
பெஜாவர் மடத்தின் விஸ்வேஷ தீர்த்த சுவாமி 88வது வயதில் முக்தி அடைந்தார்.
பெஜாவர் மடத்தின் சுவாமிகள் விஸ்வேஷ தீர்த்தர் தமது 88 வயதில் ஞாயிற்றுக்கிழமை இன்று உடுப்பியில் வைத்து முக்தி அடைந்தார்.
டிசம்பர் 20 ஆம் தேதி நிமோனியா சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் வென்டிலேட்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்துக்கு மாற்றப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களில் அவர் முக்தி அடைந்தார்.
கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, பெஜாவர் மடத்துக்கு வந்து வணங்கினார். பின்னர் மூன்று நாள் மாநிலத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றார். அவருக்கு மாநில அரசின் மரியாதைகளுடன் அந்திம காரியங்கள் நடத்தப் படும் என்று அறிவித்தார்.

எம்.எல்.ஏ., ரகுபதி பட், கூறுகையில், சுவாமிகளின் பூதவுடல் ஸ்ரீ கிருஷ்ணா மடத்துக்கும், மாத்வா சரோவர் குளத்தில் புனித நீராடுவதற்கும் எடுத்துச் செல்லப்படும் என்றார்.
சுவாமிகளின் பூதவுடல் கிருஷ்ண மடத்திலிருந்து அஜ்ஜர்காட் மைதானத்திற்கு திறந்த வாகனத்தில் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர், ஐ.ஏ.எஃப் விமானம் மூலம் பெங்களூருக்கு அனுப்பப்படும். அவரது உடல் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும். இரவு 7 மணி அளவில் பெங்களூரு பூர்ணபிரஜ்னா வித்யாபீத்தில் அவரது விருப்பப்படி அவரது சரீரம் சமாதியில் வைக்கப் படும் என்று தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
1931ம் வருடம், ஏப்ரல் 27 அன்று தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள ராமகுஜ்னாவில் எம்.நாராயணாச்சார்யா மற்றும் கமலாம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1938 ஆம் ஆண்டு, தமது எட்டாவது வயதில் துறவியாக நியமிக்கப்பட்டார். பெஜாவர் மடத்தின் வித்யமன்ய தீர்த்த சுவாமி மற்றும் பண்டர்கேரி மடத்தின் கீழ் அவர் ஆன்மீகக் கல்வியைப் பெற்றார்.
முப் பெரும் தத்துவங்களில் ஒன்றான துவைத தத்துவத்தை பரப்புகின்ற உடுப்பியின் அஷ்ட மட் (எட்டு மட்) சுவாமிகளில் ஒரு சுவாமியாக இருந்து விஸ்வேஷா தீர்த்த சுவாமி வரலாறு படைத்துள்ளார்!

800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கிருஷ்ணா மடத்தின் கோயில் பொறுப்பை ஏற்று நடத்தும் பிரத்யேக உரிமையை ஒரு பரியாயா என்பர்.
இவர் ஜனவரி 18, 1952 அன்று முதன்முறையாக இங்கு ‘பரியாய பீடம்’ ஏறினார். 1952-54, 1968-70, 1984-86, 2000-02, மற்றும் 2016-18 ஆகிய ஐந்து பரியாயாக்களை அவர் நிகழ்த்தியுள்ளார்.
ராம்ஜன்மபூமி இயக்கத்தில் முன்னணியில் இருந்த மதத் தலைவர்களில் ஒருவர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான குரலை பலமாகக் கொடுத்தார். 1992 டிசம்பர் 6 அன்று சர்ச்சைக்குரிய கட்டத்தை இடித்த வரலாற்று நிகழ்வின் போது, அவர் கலந்து கொண்டார்.
பலரால் “சீர்திருத்தவாத சுவாமிகளாக” அடையாளம் காணப்பட்டார். தலித் காலனிகளில் புகுவது கூடாது என்று கருதப் பட்ட காலத்தில், தலித் காலனிகளில் சென்று, ஆன்மிக சிந்தனைகளைப் போதித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் ஆன்மிக துறவியுமான உமா பாரதியின் குருவாக விளங்கியவர் உடுப்பி சுவாமிகள். அவருக்கு தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார் உமா பாரதி.
சுவாமிகளின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது இரங்கல் செய்தியில்: விஸ்வேஷ்வர தீர்த்த சுவாமியிடமிருந்து கற்றுக்கொள்ள பல வாய்ப்புகள் கிடைத்தது எனது பாக்கியம். உடுப்பியில் மக்களின் வழிகாட்டும் ஒளியாக இருந்த ஸ்வாமிஜி மக்களின் மனதில் நிலைத்திருப்பார். குரு பூர்ணிமாவின் புனிதமான நாளில் எங்கள் சமீபத்திய சந்திப்பும் மறக்கமுடியாத ஒன்று. அவரது ஞானம் எப்போதும் தனித்து நின்றது என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சுவாமிகளின் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக., தேசிய செயலர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



