இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்… அடிக்கடி எனக்கு இந்தக் குறள் மனதுக்குள் வந்துபோகும்… துன்பம் செய்பவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், அவர்கள் நாணமெல்லாம் படுவதில்லை இந்தக் காலத்தில்.

இங்கிதம் பழகுவோம் – 1  (புதிய தொடர்)
சுமக்க வேண்டியவற்றை சுமப்போம்

– காம்கேர் கே. புவனேஸ்வரி –

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்… அடிக்கடி எனக்கு இந்தக் குறள் மனதுக்குள் வந்துபோகும்…

துன்பம் செய்பவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், அவர்கள் நாணமெல்லாம் படுவதில்லை இந்தக் காலத்தில்.

ஏனெனில் பெரும்பாலானோருக்கு தாங்கள் செய்வது தவறு என்ற எண்ணமே இருப்பதில்லை. சிலர் தெரிந்தே தவறு செய்கிறார்கள். ஒரு சிலர் தாங்கள் செய்கின்ற தவறு தனக்கு சரியெனப்படுகிறது என்கிறார்கள்.

பொதுவாகவே மனிதர்களுக்கு தங்கள் செயல் குறித்த சரி / தவறு என்ற எண்ணமே இருப்பதில்லை…

ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்… இதுவும் கடந்துபோகும் என்பதைப்போல எல்லாவற்றையும் புறந்தள்ளி நகர்ந்துகொண்டே கடந்து சென்றபடி இருக்கிறார்கள்.

தாங்கள் பேசியதையோ, தாங்கள் நடந்துகொண்டதையோ திரும்பிப் பார்ப்பதே இல்லை.

நேரம் இல்லை… அவசியம் இல்லை…. தேவை இல்லை… இப்படி பல காரணங்கள் வைத்துள்ளார்கள்.

ஏன் யோசிக்கணும்? எதற்காக திரும்பிப் பார்க்கணும்? அதனால் என்ன பலன்? இப்படி பல கேள்விகளை வைத்துக்கொள்கின்றனர்.

பொதுவாகவே மனித மனங்கள் மாறிவிட்டன.

இன்னும் சிலர் ‘நான் பொதுவாகவே எதையும் மனதில் சுமந்துகொண்டு செல்வதில்லை’ என்று தோள் குலுக்கி சற்றே பெருமிதமாய் சொல்கின்றனர்.

சுமக்க வேண்டியதை சுமந்துத்தான் ஆக வேண்டும். மற்றவர்களை காயப்படுத்திவிட்டு நான் எதையும் சுமப்பதில்லை என்று சொல்வதைப் போன்ற மனசாட்சியற்ற செயல்பாடு வேறேதும் இருக்க முடியுமா?

நம் செயல்பாடுகள் குறித்த பார்வைகளை நாம் சுமந்தால் மட்டுமே நாம் மனித நேயத்துடன் வாழ முடியும்.

சுமக்கவும் சிந்திக்கவும் நேரம் இல்லை என்பதெல்லாம் சுத்த ஹம்பக். ஒருநாளின் 24 மணிநேரத்தில் அரை மணி ஒதுக்கினால் போதும். சுமந்ததில் சுகமானதை ரசிக்கலாம். கசப்பானதை அலசி ஆராய்ந்து சரி செய்யலாம். இது தியானம் செய்வதைவிட பலன் கொடுக்கக் கூடியது.

அந்தக்காலத்து மனிதர்கள் உணர்வுப்பூர்வமாக வாழ்ந்தார்கள். காரணம் அவர்கள் எதையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்ல மாட்டார்கள். அன்பு, பண்பு, பாசம், நேசம், மனிதாபிமானம், மரியாதை, கருணை, நன்றி, விசுவாசம் இப்படி எல்லா விஷயங்களிலும் அவர்களை யாராலும் அடித்துக்கொள்ளவே முடியாது.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் யாரையுமே விரோதியாகக் கருத மாட்டார். பெரும்பாலும் அவரை அனைவருக்குமே பிடிக்கும். எப்படி இது சாத்தியமாகிறது? என கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில்…

‘ரொம்ப சிம்பிள். என்னால் பிறரிடம் சண்டைப் போட்டுக்கொண்டோ, விரோத மனப்பான்மையுடனோ இருக்க முடிவதில்லை. அந்த வேதனையான அனுபவத்தை சுமந்துகொண்டே வாழ முடிவதில்லை. அதனால் பெரும்பாலும் விரோதியாக்கிக்கொள்ள மாட்டேன்…’

‘எதையும் சுமந்துகொண்டு செல்ல முடிவதில்லை’ என்பதற்கு இவர் சொல்லும் காரணம் ‘அட’ சொல்ல வைக்கிறதே…

சுமக்க வேண்டியதை சுமப்போம். அந்தப் பொதியில் உள்ள நல்லவை நம் ஆரோக்கியத்துக்கு. தீயவை களைந்தெடுக்கப்பட்டு மன ஆரோக்கியத்துக்கு.

என்ன சுமக்கத் தயாரா?

கட்டுரையாளர் குறித்து…
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO

காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன.For More Info.. http://compcarebhuvaneswari.com/
http://compcaresoftware.com/

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...