December 8, 2024, 9:52 AM
26.9 C
Chennai

ஆடியபாதம் அம்பலத்திறைவன்! தேடிச் சென்று வழிப்பட்ட முனிவன்!

natarajar
natarajar

இன்று சித்திரை திருவோணம் !

நடராஜரின் திருநடனத்தை காண்பதற்காக, பதஞ்சலிமுனிவராக மாறிய ஆதிசேஷன்

நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் பெரும்பேறினைப் பெற்றவர் பதஞ்சலி முனிவர். பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷன் தான் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் என்று புராணம் கூறும்.

ஒருசமயம் மஹாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தபோது, திடீரென்று அவரது கனம் அதிகரித்ததைக் கண்டு வியந்து அவரது முகத்தைப் பார்த்தார். ஆதிசேஷனின் ஐந்து திருமுகங்களும் மஹாவிஷ்ணுவின் திருமுக மண்டலத்தைப் பார்த்தவண்ணமிருந்தன.

மஹாவிஷ்ணு முகம் மலர்ந்து புன்னகை பூத்துக்கொண்டிருந்தார். “துயில் கொண்டிருக்கும் வேளையிலும் புன்னகைப்பதேன்?” என்னும் அடுத்த சந்தேகமும் ஆதிசேஷனுக்கு ஏற்பட்டது. “இதை எப்படி பகவானிடம் கேட்பது?” என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, “ஆதிசேஷா! என்ன என் முகத்தைப் பார்த்த வண்ணம் யோசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.

perumal
perumal

அதிசயித்த ஆதிசேஷன், “பகவான் துயில் கொண்டிருந்தாலும், எல்லாருடைய நிலையையும் அறிந்து அருள் பாலிப்பவரல்லவா” என்று தெளிந்து, “ஸ்வாமி, என் மீது துயில் கொண்டிருக்கும் தாங்கள், திடீரென்று கனப்பதற்குக் காரணமென்ன? மேலும், தாங்கள் முகம் மலர்ந்து புன்னகை புரிந்ததன் காரணத்தையும் இந்த அடியேனுக்கு அருள வேண்டும். தங்களுக்கு இடையூறு செய்ததற்கு பொறுத்தருள்க ஸ்வாமி” என்று பணிவுடன் வேண்டினார்.

அதற்கு மஹாவிஷ்ணு, “ஆதிசேஷா, தில்லையம்பதியில் ஆடலரசன் கூத்தபிரான் நடனமாடும் காட்சியைக் கண்டு ரசித்தேன்; மகிழ்ந்தேன்; புன்னகைத்தேன். அதனால் என்னுடல் சற்று கனத்துவிட்டது. அது இப்போது சமநிலை அடைந்திருக்குமே” என்றார்.

“ஆம் ஸ்வாமி. தாங்கள் அருளியதன் பொருளறிந்தேன் ஸ்வாமி. தாங்கள் கண்ட தில்லைக்கூத்தரின் திருநடனக்காட்சியை தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் கிட்ட தாங்கள் அருளவேண்டும்” என்று ஆதிசேஷன் இறைஞ்சினார்.

ALSO READ:  மழை வேண்டி உசிலம்பட்டி அருகே பெருமாள் கோயிலில் மாபெரும் அன்னதானம்!

“ஆதிசேஷா, அதற்கு நீ சில காலம் தவமியற்றினால் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும்” என்றார் திருமால். “தங்களை விட்டு என்றும் பிரியாமலிருக்கும் என்னால் எப்படி ஸ்வாமி தவம் மேற்கொள்ள முடியும்?”

“கவலைப்படாதே. நீ மாயஉருவம் கொள்ள அருள்கிறேன். தவம் மேற்கொள்” என்றார் மஹாவிஷ்ணு. மஹாவிஷ்ணுவின் அனுமதியுடன் அருளாசி பெற்ற ஆதிசேஷன் மாயத்திருவுரு கொண்டு தவமியற்றினார். பலகாலம் தவம் மேற்கொண்ட ஆதிசேஷன் முன் தோன்றிய ஈசன், “ஆதிசேஷா, எது குறித்து இத்தகைய கடுந்தவம்?” என்று கேட்டார்.

சிவபெருமானை நேரில் கண்டதில் பேருவகை கொண்ட ஆதிசேஷன், “ஐயனே, தங்களின் திருநடனத்தை இந்த அடியவன் காண அருள்புரிய வேண்டும்” என்று பணிந்தார்.

“உன் எண்ணம் நிறைவேறும். நீ பூலோகம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. காஸ்யப முனிவரும் கத்ருதேவியும் என்னை நோக்கித் தவமிருந்து, ஆதிசேஷனாகிய நீயே அவர்களுக்கு மகனாக அவதரிக்க வேண்டுமென்று வரம் கேட்டுள்ளார்கள். எனவே, பாம்பாக கங்கை வழியாகச் சென்று அவர்களுக்கு மகனாகப் பிறப்பாய். பதஞ்சலி என்று பெயர் பெறுவாய்.

pathanjali
pathanjali

யோக சாஸ்திரங்கள் பல கற்று, உலகிற்கு பல வியாக்கியானங்களை வழங்குவாய். நீ பதஞ்சலியாக அவதரித்ததும், நீ அவதரித்த வியாக்ரபுரத்தில் உன் வருகைக்காக புலிக்கால்களுடனும் புலிக்கைகளுடனும் வியாக்ரபாத முனிவர் காத்துக்கொண்டிருப்பார். அவருடன் சேர்ந்து என்னை வழிபட்டு, என் ஆனந்த நடனத்தை தரிசிப்பாய்” என்று அருளினார்.

