November 30, 2021, 7:47 am
More

  “அப்பாவைப் பார்க்கணும்!” (பக்தியின் அதீத நிலை)

  “அப்பாவைப் பார்க்கணும்!”

  -ஹாஸ்பெட் டாக்டர் ஆனந்தவல்லி அம்மாள். (பக்தியின் அதீத நிலை)

  (தன்னைப் பெற்ற தந்தையாகவே நினைத்து நள்ளிரவில் கதவைத் தட்டிய டாக்டர் ஆனந்தவல்லி)
  மெய்சிலிர்க்கும் கட்டுரை-20-03-2014 பதிவு)

  சொன்னவர்;சத்தியகாமன்,சென்னை-45
  தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
  தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

  ஈசுவரனைப் பலவாறாக உறவு கொண்டாடி, பக்திசெய்து மேன்மை அடைவது அடியார்கள் கைக்கொள்ளும் நெறி. இறைவனை, நண்பனாக ,அன்னையாக, யஜமானனாக, தந்தையாகப் பாவித்துப் போற்றுவார்கள்.

  ஹாஸ்பெட் டாக்டர் ஆனந்தவல்லி அம்மாள், மகாப்பெரியவாளைத் தன்னைப் பெற்ற தந்தையாகவே- இல்லை; அதற்கும் மேலே, மேலே ஓர் உயர்நிலையில் ‘அப்பா’வாகவே அடையாளம் கண்டு கொண்டுப் பழகினார்.

  பெரியவாள் ஹம்பியில் தங்கியிருந்த காலம், நாள் தோறும் டாக்டர் அம்மாள் வந்துவிடுவார்-தரிசனத்துக்கு ஐந்து நிமிஷமாவது பெரியவாளுடன் பேசாமல் போக மாட்டார். நம்மைப் போல், பெரியவா எதிரில், கூனிக் குறுகிக்கொண்டு, வாயைப் பொத்திக்கொண்டு பேசுகிற பக்திப் பாசாங்கு இல்லாமல் பேசுவாள்.பேச்சு மெய்ப்பாடுகள், குரல், எல்லாம் இயல்பாக இருக்கும். பெரியவாளுடன் பல ஆண்டுகள் பழகி, ‘அவரை விட்டால் வேறு கதி இல்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட்டதைப் போலிருக்கும்.

  ஐந்து நிமிஷத்துக்குள், ஐம்பது ‘அப்பா’ வந்துவிடும். அப்பா என்ற சொல்லே டாக்டர் ஆனந்தவல்லிக்காகவே படைக்கப்பட்டதாகத் தோன்றும்

  .நொடிக்கு நொடி, ‘அப்பா’ என்பாரே தவிர, ஒவ்வொரு சொல்லிலும் ஒரு தாயாரின் கரிசனம் தெரியும். “நீங்க தினமும் ஃப்ரூட் ஜூஸ், ரெண்டு தடவையாவது சாப்பிடணும்,அப்பா..’ ஏகாதச அன்னிக்கு நாலு தடவையாவது பால் சாப்பிடணும் அப்பா, அது ஒண்ணும் தப்பில்லே, உபவாசம் கெட்டுப் போயிடாது அப்பா.” இப்படி எத்தனையோ உபதேசங்கள், பெரியவாளுக்கு

  ஆனால், இப்படிய்யெல்லாம் சொல்லும்போது, ஒரு தினையளவு கர்வம் தலைகாட்ட வேண்டுமே? இந்தச் சலுகை எனக்கு மட்டும் தான் என்ற தன்முனைப்பு? ஊஹூம்.

  டாக்டரின்’அப்பா’வில் தனியானதொரு மணம் வீசும். பின்னணியில் கந்தர்வக் குழுவினர் ஆனந்த பைரவி பாடுவதைப் போலிருக்கும். கின்னரப் பெண்டிரின் கால் சதங்கையின் லயம் தவறாத ஒலி நெஞ்சை நிறைக்கும்.

  பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் தொண்டர்களுக்கு,அந்த அம்மையாரிடம் ஓர் இளக்காரம். டாக்டர் வந்து, ஆயிரம் அப்பாக்களால் பெரியவாளுக்கு சஹஸ்ர நாமம் செய்து விட்டுப் போனபின்னர், தொண்டர்கள் தங்கள் ஏளனங்களை வாய்விட்டுப் பேசி, திருப்தி அடைவார்கள்.

  ‘என்னப்பா,சந்த்ரமௌளி,குளிச்சுட்டயாப்பா? கண்ணா, துணி துவச்சுட்டயாப்பா..’ ]]குமரேசன் அப்பா, இன்னும் சாப்பிடலயாப்பா..” (தொண்டர்களின் ஏளனப்பேச்சு)

  ஆனால் டாக்டரின் ‘அப்பா’ வைரக்கல்; பட்டை தீட்டப்பட்ட கோஹினூர்.

  ஒருநாள் இரவு நள்ளிரவு தாண்டிவிட்ட நேரம். கட்டிடத்தின் வெளிப்புறக் கதவு தட்டப்படும் ஓசை. தொண்டர்களுக்கு அலுப்பு, ஆயாசம், களைப்பு, அடியார்கள் சிலரும் அங்கே தங்கியிருந்தார்கள்.

  வேறு வழியில்லாமல் ஒரு தொண்டர் தட்டுத் தடுமாறி நடந்து வாசற் கதவைத் திறந்தார்.

