“என்ன….அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?”-பெரியவா
(அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால்,அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்’என்பது சாஸ்திர வாக்கியம்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-2
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
கும்பகோணத்திலிருந்து ஆயுர்வேத வைத்தியர் ஸ்ரீலக்ஷ்மிகாந்த சர்மா வந்தார். பெரியவாளிடம் மிகுந்த பக்தி உடையவர்.
அவரிடம், “என்ன….அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?” என்று பெரியவா கேட்டார்கள்.
அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது.”என்னது?… லக்ஷ்மிகாந்த சர்மா குதிரைப் பந்தயம் போகிறாரா? அக்ரமம்!” என்று திகைத்துப் போனார்கள்.
ஆனால் ஸ்ரீசர்மா, கொஞ்சமும் கூச்சப்படாமல் மிகவும் இயல்பாக, “பெரியவா அனுக்ரஹத்தில் நன்னா நடந்துண்டு இருக்கு” என்று பதில் சொன்னார்.
விஷயம் வேறொன்றுமில்லை.
பெரியவா உத்தரவுப்படி, ‘அநாதைப் பிரேத ஸம்ஸ்கார சமிதி’ என்ற பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தி, அநாதையாக இறந்து விட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று,உரிய முறையில் ஸம்ஸ்காரம் செய்வது என்ற மிக உயர்ந்த பணியை ஸ்ரீசர்மா செய்து வந்தார்.
‘அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால், அசுவமேத யாகம்செய்த புண்ணியம் கிடைக்கும்’என்பது சாஸ்திர வாக்கியம்.இந்த சமூக சேவையைப் பற்றிதான் பெரியவாள் சூசகமாக ‘அசுவமேத யக்ஞம் நடக்கிறதா?என்று ஆழ்ந்த பொருளுடன் கேட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
அநாதை பிரேத ஸம்ஸ்காரம் என்ற சமூக சேவை பெரியவாளின் சேவா காரியங்களில் மிக முக்கியமானது. என்பதை நினைவுப்படுத்திக் கொள்வது அவசியம்.
“என்ன….அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?”-பெரியவா
Popular Categories



