spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்முனிவரின் அந்த நான்கு சந்தேகத்தைத் தீர்த்து வைத்த ஞானப் பறவைகள்!

முனிவரின் அந்த நான்கு சந்தேகத்தைத் தீர்த்து வைத்த ஞானப் பறவைகள்!

rishi garudan

ஞானப் பறவைகளின் கதை : மார்கண்டேய புராணம் ஞான பட்சிகளின் கதையோடு தொடங்குகிறது. மகாபாரதக் கதை முழுவதையும் வியாச பகவானிடம் கேட்டறிந்தார் ஜைமினி முனிவர். ஆனாலும் அவருக்குச் சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினார். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு முறை ஜைமினி முனிவர் மார்கண்டேய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று “மகரிஷியே! எனக்கு மகாபாரதத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. ரகசியமாக உள்ள சில சாஸ்திர தத்துவங்களை தெரிந்து கொள்வதற்காக உங்களிடம் வந்துள்ளேன். அவற்றை நீங்கள் தீர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு தன் சந்தேகங்களை வெளியிட்டார்.

நித்திரை, தூங்கி வழிதல், பயம், குரோதம், மோகம், உன்மாதம், விபத்து, குழப்பம், சந்தேகம், லோபம், அசூயை, மாத்சர்யம், கபடம், கற்பதில் ஆர்வமின்மை, ஆகம தரிசனமின்றி இருப்பது, பயிற்சியின்றி இருப்பது போன்ற பதினெட்டு தோஷங்களும் அற்றவரான மார்கண்டேயர், ஜைமினி கூறியதைக் கேட்டு இவ்விதம் பகர்ந்தார்.

“ஜைமினி! உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் நியாயமானவையே! ஆனால் எனக்கு சந்தியாவந்தனம் முதலான விதிகளை நிறைவேற்றும் நேரம் இது. உங்கள் வினாக்களுக்கு விரிவாக விளக்கமளிக்க கால அவகாசம் இல்லை. நீங்கள் விந்திய மலைக்குச் சென்று அங்கு வசிக்கும் பிங்காக்ஷன், நிபோதன், சுபத்திரன், சுமுகன் என்ற நான்கு ஞான பட்சிகளைக் கேட்டால் அவை உங்கள் ஐயங்களைத் தீர்க்கும்” என்றார்.

வியப்படைந்த ஜைமினி, “முனிவரே! பக்ஷிகள் பேசுமா? அவை மகா பண்டிதர்களைப் போல் தர்ம சந்தேகங்களைத் தீர்க்குமா?” என வினவினார்.

rishi

மார்க்கண்டேயர் கூறினார்:-

“ஜைமினீ ! ஒரு முறை தேவேந்திரன் அப்சர ஸ்தீரிகளுடன் நந்த வனத்தில் உலாவி மகிழ்ந்திருக்கையில் அங்கு நாரத மகரிஷி வந்தார். அவரை வரவேற்ற தேவேந்திரன் அவரிடம், ” முனிவரே! இந்த அப்சர பெண்களில் சிறந்த ஒருத்தியை தேர்ந்தேடுத்து அவளை நாட்டியம் ஆடும்படி ஆணையிடுங்கள்” என்றான்.

நாரதர், “அப்சரப் பெண்களே! உங்களில் யார் ரூப லாவண்யங்களில் உயர்ந்தவர் என்று எண்ணுகிறீரோ அவர்கள் நிருத்தியம் செய்யலாம்” என்றார்.

அவர்களில் ஒவ்வொருவரும் தானே சிறந்தவள் என்று வாதிட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். எனவே தேவேந்திரன் அவர்களுள் சிறந்தவளை நாரதரே தீர்மானிக்க வேண்டும் என்றான். நாரதர் அதற்கு ஒரு ஷரத்து கூறினார்.

