
சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
45. முன்யோசனை, முழு யோசனை!
செய்யுள்:
சிந்தநீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா !
ந கூபகனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே !!
— ஆர்ய தர்மம்
பொருள்:
ஒரு பணியில் எதிர்ப்படக்கூடிய தடைகளை முதலிலேயே யூகித்து அவற்றை எவ்வாறு கடப்பது என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும். வீடு பற்றி எரியும்போது அணைப்பதற்கான நீருக்காக கிணறு தோண்டுவது அறிவுள்ள செயல் அல்ல.
விளக்கம்:
முன்யோசனை, முழு யோசனை என்பவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் சுலோகம் இது. தனிமனிதனுக்கு ஆனாலும் அமைப்புகளுக்கு ஆனாலும் இத்தகு ஆலோசனை ஊக்கமளிக்கும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் சுலோகம் இது.
மின்சாரம் தடைபடும் என்று எதிர்பார்த்தால் முன்பாகவே நெருப்புப் பெட்டி, மெழுகுவர்த்தியை தயாராக வைத்திருப்போம். மழைநாளில் பாதுகாப்பாக குடை எடுத்துச் செல்வோம். இவை முன் யோசனைக்கு சில ஆரம்ப உதாரணங்கள்.
ஏதாவது மிகப்பெரிய பணியைத் தொடங்கும் போது முழு யோசனை செய்து கொள்ள வேண்டும். செய்ய இருக்கும் வேலைகளின் பட்டியல் தயாரித்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்படும் அபாயங்களை யோசித்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிய வேண்டும்.
மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லும்போதும், நிர்வாகிகள் அரங்குகளை ஏற்பாடு செய்யும் போதும், திருமணம் போன்ற சுப காரியங்களிலும் இந்த முன் யோசனை மிகவும் அவசியம்.
விடுதலைக்குப் பிறகு முன்யோசனை இல்லாத நம் தலைவர்களில் சிலர் (நேரு போன்றோர்) நமக்கு (ஆர்மி) படைவீரர்களின் தேவை என்ன என்று எண்ணினார்கள். நமக்கு பகை நாடுகளே இல்லை என்ற பிரமையில் இருந்தார்கள். அவர்களின் பிரமையையும் கற்பனையையும் உடைத்தெறியும் வண்ணம் 1948 லேயே பாகிஸ்தானும், 1962ல் சைனாவும் நம்மைத் தாக்கின. சைனா எப்போதிருந்தோ நம்மீது போர் யத்தனங்களைச் செய்து வந்த விஷயத்தை நம் தலைவர்கள் உணரத் தவறினார்கள். நம்மிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் நாம் நஷ்டம் அடைந்தோம்.