
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
77. வீட்டுத் திருடன்
ஸ்லோகம்:
யத்ராத்மீயோ ஜனோ நாஸ்தி பேதஸ்தத்ர ந வித்யதே |
குடாரை: தண்டநிர்முக்தை: பித்யந்தே தரவ: கதம் ||
பொருள்:
சொந்த மனிதர்கள் மூலமாகவே ஆபத்துகள் விளையும். கோடாலியை பிடித்துக் கொள்ளும் கட்டை இல்லாவிட்டால் மரத்தை வெட்ட முடியாது அல்லவா? அந்த கோடாலியின் கைப்பிடி எங்கிருந்து வந்தது? மரத்திலிருந்தே அல்லவா? அவ்விதமாக மரத்துக்கு கேடு செய்யும் கோடாலிக்கு உதவுவது மரத்தின் ஒரு பகுதியே.
விளக்கம்:
வீட்டுத் திருடனை பிடிப்பது கடினம் என்பார்கள். தாயாதி, பங்காளிகள் இருக்கும்போது வீட்டிற்கு வேறு நெருப்பு எதற்கு என்ற பழமொழியும் உள்ளது. இப்படிப்பட்ட யோசிக்க வைக்கும் மொழியில் உள்ளது இந்த ஸ்லோகம்.
எதிர்கட்சியின் உள் விவகாரம் அறிந்தவரை நம் பக்கத்திற்கு இழுத்துக் கொண்டு அவர்களைக் கொண்டே எதிரிகளை வெற்றி பெறுவது ஒரு ராஜதந்திரம். அவ்வாறு எதிர்க்கட்சிக்காரர்களை எதிர்த்து தேர்தலிலும் வாணிபத்திலும் வெற்றிபெற்ற உதாரணங்கள் எத்தனையோ உள்ளன.
இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணம் பாகிஸ்தானின் தூண்டுதல். அங்கிருந்து வரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நம் நாட்டு மக்களின் உதவியோடுதான் இதெல்லாம் நடக்கிறது என்பது உண்மை.
அரசியல் வேறுபாடுகளாலும் மத மூடநம்பிக்கையாலும் பணத்திற்கு ஆசைப்பட்டும் எதிரிகளோடு கைகலந்து, தான் அமர்ந்திருக்கும் மரக்கிளையைத் தானே வெட்டியது போல் பணிபுரியும் வீட்டு திருடர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வைக்கும் சுலோகம் இது.
மரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கோடாலியின் கைப்பிடி போன்றவரே இந்த தீவிரவாதிகளுக்கு நாட்டு ரகசியங்களைத் தெரிவித்து அடைக்கலம் அளிக்கும் தீயவர்கள்.