“ஹிமாலயத்தில் துர்வாச முனிவர் கடுந்தவம் செய்து வருகிறார். உங்களில் யார் அவர் தவத்தைக் கலைத்து உங்களை மோகிக்கும்படி செய்வீர்களோ அவர்களே சிறந்தவர் என்று தீர்மானிப்பேன்” என்றார் நாரதர்.

துர்வாசரின் பெயரைக் கேட்டதும் அப்பெண்களுக்கு நடுக்கம் கண்டது. ஆனால் அவர்களுள் அநேக மகரிஷிகளுக்கு விரத பங்கம் ஏற்படுத்திய கர்வத்துடன் ‘வபு’ என்ற பெண் “நான் துர்வாசர் இருக்கும் இடத்திற்குச் சென்று அவருக்கு விரத பங்கத்தை ஏற்படுத்துவேன்” என்று சொல்லிப் புறப்பட்டாள்.

‘வபு’ தன் ஆடலாலும் பாடலாலும் துர்வாசரின் தவத்தைக் கலைக்க முற்பட்டாள். அதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், “அப்சரப் பெண்ணே! நீ கழுகாகப் பிறப்பாய்!:” என்று சபித்தார். அவள் துர்வாசரைப் பணிந்து தன் தவறை மன்னித்து சாப விமோச்சனம் அளிக்கும்படி வேண்டினாள்.

கருணை கொண்ட முனிவர், “உனக்கு நான்கு குஞ்சுகள் பிறக்கும். நீ அர்ஜுனனின் அம்பு பாய்ந்து மரணமுற்று நிஜ ரூபத்தை அடைந்து சுவர்கம் செல்வாய்” என்று ஆசீர்வதித்தார்.

வபு கழுகாகப் பிறந்தாள். அப்போது அவள் பெயர் “த்ராக்ஷி”. மந்தபாலன் என்பவனின் மகனான துரோணன் என்பவனை மணந்தாள். அவள் பதினாறு ஆண்டுகள் கழித்து கர்பமுற்றாள்.

அப்போது மகாபாரத யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடந்து கொண்டிருந்தது. அதனைப் பார்க்கச் சென்ற த்ராக்ஷி, மேலே பறந்தபடியே யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ஜுனன் விடுத்த ஓர் அம்பு அவள் மேல் பாய்ந்தது. உடனே த்ராக்ஷியின் கர்பத்திலிருந்த நான்கு முட்டைகளும் பூமியில் விழுந்தன. “என் குழந்தைகளை தெய்வம் தான் காக்க வேண்டும்” என்று பிரார்த்தித்து உயிர் துறந்தாள் த்ராக்ஷி.

அச்சமயம் யுத்த பூமியில் பகதத்தன் என்ற வீரனின் வாகனமான சுப்ரதீபம் என்ற யானையின் கழுத்தில் தொங்கிய மணி பாணம் பட்டு அறுந்து சரியாக அந்த முட்டைகளின் மேல் கவிழ்ந்து விழுந்தது. அந்த மணியின் கீழ் முட்டைகள் பாதுகாப்பாகக் கிடந்தன.

பாரத யுத்தம் முடிந்து குருக்ஷேத்திர பூமியில் அமைதி ஏற்பட்ட பின் ஒரு நாள் காலை ‘சமீகர்’ என்ற மகா முனிவர் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தார். மணியின் அடியிலிருந்து பறவைக் குஞ்சுகளின் ‘கீச், கீச்’ எனும் ஒலியைக் கேட்டார். அதை கேட்டு ஆச்சர்யமாய்ந்த முனிவர் மணியைத் தூக்கிப் பார்த்து அங்கு நான்கு பறவைக் குஞ்சுகள் இருக்கக் கண்டார். கருணையோடு அவற்றைத் தம் ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார்.

அப்போது அக்குஞ்சுகள் அவரிடம், “மகானுபாவரே! எங்களை கோரமான மரணத்திலிருந்து காத்தருளினீர்கள். எங்களுக்கு நீங்களே தாய் தந்தை குரு ஆவீர்கள். தங்களுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். உங்களுக்கு நாங்கள் என்ன சேவை செய்ய வேண்டுமோ கூறியருளுங்கள்” என்றன.

வியப்புற்ற சமீகர், ” ஓ! பறவைக் குஞ்சுகளே! நீங்கள் யார்? எதனால் பக்ஷி ஜென்மத்தை அடைந்தீர்கள்?” என்று கேட்டார்.

“முனிவரே! நாங்கள் நால்வரும் சுக்ருதி எனும் மகா முனிவரின் புதல்வர்களாகப் பிறந்திருந்தோம். சாஸ்திரங்களை நன்றாகக் கற்றறிந்தோம். பெற்றோரைப் பூஜித்து வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் எங்கள் தந்தையின் சத்திய நெறியைச் சோதித்தறிய விரும்பிய தேவேந்திரன், கழுகு உருவில் வந்து தனக்கு நர மாமிசம் வேண்டுமென்று கேட்டார்.

எங்கள் தந்தை எங்களிடம் யாராவது ஒருவர் இந்திரனுக்கு ஆகாரமாகுங்கள் என்று கட்டளை இட்டார். ஆனால் சகல ஜீவிகளுக்கும் தங்கள் உயிரை விட பிரியமான பொருள் வேறு இல்லை அல்லவா? நாங்கள் பயந்து அதனை ஏற்கவில்லை. கோபமடைந்த எங்கள் தந்தை, “துஷ்ட புத்திரர்களா! நான் இந்த பக்ஷி ராஜனுக்கு வாக்களித்து விட்டேன். நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. அதனால் பறவைகளாகப் பிறக்கக் கடவீர். என்று சபித்து விட்டார். பிறகு அவர் தன் உடலையே இந்திரனுக்கு உணவாகச் சமர்ப்பித்தார்.

இந்திரன் எங்கள் தந்தையின் தியாகத்தை மெச்சி, மகிழ்ந்து எங்களிடம், “நீங்கள் விந்திய மலையில் சென்று வசியுங்கள். வியாசரின் சீடரான ஜைமினி உங்களிடம் வந்து சில தர்ம சந்தேகங்களைக் கேட்பார். அவற்றைத் தீர்த்தவுடன் உங்கள் சாபம் விலகும். நீங்கள் பக்ஷிகளாக இருந்தாலும் சகல வேத, தர்ம சாத்திரங்களையும் அறிந்த ஞான பக்ஷிகள், தர்ம பக்ஷிகள் என்று போற்றப் படுவீர்கள்” என்று அருளினார்”.

பறவைகள் இவ்விதம் தம் பூர்வ ஜென்மக் கதையைக் கூறக் கேட்ட சமீகர், “நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய சேவை எதுவும் இல்லை. உங்கள் விநயம் எனக்கு மகிழ்வளிக்கிறது. நீங்கள் இனி விந்திய பர்வதத்திற்குச் செல்லுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.

அதனால், ஜைமினி முனிவரே! நீங்கள் அந்த பறவைகளைக் கேட்டு உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கேட்பவரின் ஐயத்தைத் தீர்ப்பது மகாத்மாக்களின் இயல்பு” என்று கூறி மார்க்கண்டேயர் தவமியற்றச் சென்றார்.

ஜைமினி முனிவர், விந்திய பர்வதத்தில் ஞானப் பறவைகளைத் தேடித் சென்ற போது அவை இனிமையாக வேத அத்யயனம் செய்து கொண்டிருந்தன. அவற்றை அணுகி, “ஓ! ஞானப் பறவைகளே! நான் வியாசரின் சீடன். என்னை ஜைமினி என்பார்கள். மார்கண்டேயர் கூறியபடி உங்களிடம் வந்துள்ளேன். என் சந்தேகங்களைத் தீர்த்து எனக்கு மனசாந்தி அளியுங்கள்”. என்றார்.

அப்பறவைகள், “முனீஸ்வரரே! உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரிந்த வரை கூறுகிறோம்” என்று பதிலளித்தன.

