
அதிமுக மதுசூதனனுக்கு சம்பந்தியாகிறார் ஸ்டாலின்… கோபாலபுரம் வீட்டில் நிச்சயதார்த்தம்!!
திமுக தலைவர் ஸ்டாலினின் அக்கா செல்வியின் பேத்தியும், மதுசூதனின் அக்காள் பேரனுக்கும் நிச்சயதார்த்தம் இன்று கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது.
தமிழக அரசியலில் ஒரு சில விஷயங்களில் ஜெயலலிதா அளவுக்கு இல்ல கருணாநிதி.
அதிமுக மட்டுமல்ல எந்த வேறெந்த கட்சியினராக இருந்தாலும் தானோ, தன் கட்சியினரோ ஒட்டி உறவாட வேண்டிய நேரம் வந்தால் அதை தவிர்க்க விரும்பாதவர்.
ஆனால் இரும்புப்பெண்மணி ஜெயலலிதா அப்படியில்லை. திமுக. விஐபிக்கள் கலந்து கொள்ளும் வைபவங்கள், அவர்கள் வரும் நேரங்களில் தன் கட்சி முக்கியஸ்தர்கள் தலைவைத்துக்கூட படுக்க கூடாது என வாய்மொழி உத்தரவே அமலில் இருந்தது.
ஆனால் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அக்கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக இருந்த இந்த கர்வம் தலை குப்புற கவிழ்ந்து கிடக்கும் நிலையில், கிளை லெவலில் துவங்கி, மாநில அளவு வரை இரு கட்சியின் நிர்வாகிகளும் பல்வேறு நிகழ்வுகளில் ஒருசேர கலந்து கொள்வதென்ன, சிரித்தபடி விருந்து சாப்பிட்டு மகிழ்வதென்ன… தடபுடலாக ஒவ்வொரு நாளும் அரங்கேறுகிறது தமிழக அரசியல் ஹிஸ்ட்ரியில்.
இதில் உச்சகட்டமாக ஸ்டாலினோ அதிமுகவின் முக்கிய புள்ளி வீட்டில் சம்பந்தமே கலக்கிறார்.
ஆம் ஸ்டாலினின் அக்கா செல்வியின் பேத்திக்கும், அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனனின் அக்காள் பேரனுக்கும் விரைவில் கல்யாணம் நடைபெற இருக்கிறது.
இதற்கான நிச்சயதார்த்தம் இன்று கோபாலபுரம் வீட்டில் நடந்தது.
இதற்கு தலைமையேற்பவர்கள் ஸ்டாலினும், மதுசூதனனும். இருவரும் ஒரு சேர அமர்ந்துதான் இந்த இனிய நிகழ்வை நடத்தி முடித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் வெறித்தனமான முரட்டு விசுவாசி அதிமுகவின் பழைய தல மதுசூதனன், அவரின் ரத்த சொந்தமே இப்படி திமுகவின் தலைமை குடும்பத்தினுள் உறவு ரீதியாக கலக்கிறது என்பதை இரண்டு கழகங்களும் இணையும் விஷயமாகதான் ஒரு வகையில் அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.
சொந்த விஷயம்னு வர்றப்ப பத்து மட்டுமல்ல பாலிடிக்ஸ் பகையும் பறந்து போகும் போலிருக்குது.
ஆனாலும் இது காதல் கல்யாணம் என சொல்லிக்கொள்கிறார்கள்.
அரசியலை காரணம் காட்டி, இளம் காதலர்களை பிரிக்காத அந்த நல்ல குணத்தை கண்டிப்பா வாழ்த்து சொல்லியே ஆகணும்.



