August 3, 2021, 7:36 am
More

  ARTICLE - SECTIONS

  சித்ரா பௌர்ணமியும்.. சித்ரகுப்தன் நோன்பும்..!

  chithrakupthan
  chithrakupthan

  சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த சித்ரகுப்தனுக்கு நயினார் நோன்பு கொண்டாடப்படுகிறது இன்று சித்திரை நட்சத்திரம் சித்திரை மாதம் ஆகும் இன்று எல்லோராலும் நயினார் நோன்பு கொண்டாடபடுகிறது. இந்த விரதத்தை இருபதினால் நாம் செய்த பாவங்கள் தோஷங்கள் அகலுவதாக நம்பிக்கை. பெரும்பாலும் இது பௌர்ணமி நாளோடு இணைந்தே வரும் அதனால் பௌர்ணமி விரதமும் சேர்த்து கடைப்பிடிப்பார்கள்.

  சித்ரா பௌர்ணமி அன்று ஊரில் தெருக்கள்தோறும் ஆங்காங்கே பந்தல் அமைப்பார்கள். பந்தலில் இரவு நேரம் பெரியோர்கள் சிலர் அமர்ந்து இந்த சித்ரகுப்த நயினார் கதை படிப்பார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து விடிய விடிய இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

  கதை படித்து முடிக்க கிட்டத்தட்ட நாலு மணிநேரம் ஆகிவிடும். ஆனால் இது புண்ணியக்கதை, கேட்பது நல்லது என்று கூறுவார்கள்.சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம் செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்க வாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமதர்மராஜனுக்கு சொல்பவர்.

  அந்தந்த வீதியைச் சேர்ந்த பெண்கள் சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பனியாரம் என தயாரித்து கதை கேட்க வந்தவர்களுக்கு வீடு திரும்புகையில் கையில் கொடுத்தனுப்புவார்கள். சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு என்றும் கூறுவார்கள். இதன் காரணமாகவே இவ்வாறு செய்கிறார்கள்.

  chitra pournami
  chitra pournami

  சித்ரகுப்த சுவாமியின் வரலாறு நான்கு விதமாக கூறப்படுகிறது. பார்வதி அம்பாள் சித்திரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்திரகுப்தா என பெயர் பெற்றார். காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும் அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்யம் செய்யக்கூடாது.

  எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்யம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர். ‘சித்’ என்றால் மனம், ‘அப்தம்’ என்றால் மறைவு என்றும் பொருள். மனிதனுடைய உள்மனதில் மறைவாக இருக்கக்கூடிய எண்ணங்களின் அடிப்படையில் அவரவரின் வாழ்க்கை முறைகளை அமைத்துத்தருபவர். சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன் ‘சித்திரபுத்திரன்’ சித்ரகுப்தன் எனப்பட்டார்.

  தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கவே ஈசனிடம் எமதர்மன் வேண்டிக்கொள்ளும் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது உமது பொறுப்பு என்றார்.

  இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்குத்தான் அச்செயலை ஈடேறும்படி செய்ய இயலும் என அறிந்த பிரம்மா, சூரியனுக்குள் ஒரு அக்னியை தோற்றுவித்தார். மனதுக்குள் புகுந்த மாயத்தால் காதல் ஏற்பட்டது. அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீளாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார்.

  அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பலவண்ண துணியைச் சாத்துவார்கள்.

  சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும் எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.

  இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு,பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத் தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.

  chithrakupthan 2
  chithrakupthan 2

  மேலும், மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்பதனை உணர்ந்த சூரியன், சித்திரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் புரிந்த கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து க்ஷத்ரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வ பிரம்மாவின் மகளான கர்ணகி ஆகியோர் தன் மகனுக்கு ஏற்ற மனைவியர் என்று திருமணம் செய்வித்தார்.

  சித்ரகுப்தன் பணியினை மறந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தியதில் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் குறையை விளக்கினார். சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவிபுரிய அனுப்பிவைத்தார்.

  தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு கதைசொல்வதன் முக்கிய நோக்கம் : மக்கள் பாவச்செயல் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச்செயலில் ஈடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணம் மேலோங்கவே. எனவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து நற்பலன்களை பெறுவோமாக.

  மற்றொரு கதையாக தேவேந்திர லோகத்தில் ஒரு நாள் இந்திரன் மனைவி இந்திராணி நெல் உலர்த்திக் கொண்டிருந்தாள் அதை ஒரு பசுமாடு வந்து தின்று கொண்டு இருந்தது இந்திராணி மாட்டை விரட்டி விரட்டி பார்த்தாள் மாடு மறுபடியும் மறுபடியும் நெல்லை தின்றது.

  chitrakupdan kovil
  chitrakupdan kovil

  கோபம் தாங்காத இந்திராணி மாட்டை விளக்குமாற்றால் அடித்தாள் மாட்டிற்கு கோபம் வந்தது இந்திராணி நான் கோமாதா என்றும் பாராமல் என்னை விளக்குமாற்றால் அடித்தாயே அதனால் உன் வயிற்றில் குழந்தை பிறக்காது என்று சபித்தது அதன்பிறகு மாடு வீட்டுக்கு சென்றது.

  மாட்டின் எஜமானிக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக முனிவர் ஒரு மாம்பழம் கொடுத்தார் அதை தின்ற பிறகு அவள் கொட்டையையும் தோலையும் மாட்டிற்கு போட்டாள் மாட்டிற்கு போட்டாள் அதைத் தின்ற மாடு சினை உற்றது பத்து மாதங்களில் கன்றுக்குட்டிக்கு பதிலாக ஆண் குழந்தையை ஈன்றெடுத்தது அதேசமயம் எஜமானிக்கும் ஒரு குழந்தை பிறந்தது இந்த இரண்டு குழந்தையும் எஜமானியம்மாள் கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வந்தார்.

