செங்கோட்டை டூ தில்லி செங்கோட்டை!: ‘அம்மா’வுக்காகத் தயாராகுது? திருநெல்வேலி மாவட்டத்தின் கடையநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது செங்கோட்டை தாலுகா. இங்கே அதிமுக சார்பில் நின்று போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆனவர் செந்தூர்பாண்டி. உடல் நலக் குறைவால் சிகிச்சையில் உள்ள செந்தூர்பாண்டியன் இப்போது இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார். இதனால், இவர் தன் கட்சித் தலைவி அம்மாவுக்காக பதவி விலகி, தன் தொகுதியில் ‘அம்மா’ போட்டியிட்டு வெற்றி பெற வழிவிடுவார் என்று இந்தத் தொகுதியில் பலரும் பரவலாகப் பேசுவதைக் கேட்க முடிகிறது. அறநிலையத் துறையைத் தாங்கி துவக்கத்தில் ‘அம்மா’வுக்காக கோயில்களில் தடபுடலாக அபிசேக அர்ச்சனை பூஜைகள் நடக்க வழி செய்தவர் ஆயிற்றே! விரைவில் அதிமுக பொதுச் செயலாளார் ஜெயலலிதா தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்றும், உடனே அவர் மீண்டும் போட்டியிட்டு முதல்வர் ஆகிவிடுவார் என்றும் இங்குள்ள அதிமுகவினர் மட்ட்டுமல்லாமல், பொதுமக்களில் பலரும் எண்ணுகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறிக் கடைக்காரர்கள், வணிகர்களில் சிலர் என்று பரவலாக இந்தக் கருத்தைக் கொண்டிருக்கின்றனர். யாரைச் சந்தித்தாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, ‘அம்மா’ கேஸ் என்னாகும்? வெளில வந்துடுவாங்களா? அவங்க இங்க நின்னு ஜெயிச்சு முதலமைச்சர் ஆயிடுவாங்களாமே! எல்லாரும் சொல்லுறாங்க…. இப்படியாக ஸ்ரீரங்கம் கைவிட்டாலும், செங்கோட்டை கைவிடாது; அம்மா இங்கயிருந்து அடுத்து நேரா தில்லி செங்கோட்டைதான் போவாங்க! வேணும்னா பாருங்களேன்… என்று அதிமுகவினர் சிலர் உற்சாகமாகப் பேசிக் கொள்வதை கேட்க முடிகிறது. நிலம் கையகப் படுத்தல் மசோதா விவகாரத்தில் அதிமுக எடுத்த நிலைப்பாடு, தம்பித்துரைக்கு பாஜக கொடுத்த கௌரவம்… எல்லாம் மத்திய அரசோடு, குறிப்பாக மோடியுடன் ஜெயலலிதா ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார் என்றே பலரும் நம்புகிறார்கள். இதற்கு எதிர்க்கட்சிகளின் இத்தகைய கருத்துப் பிரசாரம் காரணாமாகியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. மக்கள்மன்றங்களின் தீர்மானம் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்றங்களின் தீர்மானம் அல்லவா நடக்கப் போவதைத் தீர்மானிக்கப் போகின்றன?
‘அம்மா’ மீண்டும் முதல்வராக தயாராகுது ‘செங்கோட்டை’?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari