spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஐசியு.,வில் விஜயகாந்த்... கட்சி!

ஐசியு.,வில் விஜயகாந்த்… கட்சி!

- Advertisement -

மக்கள் நலக் கூட்டணியால் தன் நலத்தை இழந்துவிட்டு, நலக்கோளாறால் தள்ளாடிக் கொண்டிருக்கும் விஜயகாந்த்தால், தமிழக அரசியலிலும் ஒரு தள்ளாட்டம் இருந்து கொண்டிருக்கிறது! 2016 ஆம் ஆண்டு, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு அரசியல் தலைமைகளை மட்டும் முடக்கிப் போடவில்லை, விஜயகாந்த் என்ற எதிர்க்கட்சித் தலைமையையும் துடிப்பாக செயல்படவிடாமல் ஒதுங்கச் செய்துள்ளது.

இப்போது தமிழக அரசியல் களத்தில் இருப்பவர்கள் எல்லாம் கத்துக்குட்டிகள்! அரை நூற்றாண்டு கடந்த கட்சியாக திமுக., இருப்பினும், அரசியல் முதிர்ச்சி அற்ற ஸ்டாலினின் தலைமையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது அக்கட்சி! அதிமுக.,வோ கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவே சேர்ந்த கூட்டணித் தலைகளின் சங்கமமாக இருக்கிறது.

இரு பெரும் தேசியக் கட்சிகளும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தொண்டர்கள் எல்லோரும் தலைவர்களாகப் போட்டி போடும் கட்சியாக காங்கிரஸ் இருக்க, தலைவர்கள் எல்லாம் தொண்டர்களாக மாறி தரைமட்ட அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் கட்சியாக தமிழக பாஜக., இருக்க.. பிரிவினைவாதிகளின் புகலிடங்களாக ஏனைய கட்சிகள் இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு!

இருப்பதில் ஓரளவு கண்ணியமாகத் திகழ்ந்த விஜயகாந்த்தின் தேமுதிகவோ., இப்போது குடும்பக் கட்சியாக சுருங்கிவிட்டது.

முதல் சட்டபேரவைத் தேர்தலில் 8.30 சதவீத வாக்கு, தனி நபராக உளுந்தூர்பேட்டையில் வெற்றி, திமுக-அதிமுக வெற்றிகளைப் பாதித்த வலிமை, எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தது என விஜயகாந்தின் அரசியல் கதைகள் எல்லாம் இன்று பழங்கதை ஆகிவிட்டது.

விஜயகாந்தின் உடல் நிலை பாதிப்பு தேமுதிக.,வை ஆட்டம் காணச் செய்துள்ளது. தலைவனின் உடல்நிலை பாதிப்பால் தொண்டர்கள் தொய்வடைந்துள்ளனர். விஜயகாந்தை அணுக முடியாத நிலையில் தொண்டர்கள் ஏதோ தங்கள் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு, அடுத்த அரசியல் முகாம்களில் இடம் இருக்குமா என்று தேடி வருகின்றனர்.

தற்போது தேமுதிக.,வை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். நன்கு பேசக் கூடியவர், புத்திசாலித்தனமாக அரசியல் கருத்துகளை எடுத்து விடுபவர் என்றாலும், விஜயகாந்த் என்ற உதவும் உள்ளத்தைப் போல் கட்சியினரை அது பெரிதாக ஈர்க்கவில்லை.

தொண்டர்கள் இயக்கமாகத் தொடங்கி, ஒரு நபரின் தலைமையில் இயங்கும் குடும்பக் கட்சியாக மாறிப் போனது திமுக.,! அங்கே வாரிசு அரசியல் மட்டுமல்ல, அறிவாலய மடம் ஆகிப் போனதுதான் பரிணாம வளர்ச்சி! திமுக., என்ன சங்கரமடமா என்று கேள்வி கேட்ட கருணாநிதியின் வாரிசுதான் இப்போது அங்கே தலைவர். சங்கர மடத்திலாவது ரத்த சம்பந்தம் இல்லாத நபர்களைத்தான், வெளியில் இருந்து தேர்வு செய்து பழக்கி தேர்ச்சி பெறச் செய்து அடுத்த மடத் தலைவராக நியமிப்பார்கள். திமுக.,விலோ ரத்த வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக தலைவர் ஆக்கிவிட்டு, அரசியலில் தேர்ச்சி பெற வலுக்கட்டாயமாக அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்!

