
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவிலில் வரும் 28ஆம் தேதி குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வரும் அக்டோபர் 28ஆம் தேதி திங்கட்கிழமை பிரதமை திதியும், சுவாதி நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய தினத்தில் இரவு 12.57க்கு குருபகவான் (வியாழன் பகவான்) விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குள் பிரவேசம் செய்கின்றார் !

இதை முன்னிட்டு, அக்.26ஆம் தேதி சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனையும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம். ஆதனைத் தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மாலை 5.00 மணிக்கு சிறப்பு மேளம், 5.30க்கு சிறப்பு அபிஷேகம், 7.00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.
28ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு தேவார இன்னிசை, மதியம் 12.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5.00 மணிக்கு நாம சங்கீர்த்தனம், 7.00 மணிக்கு ருத்ர ஏகாதசி, இரவு 10.00 மணிக்கு சிறப்பு மேளம், இரவு 12.57க்கு குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் ஆகியவை நடைபெறும்! தொடர்ந்து குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையிலும், மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரையிலும் திரு நடை திறந்திருக்கும்
28ஆம் தேதி குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.00 மணி முதல் இரவு 12.57 குரு பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம் தீபாராதனைக்கும் பின்பும் 3.00 மணி வரையில் திரு நடை திறந்திருக்கும்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணை ஆணையர், செயல் அலுவலர், தக்கார் அன்புமணி, ஸ்ரீகாரியம் ரத்தினவேலு மற்றும் கோவில் பணியாளர்கள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

புளியறை ஆலயத்துக்குச் செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப் பட்டுள்ளன. தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து நகரப் பேருந்துகள், ரூட் பஸ்கள் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை கொல்லம் நெடுஞ்சாலையில் செங்கோட்டையிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி – கொல்லம், கொல்லம் – திருநெல்வேலி, மதுரை – செங்கோட்டை, செங்கோட்டை – மதுரை, திருநெல்வேலி – செங்கோட்டை, செங்கோட்டை – திருநெல்வேலி பயணியர் இரயில் வசதி உள்ளது. ரயில்களில் ஏறி, செங்கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கினால், இங்கிருந்து ஆட்டோ வசதி நிறைய உள்ளது. ஷேர் ஆட்டோக்களில் புளியறை கோயிலுக்குச் செல்லலாம்



