spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்கொரோனாவை முன்னிட்டு... சில சிந்தனைகள்..!

கொரோனாவை முன்னிட்டு… சில சிந்தனைகள்..!

annai saratha

கவிதை, சிறுகதை, நாவல் போன்ற நூல்களுக்கான வாசக எண்ணிக்கையை விடவும் மருத்துவம் ஆரோக்கியம் தொடர்பான நூல்களுக்கு வாசக எண்ணிக்கை அதிகம். அதனால்தான் எல்லாப் பத்திரிகைகளும் மருத்துவக் கட்டுரைகளை வெளியிடுகின்றன.

உடல் நலம் குறித்த ஆர்வம் குறிப்பிட்ட சாராருக்கானது அல்ல. மனித குலம் முழுமைக்குமானது.

மகாத்மா காந்தியின் தொகுப்பு நூல் வரிசையில் `இயற்கை வைத்தியம் மற்றும் பிரம்மச்சரியம்` குறித்த நான்காம் தொகுப்பை ஒவ்வோர் இளைஞனும் கட்டாயம் படிக்க வேண்டும். (அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின் நன்கொடையால் காந்தியின் தொகுப்பு நுல்கள் வர்த்தமானன் பதிப்பகம் மூலம் மறுபதிப்புக் கண்டுள்ளன.)

மகாத்மா உடல் ஆரோக்கியம் தொடர்பாகச் செய்திருக்கும் பரிசோதனைகளும் ஆராய்ச்சிகளும் அவர் தெரிவித்திருக்கும் முடிவுகளும் பிரமிக்க வைப்பவை.

கொய்யாப் பழ விதையைக் கடிக்காமல் சாப்பிட்டால் அது ஜீரணத்திற்கு உதவுகிறது என்றும், கடித்துச் சாப்பிட்டால் அதில் உள்ள ஓர் அமிலம் இதயத்திற்கு வலுச் சேர்ப்பதால் இதய நோய்கள் தாக்காது என்றும் அவர் ஆய்வு செய்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த கால ஆன்மிகவாதிகளில் உடல் நலத்தில் பெரும் அக்கறை செலுத்தியவர்கள் திருமூலரும் வள்ளலாரும்.

`உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே`

`உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பை யானிருந்து ஓம்புகின்றேனே!`

என உடம்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி அழுத்தமாகப் பேசுகிறார் திருமூலர்.

வள்ளலாரின் உரைநடை, உடல் நலம் தொடர்பாகப் பல அரிய கருத்துக்களை முன்வைக்கிறது. `ஒன்று, இரண்டு` ஆகிய கழிவுப் பொருள்களை வெளியேற்ற வேண்டும் என உடலில் உணர்ச்சி தோன்றும்போது உடனே வெளியேற்றி விட வேண்டும் என்றும் அவற்றை அடக்குவதாலேயே எண்ணற்ற வியாதிகள் வருகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

நம் தேசத்தில் பெண்கள் அதிகம் நோய்வாய்ப்படுவதற்கான காரணம் இதுதான். அவர்களுக்கு இயற்கை உபாதைகளைக் கழிக்க சரியான இடங்கள் கிட்டுவதில்லை. எனவே அந்த உணர்வை அவர்கள் அடக்க வேண்டிய நிர்பந்தம் நேர்கிறது. அதுவே அவர்களின் ஆரோக்கியம் கெடக் காரணமாகிறது.

மகான்களுக்கு மக்களின் உடல் நலனில் கருணையோடு கூடிய அக்கறை இருந்ததே அவர்கள் ஆரோக்கியம் தொடர்பான கருத்துக்களை வெளியிடக் காரணம். திருவள்ளுவர் ஆரோக்கியம் குறித்து நிறையச் சிந்தித்திருக்கிறார்.

`கால்பந்து விளையாடினால் கீதை நன்றாகப் புரியும்` என்று விவேகானந்தர் சொன்னதும் மெய்ஞ்ஞானம் பெற உடல் ஆரோக்கியம் எத்தனை முக்கியமானது என்பதைப் புலப்படுத்தவே.

கந்த சஷ்டி கவசம் போன்ற ஆன்மிகச் செய்யுள் நூல்களில் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இறையருள், கவசமாக இருந்து காப்பதாக வரிகள் வரும். ஆழ்மனத்தில் நேர்மறை எண்ணங்களைச் செலுத்தி அதன்மூலம் உடல் நலனைக் காப்பதற்கான ஏற்பாடுதான் இத்தகைய தோத்திரப் பனுவல்கள்.

ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகளில் இத்தகைய கருத்தோட்டம் உண்டு. வ.உ. சிதம்பரம் பிள்ளை மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலன் நூல்கள் இப்போதும் படிக்கக் கிடைக்கின்றன. அவற்றில் `அகமே புறம், மனம்போல வாழ்வு, மெய்யறிவு` போன்ற நூல்கள் உள்ளத்தின் நலத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பிருப்பதைத் தெள்ளத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றன.

மனித உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் தன்மையைக் கொண்டது. சாதாரண வியாதிகளைத் தானே குணமாக்கிக் கொள்ளும் பண்பு அதற்கு உண்டு. ஒவ்வொரு மனிதனின் உடலுக்குள்ளும் தானாகவே ஊறும் ஜீவசக்தி இருக்கிறது. அது உடல் ஆரோக்கியத்தைக் கண்காணித்துச் சரி செய்கிறது.

*கரூர் பண்டிட் பி.எஸ். ராமசர்மா புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர். (என் பெரியப்பா). சக்திவிலாச வைத்யசாலை என்ற மருத்துவ மனையை நிறுவி எண்ணற்ற நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தவர். கே.பி. சுந்தராம்பாள், தீரர் சத்தியமூர்த்தி, மணிக்கொடி எழுத்தாளர் சி.சு. செல்லப்பா ஆகியோரெல்லாம் அவரிடம் மருத்துவம் பார்த்துக் கொண்டவர்கள்தான்.

சிறந்த ஓவியரான நாமக்கல் கவிஞர், தன் ஆரோக்கியத்தை மீட்டுத் தந்த அவருக்கு ஓர் அழகிய பெரிய முருகர் வண்ணப் படத்தை வரைந்தளித்தார். அந்த ஓவியம் கரூரில் அமரர் ராமசர்மாவின் பெயரரான டாக்டர் சிவராமன் இல்லத்தில் தற்போதும் இருக்கிறது.

ராமசர்மா, பரமாச்சாரியாரின் பெரிய பக்தர். பரமாச்சாரியார் கரூர் வந்தால் அவர் இல்லத்தில்தான் தங்குவார். ஒருமுறை பரமாச்சாரியார் தனக்குக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும் ராமசர்மாவைக் காஞ்சிபுரம் வருமாறும் சொல்லியனுப்பினார். ராமசர்மா உடனே மருந்துப் பெட்டியோடு காரில் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார். அவர் கையிலிருந்த மருந்துப் பெட்டியைப் பார்த்துப் பரமாச்சாரியார் முகத்தில் புன்முறுவல்!

`உன்னைத்தான் வரச் சொன்னேனே தவிர மருந்துப் பெட்டியோடு வான்னு சொல்லலியே!` என்றார். ராமசர்மா திகைத்தார்.

`உங்களுக்குக் காய்ச்சல் என்று சொன்னதால் மருந்துப் பெட்டியோடு வந்தேன்!` என்றார்.

`உடல் என்றிருந்தால் எப்போதாவது காய்ச்சல் வருவது சகஜம்தான். காய்ச்சலே உடலைக் குணப்படுத்தத் தானே வருகிறது! அதுசரி. நோயைக் குணப்படுத்த மருந்து எதற்கு? அதற்கு வேறொரு வித்தியாசமான மருந்து இருக்கிறது! அதைப் பிரயோகம் பண்ணத்தான் உன்னை வரச் சொன்னேன்!`

ராமசர்மாவுக்குப் புரியவில்லை. அமைதி காத்தார். பரமாச்சாரியார் தொடர்ந்து பேசலானார்.

`நீ குளிச்சுட்டுத்தான் வந்திருப்பாய். இரு. நான் இன்னொரு முறை குளிச்சுட்டு வந்துடறேன்!`

காய்ச்சல் இருக்கும்போது குளிக்கிறேன் என்கிறாரே? ராமசர்மாவின் மனம் பதறியது. ஆனால் மறுத்து எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பரமாச்சாரியார் குளித்துவிட்டு வரும்வரை காத்திருந்தார்.

குளித்துவிட்டு வந்து அமர்ந்த பரமாச்சாரியார் தன் உடல் உஷ்ணத்தை அளந்து பார்க்கச் சொன்னார். தர்மாமீட்டர் மூலம் பார்த்ததில் பரமாச்சாரியாருக்குக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியது.