ஜைமினி தனது சந்தேகங்களைக் கேட்டார்:-

1.ஸ்ரீமன் நாராயணன் துவாபர யுகத்தில் மானுட உடலோடு அவதரித்ததன் காரணம் என்ன?

2. உலகம் வியந்து பார்க்கும்படி திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் எதனால் அமைந்தனர்?

3.கௌரவ பாண்டவ யுத்தத்தின் போது பலராமர் ஏன் தீர்த்த யாத்திரை சென்றார்?

4.திரௌபதிக்குப் பிறந்த ஐந்து உப பாண்டவர்களும் திருமணம் கூட நிகழாமல் திக்கற்றவர் போல் அகால மரணமடையக் காரணம் என்ன?

இவற்றைக் கேட்ட ஞான பக்ஷிகள் இவ்வாறு பதிலளித்தன:-

முனிவரே, தர்மம் நசிந்து அதர்மம் மேலோங்கும் போது பூமி பாரத்தைக் குறைக்க ஸ்ரீமன் நாராயணன் அவதாரமெடுப்பார். அக்காரணத்தால் தான் மனிதனாக அவதரித்தார்.

முன்பொருமுறை ‘த்வஷ்ட்ரு பிரஜாபதி’ புதல்வனான திரிசூரன் (விஸ்வரூபன்) சிரசாசனத்தில் தவம் செய்து கொண்டிருக்கையில் தேவேந்திரன் அவனைக் கொன்றதால் பிரஹத்தி தோஷம் பற்றியது. அப்பாவத்தை யமனுக்கும், வாயுவுக்கும், அஸ்வினி தேவதைகளுக்குமாக நான்காகப் பிரித்துக் கொடுத்து அவர்கள் மேல் கருணையோடு தன் அம்சங்களையும் அவர்களிடம் இருத்தி வைத்தான்.

அதனால் எமனின் அம்சமாக தர்ம புத்திரரும், வாயு மூலமாக பீமனும், அஸ்வினி தேவதைகள் மூலம் நகுல சகதேவனும் பிறந்தனர். இந்திரன் தன் அம்சத்தோடு அர்ஜுனனாகப் பிறந்தான். இந்த விஷயத்தை அறிந்த இந்திரனின் மனைவி சசிதேவி, துருபதன் வளர்த்த வேள்வியில் இருந்து திரௌபதியாக உதித்து, இந்திர அம்சத்தோடு பிறந்த பஞ்ச பாண்டவர்களை மணந்தாள்.

பலராமர் பாண்டவர்களின் உறவினர். சுபத்திரையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து சம்பந்தியானவர். துரியோதனனுக்கு ‘கதை’ யுத்தம் பயிற்றுவித்து குருவானவர். ஸ்ரீகிருஷ்ணரோ பாண்டவர் பக்கம் நிற்பவர். யுத்தத்தில் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் தனக்குப் பிரியமானவர்களோடு போர் செய்ய வேண்டி வரும்.

அது மட்டுமல்ல. ஒரு முறை பலராமர் நைமிசாரண்யம் சென்ற போது பாகவத கதை சொல்லிக் கொண்டிருந்த சூத முனிவர் தன்னைப் பார்த்தவுடன் எழுந்து நிற்கவில்லை என்ற கோபத்தில் அவரைக் கொன்று விட்டார். அங்கிருந்த மகரிஷிகள் பலராமரைப் பார்த்து வெறுப்புடன், “நீ செய்த பாவத்தை எல்லோரிடமும் சொல்லியபடி பன்னிரண்டு ஆண்டுகள் தீர்த்த யாத்திரை விரதம் அனுசரிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டனர்.

அதனால்தான் தீர்த்த யாத்திரை செல்லும் சாக்கில் பலராமர் யுத்தத்திலிருந்து விலகி நின்றார்.

