‘பறவைச் சித்தர்’ ஸ்ரீசக்கரை அம்மா

sakkaraiammabஓம் நமசிவாய’ – அடியார்களின் கோஷம் நம் காதுகளின் வழியே நெஞ்சைத் தொடுகிறது. சென்னையின் கடற்கரைப் பயணத்தில், திருவான்மியூர் சாலையில் செல்லும் எவரையும் உள்ளிழுத்து அருள் வழங்கும் அற்புத ஆலயம் மருந்தீசர் ஆலயம். உள்ளத்தில் புகுந்த ஓம்கார ஒலியால் ஆலயத்தின் உள்ளே புகுந்த நமக்கு மருந்தீசரின் தரிசனம் அற்புதமாகக் கிட்டுகிறது. அடியார்களின் தேவாரத் திருப்பாடல்கள் உள்ளத்தை ஈரமாக்குகின்றன. அந்த உணர்வுடனே திருக்கோயிலை விட்டு வெளியே வருகிறோம். தெப்பக்குளத்தை ஒட்டி இடப்புறம் திரும்பி, நேராக கலாக்ஷேத்ரா சாலை நோக்கி பயணிக்கிறோம். சிறிய சாலை. இடையில் ஒரு சாலை குறுக்கிடுகிறது. அதையும் தாண்டி நேரே செல்ல முயலும்போது, இடப்புறம் ‘சக்கரை அம்மா ஆலயம்’ என சேதி தெரிவித்து அழைக்கிறது, அறிவிப்புப் பலகை ஒன்று.

பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணியபடியே உள்ளே நுழைகிறோம். மரம் செடிகள் என இயற்கை அழகு கூடிய அருமையான ஆலயத்தைப் பார்த்து அப்படியே சிலையாக நிற்கிறோம்.

மிகச் சிறிய ஆலயம்தான் எனினும் அவ்வளவு அழகு; அத்தனை நேர்த்தி!

வாசலில் வாட்ச்மேன் பாலகிருஷ்ணன் இன்முகத்துடன் வரவேற்கிறார். கோயிலுக்குள் நுழைகிறோம். சிறிய சந்நிதி. கருவறையின் உள்ளே பளீரெனக் காட்சி தருகிறது சக்கரை அம்மாவின் கல் விக்கிரகம்! உள்ளே ஆழ்ந்த அமைதி. இந்த அமைதி தரும் அதிர்வலைகள், நம்மை இந்த உலகத்தையே மறக்கச் செய்கிறது; தியான நிலைக்குத் தூண்டுகிறது. விஸ்வநாத குருக்கள் சக்கரை அம்மாவுக்கு தீபாராதனை காட்டினார். நமக்கு விபூதி குங்குமம் கொடுத்து விட்டு, ”சார்… இந்த விபூதி மிகவும் மகத்துவம் வாய்ந்தது. எத்தனை பேரின் துன்பத்தை நீக்கியிருக்கிறது தெரியுமா?” என்று சொல்லி, ஓர் அற்புதத்தை சொல்லத் தொடங்குகிறார்.

”ஒரு முறை யார் மூலமாவோ கேள்விப்பட்டு ஒருத்தங்க வந்தாங்க. அவங்களோட பொண்ணு பதினாறு வயசாகியும் ருதுவாகலைன்னு சொல்லி, சக்கரை அம்மா சந்நிதில அழுதாங்க. விபூதியக் கொடுத்து, கொஞ்சமா சாப்பிடக் கொடுங்கன்னு சொல்லி அனுப்பினேன். ரொம்ப பயபக்தி யோட வாங்கிட்டுப் போனவங்க, ஊருக்குப் போய் மகளுக்கு விபூதியக் கொடுத்திருக்காங்க. அடுத்த ஒரே வாரத்துல அந்தப் பெண் புஷ்பவதியாயிட்டான்னு சந்தோஷமா தகவல் சொன்னாங்க… இப்படி எத்தனையோ அற்புதங்கள்…”