  திகைத்தார், வேரோடிப் போனார், யா…யார்? டாக்டர் ஆனந்தவல்லி அம்மையார்…!

  “அப்பாவைப் பார்க்கணும்…”

  கெஞ்சல் இல்லை; அதட்டல் இல்லை; ஆவேசம் இல்லை. இயல்பான குரல்.

  தொண்டருக்கு வந்ததே, கோபம்.

  “உங்களுக்கு என்ன பைத்தியமா,டாக்டர்?.. இந்த ரத்திரி வேளையிலே பெரியவாளை எப்படிப் பார்க்கிறது?..”

  “அப்பாவைப் பார்க்கணும்”

  “என்னடா அங்கே தகராறு?” என்று உட்புறத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

  “அப்பாவைப் பார்க்கணுமாம்..”

  “யாரு? டாக்டரா?”

  இந்தத் தொண்டர் எழுந்து சென்று வழி மறிப்பதற்குள் அம்மையார்,இருவரையும் மீறிக்கொண்டு உள்ளே வந்து விட்டார்.

  “அப்பாவைப் பார்க்கணும்” என்றார்,சாந்தமாக.

  “நீங்க..மண்ணாங்கட்டி மரியாதை என்ன? நீ நிஜமான டாக்டரா? போலி டாக்டரா?.. ராத்திரியில் பெண்கள் மடத்துக்கு வரக்கூடாது

  .”அப்பாவைப் பார்க்கணும்” என்றார்,உறுதியாக.

  “இவ சொன்னா போகமாட்டா…அடிச்சுத்தான் அனுப்பணும்.

  ஐந்தாறு ஆவேசக்குரல்களை மீறி, உள்ளே ஒரு கதவு திறக்கப்படும் மெல்லிய ஒலி.

  திரும்பிப் பார்த்தார்கள், பெரியவாள்! தான் படுத்திருந்த அறைக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்தார்கள்.

  தடாலென்று விழுந்து வந்தனம் செய்தார், அம்மையார். “அப்பா..அப்பா…அப்பா.”

  அமுதத்தில் தோய்ந்தெடுத்த அப்பாக்கள்!

  தரிசனம் ஆகிவிட்டது போகவேண்டியது தானே? போகவேண்டியது தான். ஆனால் சைகைகாட்டிப் பெரியவாள் அழைக்கிறார்களே?

  அடடா… அரைமணி நேரம் வெகுசங்கடமான நேரம். முன்னரோ,பின்னரோ நிகழ்ந்ததேயில்லை.

  “பக்கத்து கிராமத்திலே ஒரு கேஸ், அப்பா, ரொம்ப க்ரிடிகல். தேவையான மெடிஸின்ஸ் கைவசம் இல்லே..சின்ன வயசுப் பொண்ணு.. ரொம்பப் போராடினேன். என்னாலே முடியல்ல.. அப்பா,அப்பான்னு நூற்றெட்டு தடவை சொன்னேன்… உயிர் வந்துடுத்து..! பகல்லே அப்பாவைப் பார்க்கமுடியல்லே. கிராமத்திலேர்ந்து வந்தவுடனே இங்கே வந்துட்டேன்..”

  ஐந்து நிமிஷம் ஓர் அரவம் இல்லை.

  பெரியவா மெல்லிய குரலில் கேட்டார்கள்.

  “ராத்திரி வேளையிலே ஸ்திரிகள் மடத்துக்கு வரக்கூடாது..நான் தற்செயலா முழிச்சிண்டு வெளியே வந்தேன். இப்போ என்னைப் பார்க்க முடியல்லேன்னா என்ன பண்ணியிருப்பே?”

  அம்மையார் விக்கித்துப் போய்விட்ட மாதிரி தெரிந்தது.

  “என்னப்பா, இது? இவர்கள் மாதிரி, நீங்களும் கேட்கிறேள்? அப்பாவைப் பார்க்கணும் என்கிற எண்ணம் இருந்ததே தவிர அது முடியாமற் போகலாம் என்று எனக்குத் தோன்றவே யில்லையப்பா !அது எப்படி முடியாமற்போகும்? என் அப்பாவைப் பார்க்கணும்..அவ்வளவு தான். ராத்திரியோ,பகலோ எனக்கு என்ன அப்பா?”

  பெரியவாளின் சிரம், நாற்புறமும் சுற்றிவிட்டு, ஓர் இடத்தில் நிலைகொண்டது. அங்கேயிருந்த ஒரு முழம் மல்லிகைச் சரத்தையும் ,மாம்பழத்தையும் தட்டில் வைத்து, பெரியவாள் ஆசியுடன் அம்மையாரிடம் கொடுத்தார்,தொண்டர்.

  வந்தனம் செய்துவிட்டு,”அஞ்சு மணிக்கு விசுவரூப தரிசனத்துக்கு வந்துடறேன்”ப்பா என்று சொல்லிவிட்டு ஓர் அரசகுமாரியின் வீறாப்புடன் வாசல் நோக்கி நடந்து சென்றார்,டாக்டர்.

  நடந்ததெல்லாம் கனவா,நனவா என்றே புரியவில்லை. தொண்டர்களுக்கு.

  விடியற்காலம், விசுவரூப தரிசனத்துக்கு ஆஜரானார் டாக்டர்.

  ஆனால், தொண்டர்கள் கண்களுக்கு ஒரு தேவதையாகக் காட்சி தந்தார்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-