
சிவபெருமான் ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐஞ்செயல்களை எப்போதும் இடைவிடாமல் செய்து கொண்டேயிருக்கிறார். இவ்வைந்து செயல்களையும் ஒருங்கே காட்டுகின்ற தாண்டவமே ஆனந்த தாண்டவம்.
இந்த தாண்டவம் ஆடும் மூர்த்தியை ஆனந்த தாண்டவ மூர்த்தி என்றும் ஆடவல்ல நாயனார் என்றும் கூறுவர். நாதாந்த நடனம் என்றும் வழங்கும் இந்த ஆனந்த தாண்டவத்தை சிவபெருமான் தில்லைப் பொன்னம்பலத்திலே ஆடியருளுவதாக நூல்கள் கூறுகின்றன. மார்கழி மாதத திருவாதிரை நன்னாளில் இந்த தாண்டவத்தைக் காண்பவருக்குப் பெரும்பேறு கிட்டும் என்பது உறுதி.
பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் காண்பதற்காக இந்தத் தாண்டவத்தை இறைவன் ஆடியருளினார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
தத்துவவிளக்கம்:

செந்தமிழ்ப் பாவல் குமரகுருபரர் இறைவனின் ஐந்தொழில் தத்துவக் கருத்தை தெளிவாகக் கூறியிருக்கிறார்.
பூமலி கற்பகப் புத்தேள்வைப்பும்
நாமநீர் வரைப்பில் நானின்வளாகமும்
ஏனைபுவனமும் எண்ணீங்குயிரும்
தானே வகுத்ததுன் தம்ருகக்கரமே
தனித்தனி வகுத்த சராசரப்பகுதி
அனைத்தையும் காப்பதுன் அமைத்த பொற்கரமே
தோன்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே
ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று
ஊட்டுவதாகும் நின் ஊன்றியபதமே
அடுத்த இன்னுயிர்கட்கு அள்வில் பேரின்பம்
கொடுப்பது முதல்வ நின் குஞ்சிதபதமே!
இப்பாடலின் கருத்து கூத்த்ப்பெருமானுடைய துடி ஏந்திய கை ஆக்கல் செய்லையும், அபயக்கை காத்தல் தொழிலையும், தீச்சுடர் ஏந்திய கை அழித்தல், ஊன்றிய திருவடி அருளல் செயலையும், குறிக்கின்றன. காலடியில் மிதிக்கப்பட்டிருக்கும் முயலகன் உருவம் மலத்துடன் கட்டுப்ப்ட்டிருக்கும் ஆன்மாவையும் குறிக்கிறது.
திருமேனியழகு:
ஆனந்தத் தாண்டவப் பெருமானுடைய திருவுருவம் நூல்களில் சொல்லோவியமாக கூறியிருப்பதை போல் சிற்பிகள் அழகான சிற்பமாக செய்தார்கள்.
நடராஜர் திருவுருவம் கண்ணுக்கும் கருத்துக்கும் இன்பத்தைத் தரவல்லது. சடைமுடியில் க்ங்கை,நிலாப்பிறை கொக்கிறகு பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ளார்
தாண்டவம் செய்யும் வேகத்தில் சடைமுடி அவிழ்ந்து புரிசடைகள் இருபுறமும் அலைகின்றன தாண்டவ வேகத்திலே சடைபுரிகள் மட்டுமல்லாது ஏனைய எல்லாப் பொருட்களும் ஆடுகின்றன.
ஆதிபரன் ஆட அங்கைக்கனல் ஆட
ஓதும் சடை ஆட உன்மத்தமுற்றாட
பாதிமதி ஆடப் பாரண்டமீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.!
என்ற பாடல் மூலம் இறைவனின் சடை சந்திரன் கங்கையாகிய எல்லாப் பொருள்களும் ஆட ஆனந்த தாண்டவமாடியதாக கூறப்படுகிறது.
நெற்றிக்கண்ணும் புன்முறுவல் பூத்த இதழும் மலர்ந்த முகமும் மனதைக் கவருகின்றன இடது காதில் பத்திரகுண்டலமும் வலது காதில் மகர குண்டலமும் உள்ளன. சில உருவங்களில்
சங்க குழையும் பாம்பு குண்டலமும் அமைந்திருப்பதும் உண்டு நான்கு கைகளுடன் கழுத்து கால்கள் கைகள் ஆகியவற்றின் அணிகலன்களை அணிந்துள்ளார்.
முயல் உருவம் சிறியதாகவும் விகாரமாக இருக்கும் பீடம் தாமரை மலர் போன்றும் பெருமானை சூழ்ந்து அழகுடன் காட்சியளிக்கின்றனர். இவ்வாறாக அமைந்துள்ள நடராஜர் திருவுருவம் தமிழ்நாட்டிலே ஒவ்வொரு சிவன் கோயில்களிலும் காணலாம்.