குருக்கள் சொல்ல, கேட்டவாறே சந்நிதியை வலம் வருகிறோம். ஆலயத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பாலகிருஷ்ணன் என்பவர், கோயிலைப் பற்றி விவரித்தபடியே உடன் வருகிறார். இடப்புறம் சிறிய அரங்கம். இங்கு உபந்யாசங்கள், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் முதலானவை அடிக்கடி நடைபெறுமாம். திருவான்மியூர்வாசிகளுக்கு நல்ல ஆன்மிக விருந்துதான்! அரங்கின் பின்புறம் டாக்டர் நஞ்சுண்டராவின் மார்பளவு சிலை. ஆலயத்தின் பின்புறம் அழகான கூடம். சிறுவர் சிறுமியருக்கு ஆன்மிக-நீதிக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒருவர். விசாரித்தோம். பெயர் சுமனா சுரேஷ். இவர்தான் டாக்டர் நஞ்சுண்டராவ் பிரைவேட் ரிலீஜியஸ் டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர். இந்த சமாதிக் கோயிலை நிர்வகிப்பது இந்த டிரஸ்ட்தானாம். இங்கே ஒவ்வொரு வியாழக்கிழமையும் நஞ்சுண்டராவின் பேரன் டாக்டர் ஆர். நஞ்சுண்டராவ் ஏழைகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து வழங்கி வருகிறார்.

வலப்புறம் மிக அழகிய தியான மண்டபம். பச்சைப் பசேல் என விரிந்திருக்கும் புல்வெளி. மனதுக்கு அமைதி தரும் செயற்கை நீரூற்று. நடுவே தியான நிலையில் புத்தர் சிலை. தண்ணீர், அருவிபோல் விழுகிறது. எதிரே எண்கோண மண்டபத்தில், கண்ணாடிப் பேழை ஒன்றில் சக்கரை அம்மாவின் சிலை! தரை படு சுத்தம். அமர்ந்து தியானம் செய்யத் தோன்றுகிறது. கண்மூடி சில நிமிடங்கள் தியானம் செய்கிறோம். மனம் லேசாகிறது. ஏதோ ஓர் அமைதி உள்புகுந்ததை உணர்கிறோம். எழுந்து வெளியே வருகிறோம். ‘டாக்டர் நஞ்சுண்டராவ் ரிலீஜியஸ் டிரஸ்ட்’ எனும் வரிகள் நம் கண்களில் படுகிறது.

யார் இந்த நஞ்சுண்டராவ்?

மகாகவி பாரதியைப் படிக்கும்போது, நஞ்சுண்டராவும் அங்கங்கே வருவார். புகழ்பெற்ற ஆங்கிலமுறை மருத்துவர்; சிறந்த தேசபக்தர். ஆங்கில அரசிடம் இருந்து பாரதியை பாதுகாத்தவர்; சுவாமி விவேகானந்தரின் சீடர். பாரதி ஆசிரியராக இருந்த ‘பாலபாரதம்’ இதழின் நிறுவனர். இவரே சக்கரை அம்மாவின் பெருமையை உணர்ந்து, அவருக்கு சீடராகி, அம்மாவின் புகழைப் பரப்பியவர்.

அவர் குறிப்பிடுகிறார்… ”முக்தி என்பது என்ன என்பதை எழுத்தறிவற்ற எளிய அந்தணப் பெண்மணி ஒருவரைக் கண்டபின்தான் தெரிந்துகொண்டேன். அவர்தான் கோமளீஸ்வரர் மடத்து சக்கரை அம்மா. அவர் எப்போதும் இருந்த ஆனந்த நிலையே அவரது மகிமைக்குச் சான்று. உடலின் ஒவ்வோர் அணுவிலும் பரிபூரண ஆனந்தத்தை வெளிப்படுத்திய வேறு எவரையும் நான் கண்டதில்லை…”

இந்த நிலை ஸித்திக்க, அனந்தாம்பாள் என்ற சக்கரை அம்மா என்ன தவம் செய்தார்? அவர் இந்தப் பெயர் பெற்றது எப்படி?

அது 1854ஆம் வருடம். வட ஆற்காடு மாவட்டம் போளூரில் உள்ள சிற்றூரான தேவிகாபுரத்தில் வசித்துவந்த சேஷ குருக்கள் என்ற சிவாச்சார்யரின் குடும்பத்தில் பிறந்தார் அனந்தாம்பாள். பிறந்த சில காலத்திலேயே அன்னையை இழக்க நேர்ந்தது. அவரின் சித்தி சுப்பம்மாவே அனந்தாம்பாளை வளர்த்து வந்தார். சுப்பம்மாவின் சகோதரர் சாம்பசிவ சிவாச்சார்யர் அப்போது சென்னை கோமளீஸ்வரன்பேட்டை கோமளீஸ்வரன் மடத்தில் அதிபதியாக இருந்தார். அவருடைய மனைவி இறந்ததால், அனந்தாம்பாளை அவருக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்தனர். அப்போது அனந்தாம்பாளுக்கு வயது ஒன்பது. சாம்பசிவ சிவாச்சார்யருக்கு வயது 24.

இளவயது தடுமாற்றத்தில் சாம்பசிவ சிவாச்சார்யர் துர்நடத்தை கொண்டவரானார். சிறு வயதானாலும் கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடையைச் செய்து விட்டு, எந்நேரமும் கோமளீஸ்வரன் ஆலயத்தில் அடியாருடன் அடியாராக வழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினார் அனந்தாம்பாள். நாளின் முக்கால்வாசி நேரம் சிவ-சக்தி வழிபாட்டில் சென்றது. உலகப் பற்று அறுந்து, உலகநாதன் இறைவன் பேரில் பற்று வளர்ந்தது.

அதிவேக ஆட்டத்தின் இறுதியாக, சாம்பசிவ சிவாச்சார்யர் தன் 34-ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார். அப்போது அனந்தாம்பாளுக்கு வயது 20. உறவினர் தடுத்தும் கேளாமல், 11-ஆம் நாள், தலை மழித்து வெள்ளுடை தரித்து வீட்டின் மொட்டை மாடியில் உள்ள திண்டில் அமர்ந்து மோனத் தவத்தில் ஈடுபடத் தொடங்கினார் அனந்தாம்பாள்.

பத்து வருடங்கள்… குளியல் இல்லை; உணவு இல்லை; தண்ணீர்கூட அருந்தவில்லை. பத்தாவது வருட முடிவில், ஓர் பரவொளியைக் கண்டார் அனந்தாம்பாள். இந்த ஒளியே… அவரது சித்தத்தை ஈர்த்தது; பரவசம் தந்தது. ஜோதி தரிசனம் கண்ட பின்னே, சித்தம் ஜோதிஸ்வரூபன் மீதே முழுவதும் சென்றது.

அதன் பின், அவர்  கோமளீஸ்வரன் ஆலய வாசலில் அமர்ந்து உரக்கச் சிரிப்பாராம். அனைவரும் அவரை சித்தம் கலங்கியவர் என்றே எண்ணி விலகிச் சென்றனர். நஞ்சுண்டராவ் கூட, அவரை அப்படியே எண்ணியிருக்கிறார். ஆனால், அவருடைய ஸித்திகள் கைவரப்பெற்ற நிலையை உணர்ந்து, அவரே பின்னாளில் சக்கரை அம்மா புகழ் பரப்பியவர்களின் முதன்மையானவரும் ஆனார்.

பரவொளி தரிசனத்துக்குப் பின்னே பல ஸித்திகள் அவருக்குக் கைவந்தன. மகான் ரமணர் விரூபாட்சி குகையில் இருந்தபோது, டாக்டர் நஞ்சுண்டராவுடன் வந்த சக்கரை அம்மா, ரமணருக்கு சில சூட்சும ரகசியங்களையும் சொல்லியிருக்கிறார்.

