
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, 8 ஆண்டுகளுக்கு முன், சொந்த ஊருக்கு வந்தார்.
அதன்பின், வெளிநாட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த போது, அவருக்கும் அவரது மனைவி மரியலீலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஊருக்கு வந்தவுடன் மகன்களுடன் வசித்து வந்தார்.
மரியலீலா அதே வீட்டில் மற்றொரு அறையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென பாக்கியராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தற்போது சரியாக நடக்க முடியாமல் இருந்ததால், தனது சொத்துக்களை மகன்களான விக்டர் மற்றும் ரிச்சர்டு ஆகியோருக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

இதற்கு அவரது மனைவி மரியலீலா கடும் எதிர்ப்பு தெரிவித்து, சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்றும், இல்லா விடில் சொத்துக்களை பிரிக்கக்கூடாது என்று கூறியதால், மீண்டும் நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மரியலீலா, கணவர் தங்கியிருக்கும் அறைக்கு சென்று, அங்கு கட்டிலில் படுத்திருந்த கணவர் பாக்கியராஜ் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து உடல் கருகி கிடந்த பாக்கியராஜை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர், தன் மீது மனைவி மரியலீலா மண்எண்ணை ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்து, புகார் அளித்ததால் காவல்துறையினர் அவரது மனைவியை கைது செய்தனர். அதன்பின், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் இறந்தார்.