறு தேவதைகள் வழிபாடுகளும் என்று பல்லுருவ வழிபாடு கொண்ட இந்த நாட்டின் மக்கள் இந்துக்கள் என்று கூற கலாச்சார வடிவமே காரணமாக இருக்கிறதே அன்றி வேறு இல்லை. அதனால் தான் இங்கே வாழும் ஒரு இஸ்லாமியரும் , ஒரு கிருஸ்தவரும் கூட இந்து என்று தான் கூறவேண்டும் என்று ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். காரணம் கடவுள் வழிபாட்டால் வேறாக இருந்தாலும் கலாச்சாரத்தால் இந்துக்களே என்கிறார்கள்.

இந்தியாவில் அதன் துணைக் கண்டங்கள் முழுவதும் பரவி விருந்த இந்துக் கலாசாரம் என்பது மதம் அல்ல; அது பன்முகத் தன்மை கொண்டு பல்லுருவ தெய்வ வழிபாடுகளை தன்னுள் கொண்ட மிக மிகச் சிக்கலான ஒரு ஆன்மவியல் தேடல்.

இது மதமே இல்லை; இது ஒரு கலாச்சாரம். இந்த மக்கள் இப்படி தான் வாழ்ந்தனர். ஆக மதம் மாறுவது என்பது ஒரு தீர்வல்ல. கர்நாடக சங்கீதமும், அனைத்துக் கலைகளும் இன்று எப்படி அனைவருக்கும் சொந்தம் ஆனதாக நிற்கிறதோ அதே போல் வேதமும் சொந்தம்! இது என் நாடு என் மக்கள் என்ற ஆன்மவியல் தேடல் – தவிர வரலாறு கொண்டு வெறுப்பைப் பேசுவதை விட ஒன்றுபட்டு ஒரு தாய் மக்களாக நிற்க வேண்டும்! அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதுதான் நலன் தரும்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் இந்த ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ள தகவல்களைக் கருத்துக்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்! டாக்டர் பட்டம் கொடுக்கலாமா வேண்டாமா என்பது அல்ல நம் கருத்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒரு தவறான, உண்மைக்குப் புறம்பான விஷயத்திற்கு அங்கீகாரம் கொடுப்பது போல் அமைந்து விடக் கூடாது என்பதால் கவனம் தேவை!

தலித் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள் திருமாவளவன். ஒரு மதத்திற்கு அம் மக்களை இழுத்துச் சென்று அவர்களை பலியாடுகள் ஆக்காமல் இருங்கள்! குறிப்பிட்ட ஜாதிக்காக தலித் வேஷம் போடாதீர்கள். காரணம், இங்கே ஜாதி ஒழிப்பு பெயரில் ஜாதி அரசியல் நடத்துவதைத் தவிர உண்மையான தலித்திய விடுதலைச் சிந்தனை என்பது உலக அளவில் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களின் குரலாக இருப்பது இல்லை.

கட்டுரை: – மாரிதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe