
திருப்பதி திருமலை பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்திலிருந்து வருடந்தோறும் இரு விதமான ஊர்வலங்களுடன் விசேஷப் பொருள்கள் சமர்ப்பிக்கப் பட்டு வருகின்றன. ஒன்று ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் களைந்த மாலை. மற்றொன்று 200 ஆண்டுகளாக சென்னையில் இருந்து சமர்ப்பிக்கப்படும் திருக்குடை ஊர்வலம்!
இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று தொடங்கியது. முன்னதாக திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை காலையில் நடைபெற்றது. திருக்குடை புறப்பாட்டு விழாவை விசாகப்பட்டினம் சாரதா பீடத்தின் பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஆத்மானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, வேதாந்தம்ஜி, விஸ்வ ஹிந்து பொதுச்செயலாளர் கிரிஜா சேஷாத்திரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருப்பதி பிரம்மோற்ஸவ கருட சேவையை முன்னிட்டு 11 திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருப்பதியில் சமர்ப்பிக்கப்படுகின்றன. சென்னை, சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை 11.30க்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கியது.
நேற்று மாலை யானைக்கவுனி சென்றடைந்த இந்த ஊர்வலம் அக்டோபர் 3ஆம் தேதி திருமலையை சென்றடைகிறது.

அக்.3 ஆம் தேதி அன்று மாலை 3 மணிக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதில் இரண்டு குடைகள் திருச்சானூரில் சமர்ப்பிக்கப்படுகின்றன.
விசாகப் பட்டினம் சாரதா பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பேசியபோது, ஹிந்து தர்மம் கலாச்சாரம் பண்பாட்டைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழகத்தில் வேற்று மதத்துக்குச் சென்ற அனைவரையும் அரவணைத்து மீண்டும் தாய் மதமான இந்து மதத்திற்கு கொண்டுவரவேண்டிய முயற்சியை நாம் செயல்படுத்த வேண்டும்.
ஹிந்து தர்மத்தை தமிழகத்தில் பாதுகாக்கும் பணியைச் செய்கிறார் வேதாந்தம். ஹிந்து தர்மத்தை பாதுகாக்க 60 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். எங்கும் காணாத அதிசயமாக இவ்வளவு பெண்களும் ஆண்களும் பங்கேற்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திவரும் ஆர்ஆர் கோபால்ஜியை மனமுவந்து பாராட்டுகிறேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினரும் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவுமான குமரகுரு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சிறப்பு அழைப்பாளர் சேகர் ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.