`நல்லது. நாம் இருவரும் இப்போது சேர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் ஜபிக்கப் போகிறோம்!` என்று அறிவித்தார் பரமாச்சாரியார். ராமசர்மா உடன்பட்டார்.

இருவரும் இணைந்து விஷ்ணு சகஸ்ரநாமம் ஜபித்தார்கள். ஜபம் நிறைவடைந்ததும் பரமாச்சாரியார் தன் உடல் வெப்பத்தை மறுபடி பரிசோதிக்குமாறு கூறினார். என்ன ஆச்சரியம்! காய்ச்சல் முற்றிலுமாகக் குணமாகி இருந்தது! பரமாச்சாரியார் நகைத்தவாறே சொல்லலானார்:

`விஷ்ணு சகஸ்ரநாம ஜபம் செல்வத்தை மட்டுமல்ல, ஆரோக்கியம் உள்ளிட்ட எத்தனையோ பயன்களைத் தரக் கூடியதுன்னு நான் ஓயாம சொல்றேன். ஜனங்களும் கேட்கறா. அவாளுக்கு அது உண்மைதான்னு நான் நிரூபிச்சுக் காட்ட வேண்டாமோ? அதுக்குத்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திண்டேன்!`

சற்றே நிறுத்திய பரமாச்சாரியார் பின்னர் தொடர்ந்து பேசலானார்:

`பகவந் நாமா பிறவிப் பிணியைத் தீர்க்கும்னு தமிழ் சொல்றது. பிறவிப் பிணியையே நீக்கும்னா, பிறவில வர்ற பிணியை நீக்காதா? வியாதியஸ்தாளுக்கு நீ வழக்கம்போல மருந்து கொடு. வியாதி வந்தா மருந்து சாப்பிட வேண்டியதுதான். ஆனா கூடவே விஷ்ணு சகஸ்ரநாமம்கிற மருந்தையும் சேத்துப் பயன்படுத்தலாமே? உன்னைத் தேடி வறவா கிட்ட நீ இதையும் உன் ப்ரிஸ்க்ரிப்ஷன்ல சேத்துக்கும்படிச் சொல்லலாமே? அதுக்கு ஒனக்கு நம்பிக்கை வரணுமில்லியா? அதுக்குத்தான் உன்னை வரச்சொன்னேன். காந்தி இயற்கை வைத்தியத்தைக் கொண்டாடினாரே? இயற்கை வைத்தியத்துல பிரார்த்தனைக்குத்தான் முதலிடம்!`

சொல்லிவிட்டுப் பரமாச்சாரியார் குழந்தைபோல் சிரித்தார். ராமசர்மாவின் உள்ளம் உருகியது.

ராம நாமத்தை உடல் நலத்திற்கான சிறந்த மருந்து எனக் கருதுகிறார் மகாத்மா. விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலனை ராம நாமத்தை மட்டும் சொல்வதன் மூலம் அடையலாம் என்று சகஸ்ரநாமத்திலேயே உள் தகவல் இடம்பெற்றுள்ளது.

மந்திர ஜபத்தை அதிகப்படுத்துவதன் மூலம் பெருவியாதிகள், பூகம்பம், பெருமழை, புயல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்பது புதுச்சேரி ஸ்ரீஅன்னையின் வாக்கு. (அவர் புயலை அதட்டி நிறுத்திய சம்பவம் ஒன்று அவர் வாழ்வில் வருகிறது.)

`டிசம்பர் மாதத்தை ஒட்டி எமன் தன் அரண்மனையின் நான்கு வாசல்களையும் திறந்து வைக்கிறான். அதனாலேயே புதிய புதிய வியாதிகள் உற்பத்தியாகின்றன. மந்திர ஜபத்தை அதிகப்படுத்துவதன் மூலம் எமனின் வாசல்களுக்கு நாம் பூட்டுப் போட்டு விடலாம்!` என்பது தூய அன்னை சாரதாதேவியின் வாக்கு.

பூரண இறை நம்பிக்கையும் ஆழ்ந்த மந்திர ஜபமும் தியானமும் நோயை வரவொட்டாமல் தடுக்கும் என்பதும் வந்த நோயை விரட்டும் என்பதும் ஆன்றோர்களின் திடமான முடிவு. நம்பினார் கெடுவதில்லை.

  • திருப்பூர் கிருஷ்ணன் (ஆசிரியர், அமுதசுரபி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe