இன்று சுதந்திர இந்தியா அமைந்த பின்னர் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் 62ம் ஆண்டு. 1.11.1956ல் தான் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டன. அப்போது போராட்டங்கள் பல நடந்தன. இது குறித்து ஆய்வு செய்ய பசல் அலி கமிஷன் ஒன்று அரசால் நியமிக்கப் பட்டது.
பசல் அலி ஆணைய அறிக்கை 10.10.1955 அன்று வெளிவந்தது. அன்றே ஈ.வே.ரா.விடம் தினத்தந்தி செய்தியாளர் இது குறித்து நேர்காணல் நடத்தினார். தேவிகுளம் – பீரிமேடு தொடர்பான செய்தியாளர் கேள்வியும் அதற்கு ஈ.வே.ரா., அளித்த பதில்களும் வருமாறு:
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம், (2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின் சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையா ளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத்தென்ன?
ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியதுதான்.
நிருபர்: கவலையில்லை என்கிறீர்கள். அவை தமிழ் தாலுகாக்கள் தானே!
ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்) வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
‘தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது.
(தினத்தந்தி 11.10.1955)




