
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
58. கல்விச் செல்வம்
ஸ்லோகம்:
ந சோரஹார்யம் ந ச ராஜ ஹார்யம் ந ப்ராத்ருபாஜ்யம் ந ச பாரகாரீ|
வ்யயே க்ருதே வர்தத ஏவ நித்யம் வித்யாதனம் சர்வதனப்ரதானம்||
— பர்த்ருஹரி
பொருள்:
கல்விச் செல்வம் திருடர்களால் கொள்ளை போகாது. அரசாங்கம் எடுத்துக் கொள்ளாது. உடன் பிறந்தோர் பகிர்ந்து கொள்ள மாட்டார். (பகிர்ந்து கொண்டாலும் குறையாது). சுமப்பதால் தோள் வலி ஏற்படாது. செலவழிப்பதால் வளர்ந்துகொண்டே இருக்கும். கல்விச்செல்வம் அனைத்து செல்வங்களிலும் சிறந்தது.
விளக்கம்:
கல்வியின் முக்கியத்துவத்தை கூறும் ஸ்லோகங்கள் பல உள்ளன. கல்விச் செல்வத்தின் சிறப்பை விளக்கும் சுலோகம் இது.
செல்வத்திற்கு உள்ள சில எல்லைகளும் பிரச்சனைகளும் கல்விக்கு இல்லை என்பதை இங்கு கவனிக்கலாம்.
‘நாஸ்தி வித்யா சமம் சக்ஷு:’ கல்விக்கு ஈடான கண்கள் இல்லை என்று கவிஞர்களால் போற்றப்படுவது கல்வி.
தனம், தான்யம், பசு, சம்பத்து அனைத்தையும் விடச் சிறந்தது கல்விச் செல்வமே! கல்வி அறிவற்றவன் எத்தகைய உயர்ந்த குடும்பத்தில் பிறந்தாலும் என்ன பலன்?
அதனால் பணம் சம்பாதிப்பதை கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டாவது கல்விச் செல்வத்தை பெற வேண்டும். இதற்குரிய வழிகளும் பல உள்ளன. வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டே மாலை நேரத்தில் படித்து கல்விச் செல்வத்தை பெற முடியும்.
படிக்கும் பழக்கம் மிகவும் நல்லது. ஆனால் எதைப் படித்தால் நலம் விளையும் என்று தேடிப் படிப்பது முக்கியம். பயனற்றவற்றைப் படிப்பது நல்லதல்ல என்பது பெரியோர் கூற்று!