மந்திர விளக்கம்
சிவபெருமானது ஐந்து தொழிலை குறிக்கின்ற ஐந்து மந்திரமும் உண்டு அந்த மந்திரத்தை திருவைந்தெழுத்து என்றும் பஞ்சாட்சரம் என்றும் வழங்குவர் மந்திரம் என்பதற்கு தொல்காப்பியர் கூறும் சூத்திரம்
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப
கற்றுணர்ந்த சான்றோர்களால் கூறுபவை மந்திரம் ஆகும் என்பது தொல்காப்பியர் கருத்து சைவசமயத்தை நன்கு அறிந்த நிறைமொழி மாந்தர் அவை திருவைந்தெழுத்து என்னும் மறை மொழியாகும் .அதுவே நமசிவாய என்பதாகும். இவை ஒவ்வொன்றும் சிவனின் ஒரு செயலை குறிப்பதாகும் நமசிவாய என்ற பெயர் இதனால் சிவபெருமானுக்கு ஏற்பட்டது நமசிவாய என்னும் அடைமொழியை சிவாயநம என்றும் கூறுவதுண்டு.
மாணிக்கவாசகர் அருளிச் செய்த சிவபுராணத்தில் நூலின் தொடக்கத்தில் நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க என்று பாடினார். திருநாவுக்கரசு நாயனாரும் நமச்சிவாயப் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை கூறுகிறார்.
மாணிக்கவாசகர் நமசிவாய மந்திரத்தை விளக்கிக் கூறும் பாடல்
சேர்க்கும்துடி சிகரம் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் – பார்க்கிறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரமது தான்.
உடுக்கையாகிய துடியை ஏந்திய கை சி என்னும் எழுத்தையும் வீசிய கரமாகிய கஜகஸ்தம் வா எனும் எழுத்தையும் அபய முத்திரை உள்ள கை ய என்னும் எழுத்தையும் தீச்சுடர் ஏந்திய கை நா எனும் எழுத்தையும் முயலகன் ம என்னும் எழுத்தையும் குறிக்கின்றன.
நற்றுணையாவது நமச்சிவாயவே நாவினுக்கு உகந்தது நமச்சிவாயவே நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே என்று பலவாறாக திருநாவுக்கரசர் பாடியிருப்பது கொண்டு நமசிவாய மந்திரத்தின் சிறப்பை நாம் அறியலாம்.
இறைவனுடைய திருவருளை சிவகாமசுந்தரி உருவமாக பெரியோர்கள் கற்பித்தனர் சிவகாமசுந்தரியாகிய அருள் சக்தியின் திருவருளின் பொருட்டே இறைவன் சகல ஜீவராசிகளின் வீடுபேற்றுக்காக தாண்டவங்களை செய்து அருள்வதாக சாத்திரம் கூறுகிறது.

இறைவன் தாண்டவங்களை செய்கிறபோது சிவகாம சுந்தரியும் அவர் அருகில் இருந்து அதை பார்த்துக் கொண்டு உள்ளார் ஆகவே தாண்டவ மூர்த்தியின் அருகில் சிவகாம சுந்தரியின் உருவம் அமைக்கப் பட்டிருப்பதை நாம் எல்லா கோயில்களிலும் காணலாம்.
நடராஜப் பெருமானை வணங்குபவர் அனைவரும் சிவகாம சுந்தரியும் சேர்ந்து வணங்க வேண்டும் என்பதே முறையாகும்.