பாண்டவ புத்திரர்களான உப பாண்டவர்கள் விச்வேதேவர்கள்.
ராஜா அரிச்சந்திரனை அரசுரிமையை விட்டு நீக்கி, துன்புறுத்திய விச்வாமித்திரரை, வானத்திலிருந்து பார்த்த விஸ்வேதேவர்கள் ஐந்து பேர் கருணை கொண்டு, “இத்தனை துன்பம் செய்கின்ற இந்த விசுவாமித்திரர் எந்த பாவ உலகிற்குச் செல்வரோ!” என்று தம்மில் தாம் பேசிக் கொண்டனர்.

அவ்வார்த்தைகளைக் கேட்ட விசுவாமித்திரர் ரோஷத்தோடு, “நீங்கள் ஐவரும் மனித உலகில் பிறப்பீராக!” என்று சாபமிட்டார். அப்போது விஸ்வேதேவர்கள் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க சாந்தமடைந்து, ” நீங்கள் மனித ஜென்மமெடுத்தாலும் மனைவி, சந்ததி, காமம், க்ரோதம் போன்றவை இன்றி மீண்டும் தேவர்கள் ஆவீர்கள்” என்று ஆசீர்வதித்தார்.

இந்த ஐந்து விஸ்வேதேவர்களே திரௌபதியின் கர்பத்தில் பிறந்து, விவாகம், பிள்ளைகள் போன்ற பந்தங்களில் சிக்காமல் பிரம்மசாரிகளாகவே அஸ்வத்தாமனின் கையால் மரணமடைந்தனர்.”

ஞான பக்ஷிகளின் பதிலைக் கேட்டு மகிழ்ந்த ஜைமினி, அவைகளிடம் அரிச்சந்திரனின் வரலாற்றை சம்பூர்ணமாகக் கேட்டு அறிந்து கொண்டார்.

மேலும், “மஹாத்மாக்களே ! எனக்கு இன்னும் சில ஐயங்கள் உள்ளன. அவற்றையும் தீர்த்து வையுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். பக்ஷிகள் சம்மதித்தன.

“ஜனன மரணங்கள் எதனால் ஏற்படுகின்றன? மிருத்யு என்றால் என்ன? நரகத்தைப் பற்றி விவரமாக எடுத்துரையுங்கள்” என்றிவ்வாறு எத்தனையோ சந்தேகங்களை தர்ம பக்ஷிகளைக் கேட்டு அறிந்து கொண்டார் ஜைமினி.

“பாவ புண்ணியங்கள் என்றால் என்ன?” என்று கேட்டார் ஜைமினி.

“முனிவரே! பாவங்கள் தெரிந்து செய்பவை, தெரியாமல் செய்பவை என இரண்டு வகைப்படும். சின்னச் சின்னப் பாவங்களுக்கு உடனுக்குடன் பலன்கள் கிடைத்து விடும். ஏதோ ஒரு வியாதியின் உருவில் அவை அனுபவிக்கப்பட்டு விடும். பெரிய பாவங்களானால் ஜென்ம ஜென்மமாகத் துரத்தி வரும். தெரித்து செய்த பாவங்களுக்குத் தண்டனை பெரிதாக இருக்கும்.” என்று பதிலளித்தன தர்ம பக்ஷிகள்.

இவ்விதமாக இன்னும் தத்தாத்திரேயரின் கதை, காலயவனனின் கதை, மதாலசா சரித்திரம், கிருஹஸ்தாசிரம தர்மங்கள் போன்ற எத்தனையோ சந்தேகங்களைக் கேட்டார் ஜைமினி. அவற்றுக்கெல்லாம் ஞானப் பறவைகள் தகுந்த விளக்கங்கள் அளித்து அதன் மூலம் சாப விமுக்தி பெற்றன.

சந்தேக நிவ்ருத்தி அடைந்த ஜைமினி ரிஷி, ஞான பட்சிகளின் உருவத்தில் இருந்த முனி குமாரர்களை ஆசீர்வாதித்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

இவ்வாறு மார்க்கண்டேய புராணம் முழுவதும் ஞான பக்ஷிகள் கூறும் கதைகளும் விளக்கங்களுமாக நிறைந்து படிக்கச் சுவையாக உள்ளது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் -62

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe