சட்டவிரோதமாக நடந்தவன் அரசனால் சிக்ஷிக்கப்படுவான் என்று முன் சொன்னோம். இதுபோல, புண்ய கர்மங்களைச் (நல்லகாரியங்களை) செய்தவர்களுக்கு இவ்வுலகில் அரசன் பயன் தருகிறதுண்டா? இல்லை. நல்ல காரியங்கள் பலனில்லாமல் போகுமா? போகாது, அவைகளுக்குப் பயன் தருவதற்காக ஈசுவரன் தயாராயிருக்கிறார்.
ஜோதிஷ்டோமயாகஞ் செய்கின்ற ஒரு மனிதனுக்கு அரசன் என்ன பயன் கொடுக்கின்றார்? ஈசன் அதற்குப் பலன் தருகின்றார். கியாதிக்காக ஒருவன் ஸத்கர்மஞ் செய்கின்றானென்றால், ஸத்காரியஞ்செய்த 25-வது நாள் அவன் இறந்து போவதாக நேரிடின், இந்த நற்காரியத்தால் வந்த கியாதியை அவன் எப்படிக்கேட்க முடியும்? நல்ல காரியம் செய்தவனும் கெட்ட காரியஞ் செய்தவனும் எங்கு போனாலும் ஸுகதுக்கப் பலனளிக்கின்ற ஈசுவரனை ஒப்புக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, இவ்வூரில் கடன் வாங்கிக்கொண்டு ஒருவன் பிரஞ்ச் (French) இலாகாவுக்குப் போய்விடுகிறான். புதுச்சேரி போனவர்களை ஸிவில் சட்டம் பாதிக்காது. பணத்தை எடுத்துக் கொண்டு மோசஞ்செய்த இந்த மனுஷ்யனுக்கு இவ்வுலகில் இப்பொழுது ராஜதண்டனை கிடைக்கவில்லை! அவன் இந்த ஊரில் வசிக்க முடியாமல் போனதே தக்கசிக்ஷையென்றால், அவன் தனது மனைவி மக்கள் முதலிய எல்லோரையும் கூட்டிக் கொண்டு புதுச்சேரிபோய் சௌக்கியமாயிருக்கிறானே! அந்த சிக்ஷை சரியானதா? அவன் செய்த தவறுக்குத்தகுந்த சிக்ஷை
வேண்டுமல்லவா? அதற்காகவே ஸர்வலோக சிக்ஷகனாக பகவான் இருக்கிறார்.
அந்த: ப்ரச்சந்நபாபாநாம் சாஸ்தா வைவஸ்வதோ யம:
மறைவாகச் செய்து குவிகின்ற பாவங்களுக்கெல்லாம் தண்டனை தருவோன் தர்மராஜன். எங்கு படிக்கிறோமோ அங்கு உத்யோகம் கிடைக்கின்றதா? படித்தல் என்ற காரியம் செய்யுமிடம் ஒன்று. உத்யோகம் (அதிகாரம்) என்ற பதவி கிடைக்குமிடம் வேறொன்று. எங்கு திருடினானோ அங்கு சிக்ஷை கிடைக்கிறதா? தண்டனை ஸ்தலம் வேறு இருக்கிறது. அதுபோல, ஒவ்வொன்றுக்கும் தர்மம் செய்யும் ஸ்தலம் வேறு உண்டு. அதுதான் ஸ்வர்க்கலோகம், நரகலோகம் என்பவை.
‘கர்ம’ (செய்கை) என்பது ஜடம். அறிவில்லாதது. நாமோ எல்லாவற்றையும் அறியாதவர்கள். “நமக்கு இன்னகாரியஞ் செய்தால் நல்லது, இன்னது செய்தால் கெடுதலாகும்” என்பது தெரியாது. அதனால் ‘கர்மா’ அதைச்செய்கின்ற ‘நாம்’ ஆகிய நம்மிருவரினும் மேலாக ஈசன் ஒருவன் வேண்டியது அவசியம்.
நாம் இவ்வுலகில் கண்ணால் பார்க்கின்ற நுட்பமான பொருள்களில் மிகவும் சிறியது தூசி. அந்த மண்தூசிகூட ஆகாயத்தில் தங்காமல் காற்றடிக்கப்பட்டு கீழே வந்து வீழ்கிறது. மழையடிக்கும்பொழுது மண்தூசி தங்குகிறதா? ஒரு மண்தூசி கூட தங்கமுடியாத ஆகாயத்தில் நிராதரமான இந்த பூமி எவ்விதம் தங்கி நிற்கிறது? பூமியை ஆதிசேஷனும், அஷ்டதிக்கு யானைகளும் தாங்கினும், அவைகளும் சேர்ந்து யாவும் ஆகாயத்திலல்லவா நிற்கின்றன? நாம் காண்கின்ற இந்த பூமி விசாலமான சமுத்திரத்தின் மீது மிதக்கின்றது. தண்ணீரில் நாம் ஒரு சிறு கல்லைப்போட்டாலும் அது அப்படியே போய் விடுகிறது. மேலே மிதப்பதில்லை.
ஸ்ரீராமன் சேதுவில் அணை கட்டினார் என்ற விஷயம் அவதாரமகிமையைப் பொருத்தது. மனுஷ்யனுடைய திருஷ்டியால் இங்கு யோசித்துப் பார்த்தால் தான் தெய்வமகிமை விளங்கும். இவ்வளவு காடுமலைகளுடன் அதிக்கனமான பூமியை சமுத்திரஜலத்தின் மேல் அமைத்து, அது கீழே மூழ்கிப் போகாமல் ஆகாயத்தில் நிற்பது என்றால், இதை ச்ருஷ்டித்த பகவானின் பெருமை எப்படிப்பட்டது?
நாம் உட்கார்ந்திருக்கின்ற இந்த பூமி கீழே போகாமல் பாதுகாப்பதும் சூரிய சந்திரர்களால் லோகம் நன்மையடைவதும் மற்றும் யாவும் ஸ்ரீ வாசுதேவனுடைய பராக்கிரமத்தால் நடக்கின்றவை.
த்யௌ: ஸசந்த்ரார்க்க நக்ஷத்ரம் கம் திசோ பூர்மஹோததி: வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந:|
இவைகளையெல்லாம் சிந்திக்கும்பொழுது இந்தப்
பிரம்மாண்டத்திற்கு ஆதாரவஸ்துவாக விளங்குவோனும், ஸகல ஜீவர்களாலும் செய்யப்படுகின்ற கர்மங்களுக்குத் தக்கபலனை தவறாமல் கொடுப்போனும் ஆகிய ஜகதீசுவரன் ஒருவன் மேலே இருக்கின்றார் என்று தெரிகிறது.
ஸூர்யோ ப்ராம்யதி
நித்யமேவ ககநே தஸ்மை நம: கர்மணே ||
“எதனால் சூரியன் ஆகாசமண்டலத்தில் தினந்தோறும் சஞ்சரிக்கின்றாரோ அவ்வித கர்மசக்தியின் பொருட்டு நமஸ்காரம்” என்றார் பர்த்ருஹரி. இந்த வாக்கும் பகவானுடைய பெருமையைக் காட்டும். நாம் யாவரும் ஜீவித்திருப்பது சூரியப்பிரகாசத்தால்தான். சூரியபிரகாசமில்லாவிடில், நாம் இருளில் இருக்கவேண்டியதாகும். இருள் வீட்டில் வசித்து பிழைப்பது எப்படி?
“இவரிடத்தினின்றும் பயந்துதான் வாயு வீசுகின்றான், சூரியன் உதயமாகின்றான்” என்ற உபநிஷத்தின் வாக்கியம் பகவானுடைய ஆக்ஞையையும், அவருடைய அதிகாரத்தின்படி நடக்க வேண்டிய அதிகார புருஷர்களுடைய செய்கையையும் காட்டுகின்றது. இதனால் ஸர்வஜகத்தையும் நியாமகம் (ஏவுதல்) செய்யும் ஈசன் ஒருவரிருக்கிறார் என்பது தெரியவரும்.