
திருச்செந்தூர் கோயில் விடுதிகளுக்கு சீல் வைப்பு… தங்க இடமின்றி தினமும் பக்தர்கள் பரிதவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுதிகள் ‘சீல்வைத்து’ மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்க இடமின்றி வெளிப்புற மண்டபங்களில் கைக்குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பரிதவித்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இருப்பினும் அவர்களுக்கான தேவையான அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்து தரப்படவில்லை.சுகாதார வசதிகளும் கேள்வி குறியாகவே பக்தா்களை பரிதவிக்க வைக்கிறது.
அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள் போடும் ஆட்டமோ விண்ணை முட்டி நிற்கிறது. எதிலும் கொள்ளை, கமிசன் என தங்கள் வாழ்வை வளபடுத்திக்கொண்டு வருகின்றனா்.
இந்த கோவிலில் மாதந்தோறும் உண்டியல்களில் கோடிக்கணக்கில் பணமும், அதிக அளவில் தங்க, வெள்ளி நகைகள் குவிந்தபோதும் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மனமில்லை.தங்களக்கு கமிசன் கிடைக்கும் வேலைகளை மட்டுமே கண்ணும் கருத்துமாக பார்த்து வருவதாகவும் பக்தா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி கிரிபிரகார மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உயிரிழந்தார்.இதுதான் கோவிலை பராமாரிக்கும் லெட்சணம்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் கோயில் மண்டபங்கள், விடுதிகள், குடில்கள் என அனைத்து கட்டடங்களின் தரத்தையும் இந்து அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இதுவரையில் எந்த ஓரு பணிகளையும் மேற்கொள்ள படாமல் இருந்து வருகின்றனா்.
இதனைத் தொடர்ந்து சேதமடைந்த நிலையில் இருந்த கிரிபிரகார மண்டபம் மொத்தமாக இடிக்கப்பட்டது.
பின்னர் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ள வேலவன் விடுதி, செந்திலாண்டவர் விடுதி, ஜெயந்திநாதர் விடுதி மற்றும் ஆறுமுக விலாஸ் குடில்களில் இருந்த 401 அறைகளில் 308 அறைகள் தரமற்ற முறையில் இருப்பதாகக்கூறி ஒருசில அதிகாரிகள் தங்களது பாக்கெட் நிறைப்புவதற்காக ‘சீல் வைத்து’ மூடப்பட்டன.
தற்போது வரை புதிய விடுதிகள் கட்டப்படாத சூழல் உள்ளது.
கோயிலுக்கு விடுமுறைகள் மட்டுமின்றி எல்லா நாட்களிலுமே தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லண்டன், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்கி செல்கின்றனர்.
கோயில் விடுதிகள் மற்றும் சிறுகுடில்கள் மூடப்பட்டுள்ளதால் நடுத்தர நிலையைச் சேர்ந்த பக்தர்கள் தங்க இடமின்றி கைக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பரிதவிக்கின்றனர்.
வேறு வழியின்றி இவர்களில் சிலர் கோயில் வெளிப்புற மண்டபங்களில் தங்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதனால் குளிப்பதற்கும் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக பெண்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குழந்தைத் திருட்டு நடைபெறுவதாலும், குழந்தைகளுடனும் உடைமைகளுடனும் அச்சத்துடனேயே வெளிப்புற மண்டபங்களில் மல்லுகட்டி தங்க வேண்டியுள்ளதாகவும் கூறினர்.
அத்துடன் கோயிலில் ரூ 1000த்திற்கும் மேல் வாடகை உள்ள விடுதிகளை மூடாமல் ரூ200 மற்றும் ரூ.300 ரூபாய்களுக்கு வழங்கப்பட்டு வந்த விடுதிகள் மூடப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வெளியிலுள்ள தனியார் விடுதிகளில் பல ஆயிரம் பணம் கொடுத்து தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது
மேலும் தனியார் விடுதி உரிமையாளா்கள் சில பேராசை பிடித்த அதிகாரிகளுக்கு கணிசமான தொகையினை மாதாமாதம் செலுத்தி வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
மொத்தமுள்ள 401 விடுதிகளில் 308 அறைகள் சீல் வைக்கப்பட்ட நிலையில் 93அறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதாலும், திருவிழா நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மேலும் கோயிலிலுள்ள குறைந்த கட்டணம் கொண்ட விடுதிகளான செந்தில் ஆண்டவர் விடுதி மற்றும் வேலவன் விடுதிகளில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்படாமல் அரசு அதிகாரிகள் தனியார் விடுதிகளுக்கு ஆதரவாக தரமான விடுதிகளை மூடியிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