  மாட்டின் குழந்தைக்கு சித்திரகுப்தன் என்று பெயர் வைத்தான். சித்திரகுப்தன் அறிவு நாளுக்கு நாள் மிளிர்ந்து கொண்டே போயிற்று. சித்திரகுப்தன் கணக்கில் பெரிய புலியாக விளங்கினார் எமதர்மராஜாவிற்கு பூலோகத்தில் இருந்து வரும் உயிர்களின் பாவ புண்ணியங்கள் கணக்கு எழுதி அவ்வப்பொழுது சொல்ல ஓர் ஆள் தேவைப்பட்டது.

  ஒரு நாள் எமதர்மராஜா சித்திரகுப்தன் வீட்டிற்கு வந்தார் சித்திரகுப்தன் அறிவைப் பார்த்து வியந்து போனார் உடனே அவரை தன்னுடைய என் மனதிற்கு கணக்கு பார்க்கும் வேலைக்கு அமர்த்தினார். அன்றிலிருந்து சித்திரகுப்தன் உயிர்களின் பாவ புண்ணியங்களை, யார் யார் என்ன செய்தார்கள் என்பதை கணக்கு எழுதி வருகிறார்

  இந்த சித்ரகுப்தனுக்கு சித்திரை மாத பௌர்ணமி விசேஷமானது என்று பெரியவர்கள் சித்திரகுப்தன் பூஜை செய்து நவதானியங்களை தான் கொடுப்பார்கள் அப்படி செய்தால் சாகும் பொழுது மரண அவஸ்தை ஏற்படாது இந்த சித்ரா பௌர்ணமி மகத்துவத்தை பற்றி பிரசித்தமான கதை ஒன்று உண்டு.

  chithra kupthan
  chithra kupthan

  முன்னொரு காலத்தில் அமராவதி என்ற ஒரு பெண்மணி இருந்தாள் அவள் பெரிய கோடீஸ்வரி அவள் ஏராளமான தான தருமங்கள் செய்தாள் அன்னதானம் ஸ்வர்ண தானம் பூதானம் கன்னிகாதானம் முதலிய தானங்களைச் செய்து ஏழை எளியவர்களுக்கு உணவும் உடையும் கொடுத்து ஆதரித்து வந்தார் அவள் செய்யாத பூஜையும் தானமும் திருவிழாவும் கிடையாது.

  ஆனால் சித்திரை பௌர்ணமி பூஜை செய்ய வேண்டும் என்று அவள் தெரிந்து கொள்ளவில்லை ஆகவே செய்யவில்லை ஒருநாள் அமராவதி இறந்து விட்டாள் அவள் உயிரை எம தூதர்கள் எமன் முன்னால் கொண்டு நிறுத்தினார்கள் சித்திரகுப்தன் பூலோகத்தில் செய்த புண்ணியங்களை எல்லாம் வாசித்துக் கொண்டே வந்தார் எல்லாம் முடிந்ததும் கடைசியாக கேட்டார் இவள் சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து இருக்கிறாளா? என்று கணக்குப் புத்தகத்தை புரட்டி பார்த்த சித்திரகுப்தன் இல்லை என்று மறுமொழி சொன்னார்.

  உடனே எமன் இவளைக் கொண்டுபோய் நரகத்தில் தள்ளுங்கள் என்று உத்தரவிட்டார் அதை கேட்ட அமராவதி நான் ஒரு பாவமும் செய்யவில்லையே எனக்கு ஏன் நரகம் என்று கேட்டாள். நீ சித்ரகுப்தனுக்கு பிரியமான சித்ரா பௌர்ணமி விரதத்தைக் செய்யத் தவறிவிட்டாய். அதனால் தான் என்றான் எமன் ஐயா எனக்கு மூன்றே முக்கால் நாழிகை உயிர் கொடுங்கள் சித்திரகுப்தன் விரதத்தை செய்து முடித்துவிட்டு வருகிறேன் என்றாள் அமராவதி.

  உடனே அவனும் அதற்கு சம்மதித்தாள் இறந்துபோன அமராவதி பிழைத்து எழுந்தார் அன்று சித்திரா பௌர்ணமி என்று தடபுடலாக பட்டினி இருந்து நோன்பு நோற்று தான தர்மங்கள் செய்து சித்திரா பௌர்ணமி விரதத்தை முடித்தாள் மூணே முக்கால் மணி ஆகிவிட்டது மறுபடியும் இறந்தாள்.

  எமன் முன்னால் போனதும் எமன் சித்ரகுப்தனைப் பார்த்து இவள் சித்ரா பௌர்ணமி விரதம் இருந்தாளா என்று கேட்டார். ஆமாம் என்றார் சித்திரகுப்தன். உடனே இவளை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார் அமராவதி சொர்க்கத்தில் இன்பமாக இருந்தாள் அவளுக்கு மறுபிறவி கிடையாது அமராவதியின் கதையைக் கேட்டபிறகு இந்திராணி சித்ரா பௌர்ணமி விரதம் இருந்தாள்

  அதனால் அவள் மாட்டை அடித்த பாவம் நீங்கி ஜெயந்தன் என்ற ஆண் குழந்தையும் ஜெயந்தி என்ற பெண் குழந்தையும் பிறந்தன.

  சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,339FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-