
சபரிமலை பிரச்னையில் கேரள அரசு சில ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த பினராயி அரசு மேற்கொண்ட பிடிவாதத்தால் கடந்த சீசனில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் மா.கம்யூ., படுதோல்வியை சந்தித்தது.
இதையடுத்து சபரிமலை விவகாரம்தான் கட்சியின் தோல்விக்கு காரணம் என்பதை செயற்குழு பகிரங்கமாக ஒப்புக் கொண்டது .இந்நிலையில் பந்தளம் மன்னர் தொடர்ந்த வழக்கில், சபரிமலைக்காக ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வர உள்ளதாக பினராயி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தகவல் பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பந்தளம் மன்னர் குடும்ப வசம் உள்ள ஐயப்பனின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க வேண்டும் என 2006ம் ஆண்டு தேவ பிரஸ்ஸனத்தில் கூறப்பட்டது.
இதை எதிர்த்து பந்தளம் மன்னர் ராமவர்மா 2007-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 12 ஆண்டுகளில் 21 முறை விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் அண்மையில் கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சபரிமலையை நிர்வகிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்’ என குறிப்பிட்டுள்ள தகவல் பரவி வருகிறது.
ஆனால் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இதை மறுத்துள்ளார். இப்படி ஒரு சட்டம் வருவது பற்றி அரசுக்கோ, தேவசம்போர்டுக்கோ தெரியாது என்று போர்டு தலைவர் பத்மகுமாரும் மறுத்துள்ளார். ஆனால் பக்தர்கள் இதை நம்பவில்லை. பினராயி அரசு ஏதோ ரகசியமாக திட்டமிட்டு வருவதாக சந்தேகிக்கின்றனர்.
அவ்வாறு சட்டம் கொண்டு வரப்பட்டால் மீண்டும் சபரிமலை சீசனில் பெரும் குழப்பம் ஏற்படும். பினராயி அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு, சபரிமலையில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றன