வாரிசுகள் அற்ற ஜெயலலிதா காலமாகும் முன் தனக்கான அரசியல் வாரிசாக எவரையும் அறிவித்து, முன்னிலைப் படுத்தி, மக்களிடம் அறிமுகப் படுத்தாமல் போனதால், தடிஎடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று ஆகிவிட்டது அதிமுக.,!

அண்மைக் காலமாக வாரிசு அரசியல் கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் சூழலில், தேமுதிக., என்ற தனி நபரை முன்வைத்து அரசியல் களம் கண்டு தொண்டர் படையைத் திரட்டிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் அவ்வப்போது முன்னங்காலை எடுத்து வைத்து போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார். அதன் முதல் படியாக, நலத் திட்ட உதவிகள் வழங்குவது, குடிசைகளுக்குச் செல்வது, கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று என்னதான் செய்தாலும் தொண்டர்கள் எவரும் அவருக்காக அலட்டிக்கொள்ள இல்லை.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலை! தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள்வரை தேர்தல் கூட்டணிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. ஆனால் தேமுதிக நிலையோ பரிதாபம்.

வைகோ என்ற குழப்பவாதி தன்னுடைய கட்சியை மட்டும் காவு கொடுக்காமல், கூடவே விஜயகாந்த் என்ற ஆளுமையையும் தனியே தவிக்க விட்டார். மக்கள் நலக் கூட்டணி தந்த சோகமான சுமைகளில் இருந்து விஜயகாந்த் மீளவே இல்லை! கூடவே, பிரேமலதா, சுதிஷ் என குடும்பத்தினரின் நெருக்குதலால் தன் விருப்பத்துக்கு மாறாக மக்கள் நலக் கூட்டணியில் கைகோத்த செயலுக்காக விஜயகாந்த் பெரும் வருத்தத்திலேயே இருந்தார்!

கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் தேமுதிகவின் கூட்டணி வரவுக்காக மற்ற கட்சிகள் காத்துக் கொண்டிருந்த காட்சியை தமிழக அரசியல் கண்டது. விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று திமுக – அதிமுக இருபெரும் கட்சிகளே காந்திருந்த காலமும் உண்டு. ஆனால் இன்று, தேமுதிகவின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளக் கூட எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டுவதில்லை.

செல்வம் செல்வாக்கு என எதற்கும் வழி இல்லாத நிலையில் தேமுதிக தொண்டர்கள் செலவழிக்கத் தயங்கி, கட்சியிலிருந்து விலகியே நிற்கிறார்கள். தற்போதைய நிலையில், தேமுதிக தலைமை எடுக்கும் முடிவுகளின் படி உற்சாகமாக தேர்தல் பணி செய்யவோ, போட்டியிடவோ நிர்வாகிகள் தயாராக இல்லாத சூழ்நிலை!

தேமுதிக தொடங்கியபோது கட்சியில் இருந்த செயலாளர்களில் முக்கால்வாசிப் பேர் இப்போது கட்சியில் இல்லை. தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 80 சதவீதம் பேர் இன்று கட்சியில் இல்லை, அல்லது கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கி விட்டார்கள்.

தேமுதிக என்ற கட்சி மக்கள் முன் எடுபடுவதற்கு ஒரே முகமாக, முகமூடியாக விளங்கியவர் விஜயகாந்த். அவரை தவிர்த்து வேறு எவரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் இல்லை! உடன் எந்த பிரபலமோ, புத்திசாலிகளோ, மக்களை ஈர்க்கும் தலைவர்களோ இல்லை! இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நலம் தேறி, முன்பு போல் வந்தால் மட்டுமே கட்சி ஓரளவு முன்னேற்றம் காண முடியும். இப்போதும் அக்கட்சி, பழைய கணக்கை எல்லாம் நினைத்துக் கொண்டு, கூட்டணி பேரம் பேசவும் முடியாது. தனியாக நின்று போட்டியிட்டால், பழைய வாக்கு வங்கி என்பதும் இருக்காது! காரணம், மேலும் சில நடிகர்கள் களம் காணத் தயாராகி வருகிறார்கள்.

விஜயகாந்த் பங்கேற்பு இல்லாத தேமுதிக., என்பது ஒன்றுமே இல்லை! வெறும் லெட்டர்பேட் கட்சி ஆகிவிடும் என்பதுதான் யதார்த்த நிலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe