
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் ஒண்ணுபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் ஆலயம் உள்ளது.
சிதிலமடைந்திருந்த பழைமையான ஆலயத்தை நீக்கிவிட்டு, கருங்கல்லால் ஆன புதிய சிவாலயத் திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இத்தலத்தில் தற்போது திங்கட்கிழமை வார வழிபாடு,பௌர்ணமி பூஜை, பிரதோஷ கால பூஜைகள் ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரருக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அத்தி லிங்க தரிசனம்
சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது. இந்த லிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப் படுகிறது. அவற்றில் 1008 லிங்கங்களில் அத்தி லிங்கமும் ஒன்று.
இத்தலத்தில் பக்தர்களுக்கு அத்தி லிங்க தரிசனம் கிடைப்பது மேலும் சிறப்பு சேர்க்கிறது.
குடும்ப ஒற்றுமை வரம் நல்கும் இறைவன் இறைவி :
கணவன் மனைவி ஒற்றுமை, பிணக்குகளால் பிரிந்த சகோதர சகோதரிகள் ஒற்றுமை ஏற்பட இத்தல சுந்தராம்பிகை சமேத கச்சபேஸ்வரருக்கு அபிஷேக பூஜைகள் செய்து, புது வஸ்திரம் சாற்றி, தயிர் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை.