ஆதிசேஷன், சிவனின் பாதம் வணங்கி ஆசிபெற்றார். பிறகு வியாக்ரபுரத்தில் காசிப முனிவருக்கும் கத்ருதேவிக்கும் மகனாக அவதரித்தார். அந்த நாள் பங்குனி மாத மூல நட்சத்திரம் என்று புராணம் கூறுகிறது.

ALSO READ:  திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம்? ஹிந்துக்கள் அதிர்ச்சி!

வியாக்ரபுரத்தில் அவதரித்த ஆதிசேஷன், பதஞ்சலி என்ற பெயருடன் விளங்கினார். அவருக்கு வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவரின் நட்பு கிடைத்தது. இருவரும் சேர்ந்து தில்லை வந்தார்கள். அங்கே, அவர்கள் விரும்பிய ஆனந்த நர்த்தனத்தைக்கண்டு மெய்ம்மறந்து நின்றார்கள்.

“ஐயனே, உம் ஆனந்த நர்த்தனத்தைக் காணும் பேறு பெற்றோம். தங்களின் திருநடனத்தை என்றென்றும் தரிசிக்கும் பாக்யம் கிட்ட அருளவேண்டும். மேலும், தங்களின் திருவடி தரிசனத்தை பக்தர்கள் யாவரும் காண வகை செய்யவேண்டும்” என்று பதஞ்சலியும் வியாக்ரபாதரும் வேண்டினார்கள்.

“உங்கள் பரந்த மனப்பான்மையை அறிந்து மகிழ்கிறோம். நீவிர் இருவரும் ஸ்ரீபுரம் செல்லுங்கள். (ஸ்ரீபுரம் என்பது திருவாரூர்). அங்கே எம் நடனங்களையும், எம் திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள்” என்று அருளினார் இறைவன்.

இறைவன் அருளியதுபோல் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள். அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமாகவே இருக்கவே, பதஞ்சலி தன் இடுப்புக்குக்கீழே பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் இடுப்புக்குக்கீழே புலிக்கால்கள் மற்றும் புலிவால் தோற்றத்துடன் சென்று அன்னை கமலாம்பாளை வழிபட்டார்கள்.

அம்பாள், அவர்கள் பக்தியைப் போற்றி, மண்ணால் லிங்கத்தை அமைத்து வழிபட அருளாசி வழங்கினாள். விமலாக்க வைரம் என்கிற அந்த தேவலோக மண்ணால் விளமல் என்ற இடத்தில் பதஞ்சலி லிங்கத்தை அமைக்க, இருவரும் வழிபட்டார்கள். அப்போது, சிவபெருமான் அங்கே காட்சி கொடுத்தார். இறைவன் அஜபா நர்த்தனம் ஆடும் போது தன் ருத்ர பாதத்தைக் காட்டினார். இந்தக் காட்சியை மஹாவிஷ்ணு, பிரம்மன், முசுகுந்த சக்கரவர்த்தி, தேவாதி தேவர்கள் என அனைவரும் கண்டு ரசித்தார்கள்.

பதஞ்சலி முனிவருக்கு, திருவாரூர் அருகிலுள்ள விளமல் திருத்தலத்தில் தியாகராஜர் ருத்ரபாத தரிசனம் காட்டிய தினம் பங்குனி உத்ரத் திருநாள் என்று புராணம் கூறுகிறது. சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்துநின்ற இத்தல சிவாலயத்தில், பதஞ்சலி முனிவருக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட்டால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பர்.

ALSO READ:  நவராத்திரி திருவிழா; முப்புடாதி அம்மன் திருவீதி உலா!

பதஞ்சலி முனிவர், நந்திதேவரிடம் உபதேசம் பெற்றார். அதன் விளைவாக யோக சூத்ரங்களையும், பாணினி சூத்ரத்திற்கு “பாஷ்யம்’ என்ற இலக்கண விவரங்களையும் மற்றும் பல நூல்களையும் இயற்றினார்.

விளமல் திருத்தலத்தில் பங்குனி உத்திரத் திருநாளில் பாத தரிசனம் கண்டதுபோல, பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் ஈசனுக்குரிய திருவாதிரைத் திருநாளில் ஆண்டவனின் திருநடனத்தைக் கண்டு பேறுபெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.

ஸ்ரீ நடராஜரின் தாண்டவத்தின்போது பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இருபக்கங்களிலும் நின்று வணங்கி, சிவதாண்டவத்தில் முழுவதுமாகக் கலந்தார்கள். பதஞ்சலி முனிவர் சமாதி அடைந்ததாக சில திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று திருப்பட்டூர் ஸ்ரீ ப்ரம்மபுரீஸ்வரர் கோவில். இவ்வாலயத்தில் ப்ரம்மன் சந்நிதிக்கு அருகில் பதஞ்சலி சமாதி உள்ளது. தவிர, ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் கோவிலில் மூன்றாவது பிராகாரத்தில் பதஞ்சலி முனிவர் சமாதியும் தனிச்சந்நிதியும் உள்ளது. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலிலும் பதஞ்சலி சமாதி உள்ளதாகக் கூறப்படுகிறது.

பல திருத்தலங்களில் சிவபெருமானின் திருநடனத்தை தரிசித்த பதஞ்சலி முனிவர், பல யோகக்கலை நூல்களையும், சூத்ரங்களையும் இயற்றியபின் வைகுண்டம் சென்று, தன் மாய உருவினைக் களைந்து மஹாவிஷ்ணு எடுத்த ஒவ்வொரு அவதாரத்திலும் அவருக்குத் துணையாகச் செயல்பட்டார் என்று புராணம் கூறுகிறது.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week