சஹஸ்ரநாமங்கள் அனைத்தும் ருஷிகள் அருளியவை. ஒவ்வொன்றும் சிறப்பானவையே! எந்த ஐயமும் இல்லை.
சகஸ்ரநாமம் என்ற அமைப்பில் ஒரு சிறப்பு உள்ளது. எந்த தெய்வமானாலும் உபாசனை செய்யும் போது மந்த்ரம், யந்த்ரம், விக்ரஹம் என்பவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அது மட்டுமல்ல. அந்த தெய்வத்தோடு தொடர்புடைய ஞானத்தைக் கூட நாம் அறியவேண்டும். ரூபம் குணம் லீலை மகிமை தத்துவம் என்ற தெய்வ இயல்புகளான ஐந்து அம்சங்களைத் தெரிந்துகொண்டு ஆராதித்தால் பலன் அமோகம்.
இந்த ஐந்து அம்சங்களின் இயல்பை விவரித்தால் அது பல நூல்களாக விரியும். அந்த ஞானம் அனைத்தையும் ஒவ்வொரு நாமத்திலும் பொதித்து வைத்துள்ளார்கள் ரிஷிகள். ஒவ்வொரு நாமத்திற்கும் பொருள் விளக்கினால் அந்த தெய்வம் குறித்த இந்த ஐந்து அம்சங்களும் தெரியவரும்.
லலிதா ஸகஸ்ர நாமத்திற்கு ரஹஸ்ய நாமம் என்று பெயர். வேறு எந்த சகஸ்ரநாமத்திற்கும் அந்தப் பெயர் இல்லை. ரகசிய நாமம் என்றால் சொற்களுக்கு நிகண்டு அர்த்தம் கூறுவது மட்டுமேயல்ல… சாஸ்திர குறியீடுகள் மறைந்துள்ளன என்று பொருள். லலிதா சகஸ்ரநாமம் அனைத்தும் குறியீட்டு நாமங்களே! சாஸ்திர ஞானம் இல்லாவிட்டாலோ ஸ்ரீவித்யையின் சிறப்புகள் தெரியாவிட்டாலோ லலிதா சகஸ்ரநாமங்களுக்குப் பொருள் கூற இயலாது.
மீண்டும் அத்தகைய கனம் பொருந்தியது கணபதி சகஸ்ரநாமம். கணபதிக்குத் தொடர்புடைய உபாசனை ஞானம் இல்லாவிட்டால் இந்த நாமங்களுக்குப் பொருள் கூறுவது கடினம். வெறும் நிகண்டுப் பொருள், சாகித்தியப் பொருள் கூறினால் போதாது. அக்காரணத்தால்தான் இதற்குக் கூட அத்தகைய முக்கியத்துவம் காணப்படுகிறது.
கணபதி சகஸ்ரநாமங்களை கவனித்தால் ஒருபுறம் மந்திர சாஸ்திரம்… மறுபுறம் அற்புதமான கவித்துவம்… இன்னொருபுறம் சாஸ்திரத் தொடர்பான மகிமை… ஒவ்வொரு அக்ஷரத்திலும் காணப்படுகிறது. எண்ணிக்கையின் வரிசைப்படி சில நாமங்கள் சிறப்பாக விளங்குகின்றன.
கணபதி சஹஸ்ரநாமங்களில் விஸ்வ ரகசியங்கள் அனைத்தும் மறைந்துள்ளன. கணபதிக்கு தொடர்புடைய திவ்ய லோகம், மந்திர விசேஷங்கள் அவற்றில் காணப்படுகின்றன.
லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர் கணபதி சகஸ்ரநாமத்திற்கும் “கத்யோதிநீ வ்யாக்ய” என்ற பெயரில் பாஷ்யம் எழுதி உள்ளார்.
மிகச் சிறப்பான சகஸ்ரநாமங்கள் இவை. மகிமை பொருந்தியவை. மிகவும் ஆழமான அர்த்தங்கள் கொண்டவை. சாஸ்திரத்துக்கு இருக்கும் சிறப்பு இந்த ஸ்தோத்திரத்திற்கும் உள்ளது.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



