புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்
“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம்.இவளும் சாவித்திரி தான். ஆனா நான்”… பெரியவா – வார்த்தையை முடிக்குமுன்
(“…எமன் இல்லே!….எமனுக்கு எமன் ….காலகாலன்” -ஒரு தொண்டர்)(நாளை காரடையான் நோன்பு 14-03-2020 ஸ்பெஷல் பதிவு)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ஹூசூர் அம்மன் ஆலயத்தில் பெரியவா தங்கி இருந்தார்கள்.
கோயிலுக்கு வெளியே, ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஓட்டிக்கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவள் புருஷனுக்குக் கடுமையான காய்ச்சல், வாந்தி, பேதி,..அவனைத் தான், அந்த வண்டியில் அழைத்து வந்திருந்தாள்.
பெரியவா, கோயிலில் தங்கியிருப்பதைத் தெரிந்து கொண்டு, அவர்கள் அனுக்ரஹம் செய்தால், தன் கணவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தாள்..
வண்டியில் படுத்திருந்த தன் புருஷனை, ஒரு குழந்தையைத் தூக்குவது போல அலாக்காகத் தூக்கிக் கொண்டு வந்து, பெரியவா முன்பு தரையில் கிடத்தினாள். இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, காரே – பூரே என்று ஏதோ பாஷையில் பிரார்த்தித்தாள்.
பெரியவா, உடனிருந்த தொண்டர்களிடம் சொன்னார்;.
“இந்த லம்பாடிக்கு, எவ்வளவு பதிபக்தி பாரு, ஒரு ஆண்பிள்ளையை….புருஷனை..தான் ஒன்றியாகவே தூக்கிக் கொண்டு வந்திருக்காளே! பகவான், இவளுக்கு அவ்வளவு சக்தியைக் கொடுத்திருக்கான்……
“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான். ஆனா, நான்….என்று மெல்லிய முறுவலுடன் சொல்லும்போதே, அடுத்து என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெளிவாகவே ஊகிக்க முடிந்தது.
“……எமன் இல்லே!… எமனுக்கு எமன் – காலகாலன்!” என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.
பெரியவா மிக்க கனிவுடன், ஒரு ஆரஞ்சுக் கனியை அளித்து அனுக்ரஹம் செய்தார்கள்.
மறுநாள் அந்த லம்பாடிப் பெண்ணும்,அவளுடைய புருஷனும் ஜோடியாக நடந்து வந்தார்கள். தரிசனத்துக்கு.
முந்தைய தினம் பார்த்தபோது, அந்தப் புருஷன் பிழைப்பானா என்ற கேள்விகுறி இருந்தது.ஆனால் இன்றைக்கோ,உற்சாகமாக நடந்து வந்து நமஸ்காரம் செய்கின்றான் அவன்.
லம்பாடிப் பெண்ணின் கண்களில் ஏராளமான கண்ணீர் பெருக்கு. “தேவுடு – தேவுடு” என்று சொல்லிச் சொல்லி, விழுந்து விழுந்து வணங்கினாள்.
காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா?
லம்பாடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்!