சக்கரை அம்மா அடைந்த ஸித்திகளில் குறிப்பிடத்தக்கது, ‘லஹிமா’ என்ற ஸித்தி. அது, உடலை மிக லேசாக்கி, பறவையைப் போல் ஆகாய மார்க்கத்தில் பறப்பது. கர்ம ஸித்தி வகையைச் சேர்ந்த இந்த ஸித்தி கைவரப்பெற்ற சக்கரை அம்மா, அந்தக் கால அறிவியல் அறிஞர்களின் ஆராய்ச்சிக்கும் ஆளாகியிருக்கிறார். இது, திரு.வி.க.வின் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது.

‘அம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல் மாடியில் பறந்து வந்து நின்றனர்… அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர்… நான் தேசபக்தன் ஆசிரியனானபோது, டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழக நேர்ந்தது. பறவையாரைப் பற்றி நான் அவரிடம் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தர் இனத்தில் சேர்ந்தவர்’ என்றார்…’ – தமிழ்த்தென்றல் திரு.வி.க தாம் எழுதிய ‘உள்ளளி’ என்ற நூலில் நேரில் கண்ட சாட்சியாக சக்கரை அம்மாவைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

”சக்ர பூஜை செய்துவந்ததால், அனந்தாம்பாள் என்ற பெயர் மாறி, சக்கரத்தம்மா, சக்கரை அம்மா, சக்கரை அம்மன் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்பட்டுள்ளது.” – இப்படிச் சொன்ன ஆலய குருக்கள் விஸ்வநாத சிவாச்சார்யரின் அப்பா பாலசுப்பிரமணிய சிவாச்சார்யர், சக்கரை அம்மாவின் பேரனாம். இவர்கள் கோமளீஸ்வரன் மடத்திலிருந்து சிறப்பு தினங்களில் சக்கரை அம்மா ஆலயம் வந்து பூஜைகளைச் செய்கிறார்கள். இன்றும் கோமளீஸ்வரன்பேட்டை (தற்போது புதுப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது) மடத்தில் சக்கரை அம்மா மொட்டை மாடியில் அமர்ந்து தியானம் செய்த திண்டு, அவருடைய சிலை, படங்கள் எல்லாம் இருக்கின்றன.

தன் பூவுடலைத் துறக்க காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த சக்கரை அம்மா, திருவான்மியூர் மருந்தீசரை தரிசித்தார். அப்போது, நஞ்சுண்டராவ் தன் சொந்த இடத்தில் சமாதிக் கோயில் எழுப்பக் கேட்டார். தற்போதுள்ள இந்த இடத்தை சுட்டிக் காட்டினாராம் சக்கரை அம்மா.

ஆனால், ”ஆள் நடமாட்டம் இல்லாத இந்த இடத்துக்கு யார் வருவார்?” என்று கேட்டதற்கு, ”இன்னும் நூறு வருடம் கழித்துப் பாருங்கள்…” என்று மெள்ள புன்னகைத்தபடி சொன்னாராம் அம்மா!

1901 பிப்ரவரி 28-ஆம் தேதி, தனது 47-வது வயதில் ஜீவன் முக்தி அடைந்த சக்கரை அம்மா சொன்னதுபோல், இந்த ஆலயம் 2002-ல்தான் நன்கு அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தற்போது பிரபலமாக விளங்குகிறது.

ஆனால், இதன் பெருமையை முன்னரே உணர்ந்திருந்த காஞ்சி மகாபெரியவர், 1948 ஜனவரியில் ஐந்து நாட்கள் இங்கே தங்கி தியானம் செய்தாராம்.

சித்தர்கள் மகான்களின் புண்ணிய பூமியான இங்கு, அண்மைக் காலத்தில் வாழ்ந்த சக்கரை அம்மாவின் கோயிலை தரிசித்து, வேண்டியது நிறைவேறி, ஆனந்தமும் அமைதியும் பெறுவோம்.